BBC எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி : பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட அந்த இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இருந்த கொடூரமான செய்தியால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள்,
2014ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தண்டனையை உறுதி செய்தது.
ஆனால், கடந்த திங்கள்கிழமையன்று அதற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்றம் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த ஆண்களை விடுத்தது.
அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கு “உறுதியான மற்றும் தெளிவான சான்றுகள்” இல்லையென்று கூறியது.
“2022ஆம் ஆண்டின் இந்தியாவில் நீதி இப்படித்தான் இருக்கும்,” என்று ட்விட்டரில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மனச் சோர்வைடைந்த அந்தப் பெண்ணின் தந்தையுடைய ஒளிப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மத கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளானது மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் மாநில அரசின் சமீபத்திய உத்தரவுடன் இந்தத் தீர்ப்பை சிலர் ஒப்பிடுகின்றனர்.
அந்த பெண்ணின் தந்தை என்னிடம் “நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சில நிமிடங்களில் பொய்த்துப் போனது” என்று கூறினார்.
“நாங்கள் நீதிக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யும் என்றும் என் மகளைக் கொன்றவர்கள் இறுதியாகத் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் நம்பினோம்,” என்று அவர் கூறினார்.
19 வயதான அந்த பெண், தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா என்ற கீழ்நடுத்தர வர்க்க கிராமப்புறத்தில் வசித்து வந்தார். ஜனவரி 2012இல் அவர் தலைநகரின் புறநகர்ப் பகுதியான குர்காவுனில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருந்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் பாலியல் வல்லுறவு எதிர்ப்பு ஆர்வலர் யோகிதா பயானா, “அவர் தனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார்,” என்கிறார்.
பிப்ரவரி 9, 2012 அன்று இரவு அந்த பெண் மூன்று நண்பர்களுடன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சிவப்பு நிற காரில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்
நான்கு நாட்களுக்குப் பிறகு சித்ரவை செய்யப்பட்ட அறிகுறிகளோடு அவருடைய பாதி எரிந்த, கொடூரமாகச் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த குற்றம் இந்தியாவில் தலைப்புச் செய்தியானது.
விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு மிகவும் கடுமையானது என்று அரசு தரப்பு வாதிட்டது.
குற்றம் நடந்த இடத்தில் மூன்று ஆண்களில் ஒருவரின் பணப்பையைக் கண்டுபிடித்ததாகவும் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினரை உடல் கிடந்த இடத்திற்கு அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை மீட்க உதவியதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
கைப்பற்றப்பட்ட காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரத்தக் கறை, விந்து மற்றும் முடி ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் குற்றம்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களும் வாகனத்தில் இருந்ததை நிரூபித்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றம் அந்த நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை “வேட்டையாடிகள்” என்று உயர்நீதிமன்றம் அழைத்தது.
ஆனால் கடந்த திங்கட்கிழமையன்று, 40 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு, நீதிபதி பேலோ திரிவேதியால் எழுதப்பட்டது. அது, அரசு தரப்பு முன்வைத்த ஆதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியது:
- “காவல்துறையின் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் பல இருப்பதாக” நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
- கடத்தல்காரர்களுடன் சண்டையிட முயன்ற ஓர் ஆண் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நண்பர்களால், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
- “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் ஆவணங்களைக் கொண்ட காரின் பம்பர், பணப்பை போன்ற கண்டுபிடிப்புகள்” பற்றிய டெல்லி காவல்துறையின் கூற்று, குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட முதல்கட்ட ஒளிப்படங்களில் காணப்படவில்லை.
- முதலில் சம்பவ இடத்திற்கு வந்த ஹரியானா போலீசார், தங்கள் அறிக்கையில் இந்த விஷயங்களைக் குறிப்பிடவில்லை.
- புலனாய்வு அதிகாரியின் பறிமுதல் குறிப்பில் பொருட்கள் குறிப்பிடப்படவில்லை.
- போலீசாரால் மீட்கப்பட்ட கைபேசி, உண்மையில் அனாமிகாவுடையதா என்பதை உறுதிசெய்ய பெண்ணின் தந்தைக்குக் காட்டப்படவில்லை.
- போலீசாரால் கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற காரில் குற்றச் செயல் இடம்பெற்றது தான் என்பதும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
- கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் கேள்விக்குரியவை.
- குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை விசாரிக்காதது “சந்தேக மேகத்தை” உருவாக்கியது.
காரிலிருந்து எடுக்கப்பட்ட தடயங்கள், கைப்பற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதியன்றே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றம் கூறியது.
“இத்தகைய சூழலில், தடயவியல் ஆதாரங்கள் சேதப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை நிராகரிக்க முடியாது,” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
“கொடூரமான குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போனால், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒருவித வேதனையும் ஏமாற்றமும் ஏற்படக்கூடும்” என்பதை ஒப்புக்கொண்ட உத்தரவில், “அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகள், மிகவும் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய முடிவு
டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கு தொடுத்த அந்த பெண்ணின் குடும்பத்தின் தரப்பு வழக்கறிஞர் சாரு வாலி கன்னா என்னிடம் கூறினார்.
“இந்தத் தீர்ப்பு மிகவும் தெளிவற்றது. இது இந்த உயர்-தொழில்நுட்ப சிக்கல்களை எழுப்புகிறது. ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால், அது காவல்துறையை குற்றம்சாட்டவில்லை,” என்று அவர் கூறினார்.
“உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று உத்தரவு கூறுகிறது. ஆனால், அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான பல ஆதாரங்களை நீதிபதிகள் புறக்கணித்தனர்.”
பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றும் அந்த பெண்ணின் தந்தை, திங்கட்கிழமை இரவு பணி முடிந்து நேராக நீதிமன்றத்திற்குச் சென்றதாகக் கூறினார்.
தீர்ப்பு வாசிக்கப்படும்போது பெற்றோருடன் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த பயானா, அவர்கள் உணர்ந்த கோபம் மற்றும் ஏமாற்றத்தைப் பற்றிப் பேசினார்.
“நான் மனம் உடைந்துவிட்டேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனவே பெற்றோர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நீங்கள் இதிலிருந்து கற்பனை செய்யலாம்,” என்று அவர் என்னிடம் கூறினார்.
இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று தனக்கு “ஒரு சதவீதம் கூட பயம் இருக்கவில்லை” என்றும் நீதிக்கான அவர்களின் போராட்டத்தில் இதுதான் “முடிவு” என்றும் அந்தக் குடும்பத்திற்கு உறுதியளிப்பதாகவும் பயானா கூறினார்.
“எங்களைச் சுற்றி அனைத்துமே சரிந்துவிட்டது. இந்த உத்தரவைப் பற்றி வழக்கறிஞர் எனக்கு செய்தி அனுப்பியபோது, என் முதல் எதிர்வினை அவநம்பிக்கையாக இருந்தது. நான் செய்தியைத் தவறாகக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”
உச்சநீதிமன்றத்திற்கு விசாரணை பற்றி கவலை இருந்தால், அவர்கள் வழக்கை மீண்டும் தொடங்கலாம். மற்றொரு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம் அல்லது வழக்கை மத்திய காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என்று பயானா கூறுகிறார்.
“உண்மை என்னவென்றால், ஓர் இளம் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதிமன்றம் ஏதாவது ஒரு தீர்வை வழங்க வேண்டும்,” என்று கூறுகிறார்.
“வானத்திலிருந்து வந்த மின்னலால் நான் தாக்கப்பட்டது போல உணர்கிறேன்,” என்று உயிரிழந்த பெண்ணின் தந்தை கூறினார். அவர் நடுக்கத்துடன் காணப்பட்டார்.
“உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது? பத்து ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்குச் சந்தேகமே வரவில்லை. பிறகு எப்படி அனைத்தும் திடீரெனப் பொய்யானது?,” என்று அவர் கேட்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக