செவ்வாய், 8 நவம்பர், 2022

தமிழ்நாடு புதிய விண்வெளி பாதுகாப்பு தொழிற்கொள்கையில் சாதிக்குமா? - BBC News தமிழ்

bbc.com   -   முரளிதரன் காசி விஸ்நாதன்  -நாளையை நோக்கி இன்று - தலைநிமிர்ந்த தமிழ்நாடு எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு.
வானூர்தித் துறையிலும் பாதுகாப்புத் தளவாடத் துறையிலும் முதலீடுகளை ஈர்ப்பதையும் உற்பத்தியைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் துறைகளுக்கான பிரத்யேகமான தொழிற்கொள்கையை இரண்டாவது முறையாக வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் கொள்கைகள் எப்படிப் பலனளிக்கும்?


தமிழ்நாடு அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கான கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் இந்தத் தொழிற்கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அடுத்த பத்தாண்டுகளில் இந்தத் தொழில்துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதையும் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிப்பதையும் இலக்காகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தொழில்துறை என்பது தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில்துறை அல்ல.  ஏற்கனவே Heavy Vehicles Factory, Engine Factory Avadi (EFA), Combat Vehicles Research & Development Establishment (CVRDE), Ordnance Factory Trichy (OFT), Heavy Alloy Penetrator Project (HAPP), Taneja Aerospace, Titan Engineering and Automation Ltd உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் பாதுகாப்புத் துறைக்கான பொருட்களை இங்கே உற்பத்தி செய்து வருகின்றன.

இருந்தபோதும், 2019ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்பாதை என்ற திட்டத்தை இந்திய அரசு அறிவித்த பிறகு இந்தத் துறையில் மாநில அரசின் கவனம் திரும்பியது.

ஏற்கெனவே தொழிற்சாலை அமைந்துள்ள இடங்கள், உதிரி பாகங்கள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து இடங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்பாதைக்கான இடங்களாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு, 21 மாவட்டங்களில் பாதுகாப்புத் தொழில்துறைக்கான தொழிற்சாலைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிப்பது, கவச வாகனங்கள் டேங்க்களைத் தயாரிப்பது, விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பு, ஏவுகணை, ராக்கெட், வெடி மருந்து தயாரிப்பு, சென்சார்கள், ரடார்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு, சிறிய ரக ஆயுதங்கள், ரைஃபிள்கள், கப்பல் கட்டுதல் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த கொள்கையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பல துறைகளில் ஏற்கனவே உதிரி பாகங்கள் தயாரிப்பு, மூலப் பொருள் தயாரிப்பு போன்றவை தமிழ்நாட்டில் நடந்துவருகிறது.

இந்த விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக அடுத்த பத்தாண்டுகளில் ஐந்தாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது.

ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமான தயாரிப்புக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும் எனக் கருதப்படுவதால் பாதுகாப்பு தொழிற் வழித்தடத்தில் ட்ரோன் ஆராய்ச்சி, தயாரிப்பு, சோதனை போன்றவற்றுக்கென அதிநவீன, பிரத்யேக பரிசோதனைத் தளத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விமான தொழில்துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மூன்றாவது பெரிய விமான தொழில்துறை இந்தியாவில்தான் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, விமான ஓட்டிகளுக்கான பயிற்சிப் பள்ளிகளை தமிழ்நாட்டில் பெரிய அளவில் உருவாக்க அரசு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர பல்வேறு விதங்களில் முதலீட்டிற்கு உதவி, வரிச் சலுகை, அனுமதிகளைத் தாமதமின்றி அளிப்பது போன்ற உதவிகளையும் செய்வதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை மீது கவனம் செலுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
கர்நாடகாவுக்கு மாற்றாகும் தமிழகம்

"இந்தத் தொழில்துறை தற்போது வெகுவேகமாக வளர்ந்துவரும் துறையாக இருக்கிறது. ஆகவே நிறைய வாய்ப்புகள் இந்தத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன.

குறிப்பாக, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் துறைகளில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால்தான் இதில் கவனம் செலுத்துகிறோம்.
இத்தனை ஆண்டுகளாக விமான தொழில்துறை என்றால் பெங்களூரில்தான் உதிரிபாகங்கள் உற்பத்திசெய்யப்படும் இனி இங்கேயே அதனைச் செய்வார்கள்" என்கிறார் தங்கம் தென்னரசு.

ஆளில்லா விமானங்கள் துறையில் தமிழகத்திற்கு மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் அமைச்சர்.
"விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் ட்ரோன்கள் மிகப் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரப்போகின்றன. விரைவிலேயே, ட்ரோன் பைலட்களுக்கான பயிற்சி மையங்களைத் துவங்கவிருக்கிறோம். ஆகவே இதில் பெரிய அளவு வாய்ப்பு நமக்கு இருக்கிறது" என்கிறார் அவர்.

விரைவிலேயே கோவையில் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பூங்கா ஒன்று அமையவுள்ளது.
"கோவையில் ஏற்கனவே பல பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களுக்கான உதிரிபாகங்களை வழங்கிவருகின்றன. ஆகவே, துல்லியமான பொறியியல் பாகங்களை உற்பத்தி செய்யும் துறை ஏற்கனவே வளர்ந்து வருகிறது. இந்தப் புதிய கொள்கை மேலும் ஊக்கமளிக்கும்" என்கிறார் தங்கம் தென்னரசு.

தமிழ்நாட்டில், பாதுகாப்பு உபகரணங்களுக்கான பயிற்சி மற்றும் சோதனை மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டில் விமானங்களப் பழுதுபார்க்கும் இடங்கள் கிடையாது. அவற்றை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவை அமையும்பட்சத்தில் OEM எனப்படும் பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு வெளியிட்டிருப்பது இரண்டாவது விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழிற்துறை கொள்கை. இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டிலேயே முதல் கொள்கை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"சிறு, குறு தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருவதில் முந்தைய கொள்கையிலிருந்து தற்போதைய கொள்கை வேறுபட்டு நிற்கிறது" என்கிறார் தங்கம் தென்னரசு.

இந்தியாவில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறையில் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும் என நம்பும் நிலையில், அந்த வளர்ச்சியின் பெரும் பகுதியை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு நினைக்கிறது.
வேறு சில மாநிலங்களும் இந்த வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாலும், தமிழ்நாட்டின் முக்கியமான பலம் அதன் மனிதவளம் என்கிறார் அவர்.

"எல்லா மாநிலங்களிலும் இடம், சலுகைகள் ஆகியவற்றைக் கொடுப்பார்கள். ஆனால், இங்கே உள்ள மனித வளத்தில் உள்ள தொழில்நுட்ப அறிவு தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்" என்கிறார் தங்கம் தென்னரசு.
 

கருத்துகள் இல்லை: