திங்கள், 31 அக்டோபர், 2022

போர்ச்சுகல் நாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்.. ரியல் எஸ்டேட், விசா, குடியுரிமை..!

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு ஏற்றார் போல் இக்காலகட்டத்தில் உலகில் பல நாடுகள் முதலீட்டு அடிப்படையில் குடியுரிமை சேவையும், வாய்ப்புகளையும் அதிகரிக்கத் துவங்கியது.
இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பல தனிநபர் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு வெளிநாட்டுக் குடியுரிமை பெற மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
கொரோனாவுக்குப் பின்பு பணக்காரர்கள், முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், முதலீட்டு வங்கியாளர்கள் எனப் பலர் வெளிநாட்டில் குடியுரிமை வாங்குவதை முக்கியமான விஷயமாகக் கருதுகின்றனர். ஸ்டார்ட்அப் வெற்றி மூலம் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எதற்காக வெளிநாட்டில் குடியுரிமை..?
இந்தியாவைக் காட்டிலும் சிறப்பாகக் கிடைக்கும் வர்த்தக வாய்ப்பு, உயர் தர கல்வி, உயர் தர மருத்துவம், மேம்பட்ட வாழ்க்கை சூழ்நிலை எனப் பல வகையில் வெளிநாட்டுக் குடியுரிமை பயன்படும் காரணத்தால் மிகவும் ஆர்வமுடன் இந்திய குடியுரிமை விடுத்து வெளிநாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர்.

போர்ச்சுகல்
அந்த வகையில் போர்ச்சுகல் நாட்டில் 50க்கும் அதிகமான சொத்து மதிப்புடைய இந்தியர்கள் 3.5 லட்சம் முதல் 6 லட்சம் யூரோ வரையிலான தொகையை முதலீடு செய்து கடந்த 18 மாதத்தில் லிஸ்பென் மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் வீடு, அப்பார்ட்மென்ட் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் முதலீடு
போர்ச்சுகல் நாட்டில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்து ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு வாரம் என அடுத்த 5 வருடத்திற்குத் தங்கினால் குடியுரிமை பெற தகுதி அடைய முடியும். இது பிற வழிகளைக் காட்டிலும் எளிய வாழியாகப் பணக்காரர்கள் பார்க்கிறார்கள்.

கோல்டன் விசா
போர்ச்சுகல் நாட்டின் கோல்டன் விசா அதாவது சொத்து முதலீட்டு வாயிலாகப் பெறப்படும் விசா-வை பெற இந்தியர்கள் ஓரே நேரத்தில் மொத்த பணத்தையும் அனுப்பாமல் ரிசர்வ் வங்கி அளிக்கும் LRS திட்டத்தின் வாயிலாக ஒரு வருடத்திற்கு 250000 டாலர் அளவிலான தொகை பல்வேறு பகுதியாகச் செலுத்துகின்றனர்.

ஐரோப்பா
ஐரோப்பாவில் வாழ்க்கை துவங்க பிற நாடுகளை ஒப்பிடுகையில் போர்ச்சுகல் சிறப்பானதாக உள்ளது குறிப்பாகக் கல்வி, சுகாதாரப் பிரிவில் இந்தியர்களுக்கு மிகவும் ஏதுவாக விளங்குகிறது. ரியல் எஸ்டேட் முதலீட்டை முடித்து மொத்தமாகச் சொத்துக்களைக் கைப்பற்றிய பின்பு தான் விசா-வுக்கான அனுமதி கிடைக்கும்.

முகேஷ் அம்பானி
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி மும்பையில் பிரம்மாண்ட வீட்டில் சகல வசதிகளைக் கொண்டு இருந்தாலும், இந்தியாவில் கொரோனா தொற்று மோசமான நிலையை அடைந்த போது குடும்பத்துடன் பிரிட்டன் நாட்டுக்குச் சென்றார்.

ஸ்டோர்க் பார்க்
இது மட்டும் அல்லாமல் லாக்டவுன் முடிந்த பின்பு லண்டனுக்கு அருகில் உள்ள பிரிஸ்டோல் பகுதியில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து ஸ்டோர்க் பார்க் என்ற 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்த வீட்டை வாங்கி மும்பையில் இருக்கும் அன்டாலியா வீட்டுக்கு இணையான ஆடம்பரத்தை கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது.

மறுப்பு
இந்த நிலையில் முகேஷ் அம்பானி இனி வரும் காலத்தில் இந்தியாவை விடவும் பிரிட்டனில் தான் அதிகப்படியான நேரம் குடியிருப்பார், இது 2வது வீடு மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி குடிபெயர வாய்ப்பு அதிகமாக உள்ளது என செய்திகள் வெளியான போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதை மறுத்தது.

அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரை
இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி அமெரிக்கா, துபாய் எனப் பல நாடுகளில் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறார். இது மட்டும் அல்லாமல் சிங்கப்பூரில் முகேஷ் அம்பானி தனது குடும்ப நிறுவனத்தை ரியல் எஸ்டேட் பிரிவில் சமீபத்தில் துவங்கினார்.

கருத்துகள் இல்லை: