வெள்ளி, 28 ஜனவரி, 2022

நெட்ஃபிளிக்ஸ்: "கோடிகளை போட்டோம், லாபம் இல்லை" கவலையில் தலைமை

  சௌதிக் பிஸ்வாஸ்  -     BBC -இந்திய நிருபர்  : 2018ஆம் ஆண்டு 'சேக்ரட் கேம்ஸ்' மூலம் ஒரு தாக்கத்தை உருவாக்கியது நெட்ஃபிளிக்ஸ். இந்த சீரிஸ், ஒரு விறுவிறுப்பான கேங்க்ஸ்டர் கதை.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடந்த உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் அடுத்த 100 மில்லியன் சந்தாதாரர்கள் "இந்தியாவில் இருந்து வருவார்கள்" என்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ரீட் ஹேஸ்டிங்ஸ் அவ்வளவு உற்சாகமாக இல்லை. கடந்த வாரம், முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் வெற்றிபெறவில்லை என்று வருத்தமாக பேசியுள்ளார்.
"நாம் முக்கிய சந்தைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றோம் என்பது நல்ல செய்தி. இந்தியாவில் நாம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதுதான் நம்மை விரக்தியடைய வைக்கும் விஷயம். ஆனால், நாம் நிச்சயமாக இங்கு நிலைத்திருப்போம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவின் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஸ்ட்ரீமிங் சந்தையானது சுமார் 100 மில்லியன் சந்தாக்களால் உருவாக்கப்பட்டது என்று மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா என்ற மீடியா கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, இங்கு செயல்பட்டு வருகிறது.

தொழில்துறை மதிப்பீடுகளின் படி, 5.5 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்களுடன், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமர் அதன் முக்கிய போட்டியாளர்களான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (46 மில்லியன்) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (19 மில்லியன்) ஆகியவற்றை விட பின்தங்கியுள்ளது.

2018ஆம் ஆண்டு, 'சேக்ரட் கேம்ஸ்' என்ற இணையத் தொடர் மூலம் ஒரு தாக்கத்தை உருவாக்கியது, நெட்ஃபிளிக்ஸ். இது ஓர் அதிரடியான கேங்க்ஸ்டர் கதையாகும்.

பாலிவுட்டின் பிரபல நடிகர்களைக் கொண்டு, இந்தியாவின் இரண்டு சிறந்த திரைப்பட இயக்குநர்கள் உருவாக்கிய இந்த நேர்த்தியான த்ரில்லருக்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது.

"முந்தைய பிரபல இந்தி திரைப்பட நடிகர்கள், ஹாலிவுட் தரம் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பில்லியன்கள் இணைந்து, "எதிர்காலம் இருப்பதை நெட்ஃபிளிக்ஸின் முதல் சொந்த தயாரிப்பு தொடர் நிரூபித்ததாக, 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகை பாராட்டியது.

ஆனால், அது உண்மையில் அப்படி மாறவில்லை. இந்தியா ஒரு பரந்த பொழுதுபோக்கு சந்தையாகும். 200 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருக்கின்றன.

மேலும், தொலைக்காட்சி சந்தா கட்டணமாக, ஒரு மாதத்திற்கு 4 டாலர்கள் என்ற அளவில் குறைவாக உள்ளது. திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் செய்திகள் ஆகியவை பெரும்பாலான நுகர்வோர் பொழுதுபோக்குக்காக இங்கு தொடர்ந்து செயல்படுகின்றனர்.

5.5 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்களுடன், நெட்ஃபிளிக்ஸ் அதன் முக்கிய போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளது.

உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களும் அதிகமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கராரான பங்கு வர்த்தகரை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர் இணையத் தொடர் 'ஸ்கேம் 1992'. கடந்த ஆண்டு சோனிலைவ் ஒ.டி.டி தளத்தில் அந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. அது விரைவாக பரவலாக பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியது.

வன்முறை மற்றும் கடும் சொற்கள் கொண்ட கதைக்களம் உள்ள த்ரில்லர்கள் வரவேற்ப்பை பெறுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை, இந்தியர்கள் பொதுவாக வீட்டில், குடும்பங்களுடன் டிவியில் பார்க்காத ஒன்று. "வாடிக்கையாளர்கள் பணம் மற்றும் நேரத்திற்கான மதிப்பை விரும்புகிறார்கள்," என்கிறார் முன்னணி தயாரிப்பு நிறுவனமான அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் மல்ஹோத்ரா.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களை கவர நெட்ஃபிளிக்ஸ் கடுமையாக முயற்சித்துள்ளது. இது தன் திட்ட சந்தா விலைகளை 60% வரை குறைத்துள்ளது. அலைப்பேசியில் மட்டும் மாதாந்திர சந்தாவின் விலை இப்போது 149 ரூபாய் ($2). இந்நிறுவனம், 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்க 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீட்டை செய்துள்ளது. அதில், 30க்கும் மேற்பட்ட இந்தி மொழிப் படங்களும் நிகழ்ச்சிகளும் உள்ளடங்கும்.

அவற்றில் பலவும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Netflix and india
ஆர்மேக்ஸ் என்ற ஊடக ஆலோசனை நிறுவனத்தின் கணிப்பு படி, கடந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட முதல் 15 இந்தி மொழி ஓ.டி.டி நிகழ்ச்சிக்களில், நெட்ஃபிளிக்ஸின் ஒரே ஒரு நிகழ்ச்சி (கோட்டா ஃபேக்டரி - கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணையத் தொடர்) மட்டுமே உள்ளது.

ஒரு ரியாலிட்டி டேட்டிங் தொடரான, 'இந்தியன் மேட்ச்மேக்கிங்', சமீபத்தில், திருமணம் பற்றிய எள்ளி நகையாடும் தொடரான 'டீகப்ல்ட்' போன்ற நிகழ்ச்சிகள் ஒரு சலசலப்பை உருவாக்கிறது.

ஆனால், பெரும்பாலும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இணைய தொடர்களான, ஸ்க்விட் கேம், மனி ஹீஸ்ட் மற்றும் நர்கோஸ், போன்றவற்றுடன் தொடர்பு படுத்தியே இந்த நிறுவனம் அறியப்படுகிறது.

"நெட்ஃபிக்ஸ் ஒரு விலையுயர்ந்த சேவையாகக் கருதப்படுகிறது. அந்நிறுவனம் இப்போதும் அந்நியமாகவே பார்க்கப்படுகிறது," என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் திரைப்பட விமர்சகரும் கட்டுரையாளருமான சுப்ரா குப்தா கூறுகிறார்.

நெட்ஃபிளிக்ஸ் போட்டியாளர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். முக்கியமாக, டிஸ்னி+, அதன் விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் செழித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சந்தையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உட்பட மாபெரும் நிகழ்வுகளின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை இந்தச் சேவை கொண்டுள்ளது.

பத்து இந்திய மொழிகளில் வியக்கத்தக்க பரந்த அளவிலான நிகழ்ச்சிகளை அமேசான் பிரைம் வீடியோ வழங்குகிறது. அதன் அதிரடி தொடரான ஃபேமிலி மேன் கடந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட இந்தி இணையத் தொடராகும். 'மிர்சாபூர்' என்ற கிராமப்புறத்தை பின்னணியாகக்கொண்ட அதிரடி தொடர், நாடு முழுவதும் வெற்றி பெற்றது.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான இணையத் தொடரில், பிரைம் வீடியோ தளத்தின் த்ரில்லர் தொடரான, மிர்சாபூர் ஒன்றாகும்.
நெட்பிளிக்ஸ்
ஆர்மேக்ஸ் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஷைலேஷ் கபூர் கருத்துப்படி, பிரைம் திரைப்படம் விரும்பும் பார்வையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்குகிறது: இந்திய மொழிகளில் பெரும் வெற்றிப்பெற்ற படங்களில் சுமார் 40% இந்த சேவைக்கு சொந்தமானது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல், நியூசிலாந்தில் விளையாடப்படும் கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அமேசானில் ஷாப்பிங் செய்யும் வசதிகளுடன் சந்தாதாரர்களுக்கு இந்த சேவை வருகிறது. நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ரியாலிட்டி டிவி, ஆவணப்படங்கள் என பிரைம் அதன் உறுப்பினர்களுக்கு மற்ற எட்டு சிறிய ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதன் முகப்புப் பக்கத்தில், அனைத்துக்கும் ஒரே கட்டணமாக பயன்படுத்த வழங்குகிறது.

இத்துறை வல்லுநர்கள் கூறுகையில், நெட்ஃபிளிக்ஸ் மில்லியன் கணக்கான டாலர்களை குவித்து, அதன் உலகளாவிய வெற்றிக்கு உதவிய "சர்வதேச வியாபார உத்தியை" இந்தியாவில் பயன்படுத்த பரிசீலித்து வருகிறது. திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் உருவாக்க, பாலிவுட்டின் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், தயாரிப்பாளர்களுடனும் இந்த நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இது தலைப்புச் செய்திகளை மட்டுமே உருவாக்கியது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். "இந்த படைப்பாளிகள் எவருக்கும் இணையத் தொடர் உருவாக்கிய அனுபவம் இல்லை. மேலும் அவர்களில் பெரும்பாலோர் தோல்வியடைந்தனர்," என்று பெயர் வெளியிட விரும்பாத துறை நிர்வாகி ஒருவர் என்னிடம் கூறுகிறார்.

மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் துணைத் தலைவர் மிஹிர் ஷா, "நெட்ஃபிக்ஸ் அதன் பிராந்திய தொடர்களை வழங்குவதில், மேலும் ஆழமாகச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் புதிய உள்ளடக்கத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

இந்தியாவில் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து தாங்கள் தயாரித்தவை குறித்து "பெருமை" ஆக நினைக்கிறோம் என நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது.

"நாங்கள் நாடகம் முதல் நகைச்சுவை, த்ரில்லர்கள், காதல், புனைகதைகள் என அனைத்து வகைகளிலும் சிறந்த கதைகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்." என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

மேலும் "நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகளில் முதலீடு செய்து, பல்வேறு மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்ற நோக்கில் நெட்ஃபிளிக்ஸ் செயல்பட்டு வருகிறது", என்று அவர் மேலும் கூறுகிறார். கடந்த மாதம், இந்த நிறுவனம் மின்னல் முரளி என்ற மலையாள மொழியின் சூப்பர் ஹீரோ திரைப்படத்தை வெளியிட்டது. இது ஒரு விமர்சகரின் கூற்றுப்படி, மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு பாடம் கற்றுத்தரும் படமாக உள்ளது.

இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தை, தொழில்துறை மதிப்பீடுகளின்படி, 2026 ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது என்பது நெட்ஃபிளிக்ஸ் பரந்த அளவிலான உள்ளடக்கங்களை அளிக்க வேண்டும். இதனை வேறுவிதமாகக் கூறினால், மேலும், நுட்பமாக செயல்பட வேண்டும்.

அது எளிதாக இருக்காது. இந்தியாவில் ஏற்கனவே 75க்கும் மேற்பட்ட ஸ்ட்ரீமிங் சேவைகள் உள்ளன. சில வெற்றி பெற்றன; பல தோல்வி அடைந்தன. கடந்த ஆண்டு ஸ்ட்ரீமிங் சேவைகளில், இந்திய மொழிகளில் தொடங்கப்பட்ட 225 நிகழ்ச்சிகளில் - அவற்றில் 170 இந்தி மொழியில் உள்ளன - 15-20 மட்டுமே வெற்றி பெற்றன என்கிறார் கபூர்.

"ஒவ்வொருவரும் அதன் அளவு அடிப்படையில் தயாரித்து வருகின்றனர்; பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். ஆனால், நினைவில் வைத்து கொள்ளுங்கள், இந்தியா ஒரு சிக்கலான சந்தையாகும்." என்று முடிக்கிறார் அவர்.

கருத்துகள் இல்லை: