புதன், 9 நவம்பர், 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல- அமைச்சர் சேகர்பாபு!

 மாலைமலர் : சென்னை   இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கேள்வி: அறநிலையத்துறையின் மூலம் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளின் தற்போதைய நிலை மற்றும் புதிய பள்ளிகள் தொடங்கப்படுமா?
பதில்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு கொடுத்திருந்தோம். அதில் 4 கல்லூரிகளை தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதம் 6 கல்லூரிகளை தொடங்குவதற்கு அந்தந்த கோவில்களில் அறங்காவலர்களை நியமித்து, கல்லூரி கல்வி இயக்ககத்தில் அனுமதி பெற்று, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து மற்ற கல்லூரிகளை தொடங்கலாம் என நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு இருக்கின்றோம். ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்ற 3 கல்லூரிகளுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில் கல்லூரிக்கு அறங்காவலர்களை நியமிக்க இருக்கின்றோம். புதிய பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துகின்ற அவசியம் தற்போது எழவில்லை.

கேள்வி: சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் அறநிலையத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது குறித்தும்

பதில்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யாரும் தடையாகவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். தவறுகள் எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. சிதம்பரம் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, மன்னர்களால், நம்மை ஆண்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.

அந்த கோவில் வருகின்ற வருமானங்களை முறையாக கணக்கு கேட்கின்ற பொழுது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்றபோது அதற்கு பதில் சொல்வதும் அவருடைய கடமை. கோவில் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி இருக்கின்றார்கள்.

இப்போது எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத்துறையின் கடமையாகும். அதேபோல அத்திருக்கோயிலுக்கு மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட, வழங்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களுடைய நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை.

ஆகவே எங்களுடைய பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால் அதற்கான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறையை பொறுத்தளவில் எந்த விதமான அத்துமீறலும், அதிகாரம் செய்யவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் நியாயத்தின்படி நடக்கச் சொல்லி தான் உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

கேள்வி: சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான இடமா?

பதில்: அந்த இடத்தை பொறுத்தளவில் முழுக்க அரசினுடைய இடம். இருந்தாலும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை கொண்ட ஒரு குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையும் தந்திருக்கின்றது. தற்போது நகைகள் சரி பார்க்கின்ற பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே விசாரணை தொடர்வதால் முழு விளக்கத்தையும் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது இருந்தாலும் அந்த கோவில் இடம் அரசுக்கு சொந்தமான இடம்.

கேள்வி: இந்து சமய அறநிலையத்துறையும், அதன் அமைச்சரும் எல்லையைத் தாண்டி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்: நாங்கள் எல்லையைத்தாண்டி வரவில்லை. அப்படி இருந்து சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறோம். குறைகள் இருந்தால் அதை நிறைவு செய்ய தயாராக இருக்கின்றோம். எல்லை தாண்டி எப்பொழுதுமே நாங்கள் செல்வதற்கு எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் அனுமதிக்க மாட்டார். இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற மாநிலம். சட்டத்திற்குட்பட்டு தான் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

கேள்வி: கோவில்களை இந்துக்கள் தான் நிர்வகிக்க வேண்டும். அரசு நிர்வகிக்கக் கூடாது என இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளது குறித்து?

பதில்: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றுகின்ற அனைவருமே இந்துக்கள் தான். அப்படி என்றால் இந்துக்கள் தான் கோவில்களை நிர்வகிக்கிறார்கள் இதில் கேள்வி எழுப்ப அதற்கு என்ன இருக்கின்றது. அவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை தூக்கி வீசுவதற்கு ஆதலால் ஏதாவது ஒன்றை இப்படி சம்பந்தமே இல்லாமல் அதில் எள்ளளவும் நியாயம் இல்லாமல் கருத்துக்களை கூறுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை புனரமைப்பது ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கழித்தும் திருப்பணி நடைபெறாத கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது, ஏற்கனவே கும்பாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலம் தொடர்ந்து திருப்பணிகள் நிறைவேறாமல் இருக்கின்ற கோவில்களை புனரமைப்பது, கோவில்களில் ஓடாமல் இருக்கின்ற தங்க தேர்களை ஓட வைப்பது, திறக்காத வாயில் கதவுகளை திறக்க வைப்பது போன்றவைதான் இத்துறையின் பயணமாகும். கோவில்களில் பணியாற்றுகின்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளை பாதுகாப்பதைதான் தனது பயணத்தில் மேற்கொண்டு இருக்கிறோம். இதை எங்களுடைய கடமைகளாக செய்கிறோமே தவிர அரசியலுக்கு எள்ளளவும் இதற்கு இடமில்லை.

கேள்வி: இந்து சமய அறநிலையத்துறையில் இதுவரை எவ்வளவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன?

பதில்: இதுவரை சுமார் 3700 கோடி ரூபாய் அளவிற்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். குறிப்பாக வாடகை வசூல் நிலுவையில் இருந்த ரூபாய் 200 கோடி இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: