செவ்வாய், 8 நவம்பர், 2022

முதல்வர் ஸ்டாலின் மூன்றரை மணி நேரம்தான் தூங்குகிறார் . முதுகு வலி வேறு.. அமைச்சரவை அதிரடி மாற்றம்?

 tamil.oneindia.com -  Shyamsundar :  சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம், இதற்கான பேச்சுக்கள் தொடங்கி உள்ளதாக செய்தி ஒன்று கோட்டை வட்டாரங்களில் வட்டமடிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் இந்த வருட தொடக்கத்தில் தீவிரமாக இருந்தன. அதன்பின் கடந்த மே மாதம் திமுகவின் ஒரு வருட ஆட்சி முடிந்ததும்,
அந்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரம் அடைந்தன. கடந்த 2 -3 மாதங்களாக தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக வட்டமடித்து செய்தி என்றால் அது அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திதான்.
அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட போவதாக செய்திகள் வட்டமடித்தன.
முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின.
இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இதில் பல விதமாக யுகங்களும் வட்டமடித்து வந்தன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.


இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இலாக்கா மாற்றம்
இளம் எம்எல்ஏக்களான டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. முக்கியமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர் மாற்றம் தொடர்பாக முக்கியமான செய்தி ஒன்று கோட்டை வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது காய்ச்சலும், முதுகுவலி பிரச்சனையும் அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

சிகிச்சை
முதுகு வலி காரணமாக சமீபத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூக்கமும், போதிய அளவில் ஓய்வும் வேண்டும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்திருந்தனர். இப்போது ஓய்வுதான் முக்கியம். முடிந்த அளவு ரெஸ்ட் எடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், முதல்வரால் ஓய்வு எடுக்கமுடிவதில்லை. அரசு பணிகளையும் கட்சி பணிகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறார்.

தூங்கும் நேரம்
அந்த வகையில், தினமும் இரவில் அவர் தூங்கச் செல்ல நள்ளிரவு 2 மணி ஆகி விடுகிறது. 2 மணிக்கு உறங்கச் செல்பவர் விடியற்காலை 5:30-க்கெல்லாம் எழுந்து விடுகிறார். இதற்கு முன் உடல்நிலை சரியாக இருந்த போது அவர் பின்பற்றிய அதே கால நேரத்தைதான் இப்போதும் பின்பற்றுகிறாராம். உடல்நிலை இதற்கு சமயங்களில் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அதே நேரத்தைதான் பின்பற்றி வருகிறாராம். அந்த வகையில் தினமும் மூன்றரை மணிநேரம் தான் தூங்குகிறார் ஸ்டாலின்.

இரவு வரை பணிகள்
நள்ளிரவு வரை பணிகளை கவனிக்கும் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களிடம் பேசிவிட்டுத்தான் படுக்கைக்கு செல்கிறார். கடந்த ஒரு வாரமாக சீனியர்களிடம் அவர் பேசும் போது, அமைச்சரவையை மாற்றியமைக்கலாமா என்கிற விசயங்கள் அவரது பேச்சில் பட்டும் படமால் அடிபடுகிறது. குறிப்பாக, சீனியர், ஜூனியர் உட்பட 6 அமைச்சர்கள் மீது வருத்தமாக பேசியிருக்கிறார். சில மூத்த அமைச்சர்கள் பற்றியும் ஸ்டாலின் இதில் பேசி இருக்கிறாராம்.

அமைச்சரவை மாற்றம்
முக்கியமாக தற்போது அமைச்சராக இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு மூத்த எம்எல்ஏவை அமைச்சரக்காலமா என்றும் அவர் யோசிக்கிறாராம். அமைச்சர் ஒருவரை, அந்த முக்கிய பொறுப்பில் அமர வைக்கலாம் என்று அவர் திட்டமிட்டு உள்ளாராம். இதுமட்டுமல்லாமல், திமுகவின் சீனியர் மா.செ.க்கள் சிலர் மீதும் ஆதங்கப்பட்டுள்ளார் முதல்வர் என்கிற தகவல்கள் திமுகவின் மேலிட தொடர்பாளர்களிடமிருந்து கிடைக்கிறது.

சீனியர்கள்
கடந்த முறையே அமைச்சரவை மாற்றம் வரை ஏற்பாடுகள் நடந்து பின்னர் கைவிடப்பட்டது. இந்த முறை மீண்டும் அதற்கான பேச்சுக்கள் எழுந்துள்ளன. அமைச்சரவை மாற்றம் குறித்து அடிக்கடி சீனியர்களிடம் ஸ்டாலின் ஆலோசிப்பதும், பிறகு அதனை கைவிடுவதுமாக அவர் இருப்பதால்... அமைச்சரவை மாற்றம் குறித்து திமுகவில் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. அதிர்ச்சியும் இருப்பதில்லை. நடக்கட்டும் ; நடந்தால் பார்க்கலாம் என்கிற மனநிலையில்தான் உடன்பிறப்புகள் ஓடிக்கொண்டிருக் கிறார்கள்.

கருத்துகள் இல்லை: