திங்கள், 7 நவம்பர், 2022

ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?


 tamil.asianetnews.com - Raghupati R :  திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 01. 11. 2022-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் அனுமதி பெற 13 ரவுடிகள் ஆஜர்படுத்தபட்டனர்.
அவர்கள் தரப்பு வழக்கறிஞர் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று வாதத்தை முன் வைத்தார். முக்கியமாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி நேரில் ஆஜராகி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேண்டுமென கடந்த 01.11.2022ம் தேதி அன்று நீதிபதி சிவக்குமாரிடம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை மாற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இன்று (07. 11. 2022) 13 பேரில் ( லெப்ட் செந்தில்) கடலூர் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 12 பேரில் சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 8 பேர் நீதிமன்றத்திற்க்கு வந்தனர். (பாலிகிராப் சோதனை) உண்மை கண்டறியும் சோதனை எந்த வகையில் நடத்த போய்கிறார்கள் (SIT), என்ன கேள்விகள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ரவுடிகள் தரப்பு வழக்கறிஞர் வாதமிட்டனர்.

அனைத்து ரவுடிகளும் தங்களது வழக்கறிஞர் மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதி சிவக்குமார் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை 14. 11. 2022ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் சிறப்பு புலனாய்வு குழு எஸ். பி ஜெயக்குமார்.

அப்போது பேசிய அவர், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அது இன்று விசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் அனைத்து மனுக்களையும் சரியான முறையில் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் ரவுடிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் சரியான மனு தாக்கல் செய்யவில்லை என பொய் கூறுகிறார்கள் என்று கூறினார்.

உண்மை கண்டறியும் சோதனை பட்டியலில் உள்ள சத்யராஜின் வழக்கறிஞர் அலெக்சியஸ் சுதாகர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ராமஜெயம் கொலை வழக்கு தாமதமாவதற்கு காரணம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தான். நாங்கள் தான் முதலில் உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்வதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கான ஆவணங்கள் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

மேலும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால், 50 லட்ச ரூபாய் சன்மானம் என்று அறிவித்தது எப்படி? இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் பனீந்திர ரெட்டியிடம் விளக்கம் கேட்க உள்ளோம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பாலிகிராட் சோதனை செய்யப்படுகிறது. இதற்கு நாங்கள் ஆட்சேபனம் மனுவை தாக்கல் செய்யவில்லை. நாங்கள் குற்றமில்லாதவர்கள் என்பதை நிரூபிக்க அனைத்து சோதனைக்கும் தயார்.

ஆனால் எந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது என்பதை சிபிசிஐடி தெளிவாக குறிப்பிடப்படவில்லை.  சந்தேகிக்கப்படும் நபர்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் பொழுது ஒரு வழக்கறிஞரும், மருத்துவரும் எங்கள் தரப்பில் அனுமதிக்க வேண்டுமென கூறியுள்ளோம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: