செவ்வாய், 25 ஜனவரி, 2022

“புருஷ சூக்தம்”பற்றிய எனது அடுத்த பதிவு இது... Dhinakaran Chelliah :

May be an image of text that says 'பிரம்மாவின் காலில் உருவான பூமியை வணங்கும் நீங்கள், அதை விட்டுவிட்டு தலையிலிருந்து உருவான சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என ஏன் ஆசைப்படுகிறீர்கள்?, அதையே பிறவியின் குறிக்கோளாகவும் ஏன் எண்ணுகிறீர்கள்?!'

Dhinakaran Chelliah  : “புருஷ சூக்தம்”பற்றிய எனது அடுத்த பதிவு இது.
கொஞ்சம் விரிவான பதிவு,சாதிப் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் தயவு செய்து வாசிக்கவும்.
“புருஷ ஸூக்தம்” பற்றிய வியாக்யான நூல்களில் முக்கியமானது,
ஶ்ரீ உ.வே.K.ஶ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி அவர்கள் எழுதிய “புருஷ ஸூக்த வ்யாக்யானம்”  நூல். இவர் “ஶ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம்”
எனும் மாதப் பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய மற்ற நூல்களும் உண்டு.
“எவனொருவன் ஸாங்கமாக வேதாத்யனம் செய்த ப்ராஹ்மணனை அடைந்து,பணப்பாட்பட்டு அவனைக் கொன்றானோ,அவன் ஜலத்தில் நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்தைப் படிக்கக் கடவன்” என நூலின் ஆரம்ப பக்கங்களில் உள்ளது.


யஜூர் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் பகுதியை அதன் முக்கியத்துவம் கருதி தனியாக “புருஷ ஸூக்த வ்யாக்யானம்”நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார். இந்த நூலில் உள்ளவற்றில் சில முக்கியமான பகுதிகளைக் கீழே தருகிறேன்;
13.ப்ராஹ்மணோஸ்ய முக மாஸீத் பாஹு ராஜந்ய: க்ருத:
ஊரூ தத ஸ்ய யத் வைச்ய: பத் ப்யாம் சூத்ரோ அஜாயத
ப்ராஹ்மணன் இவருடைய முகமானான். கைகள் க்ஷத்ரியனாகச் செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள் வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன் உண்டானான்.
(ப்ராஹ்மணோஸ்ய...) முகம் ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப்படுகிறது. ‘பாதங்களிலிருந்து சூத்ரன் உண்டானான்' என்று கடைசியில் சொல்லப்படுகிறபடியால் இங்கும் முகத்திலிருந்து ப்ராஹ்மணன் உண்டானான் என்றே தாத்பர்யம். ப்ராஹ்மணன் அதிகமான ஞானத்தை உடையவனாதலால் ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும் உடையதான முகத்தினின்றும் அவனைப் படைத்தார். (பாஹூ...க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன் உண்டானான். யுத்தம் செய்வதைத் தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத் தோள் வலிமையும் கைவன்மையும் அவச்யமாதலால் ப்ரஹ்மதேவன் அவனைத் தன் கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார். (ஊரூ...வைச்ய:) உழுதலையும் வியாபாரத்தையும் தொழிலாகவுடைய வைச்யனுக்குத் துடைபலம் முக்யமாதலால் நான்முகன் அவனைத் தன் துடைகளி லிருந்து படைத்தார். (பத்ப்யாம்...) பாதங்களினின்றும் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த சூத்ரன் உண்டானான். முதல் மூன்று
வர்ணத்தவர்களுடைய ஏவல்களைச் செய்வதே ஸ்வதர்மமாகவுடைய சூத்ரனுக்குக் கால்வன்மை அவச்யமாதலால் பிரமன் தன் கால்களிலிருந்து அவனைப் படைத்தார்.
இதிஹாஸ புராணங்களில் பலவிடங்களில் நாராயணனுடைய முகம், கைகள், துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும் உண்டானதாகச் சொல்லப்பட்டிருக்க இங்கு நான்முகனின் அவயவங்களிலிருந்து அவர்கள் உண்டானதாகச் சொல்லுவது எப்படிப் பொருந்தும்? என்ற ஸந்தேஹம் ஏற்படுகிறது. பிரமனை சரீரமாகக்கொண்ட புருஷோத்தமனே இப்படிப் படைப்பதாலும், நான்முகனுடைய அவயவங்கள் நாராயணனுடைய
அவயவங்களேயாகையாலும் இதில் ஒரு விரோதமுமில்லை.
இந்தப் புருஷஸுக்தம் முழுவதும் தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில் படிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நான்கு ஜாதிகளும் ஸ்ருஷ்டிகாலத்திலேயே தனித்தனியாகப் படைக்கப்பட்டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம். நவீன காலத்தில் சிலர் வேதங்களில் ஜாதி சொல்லப்படவில்லையென்றும்,புராணங்களி லேயே ஜாதிப்பிரிவினை சொல்லப்பட்டிருக்கிறதென்றும் கட்டுரைகள் எழுதுவது இதனால் நிராகரிக்கப்பட்டது.
கீதையிலும் பகவான்,
"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச:" [குணம், தொழில் முதலியவைகளில் பேதங்களுடன் கூடிய நான்கு வர்ணங்களும் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச் செய்திருக்கிறார்.
ஜனஸமூஹத்தினுடைய முகஸ்தானமாயிருக்கும் ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும் உண்டாயிற்று. முகத்தில் ஞானேந்த்ரியங்களான கண், மூக்கு, நாக்கு, செவி,மெய் (தோல்) என்னும் ஐந்தும் இருக்கின்றன. "ஸர்வேந்த்ரியாணாம் நயநம் ப்ர தாநம்" என்று எல்லா இந்த்ரியங்களிலும் முக்கியமானதாகச் சொல்லப்படும் கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷப்ரமாணமாகிறது. படைக்கப்பட்ட பொருள்களைப் பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும் ஜீவனையும், படைப்பவனான ஈச்வரனையும் அறிகிறோம். அம்மாதிரியே ப்ராஹ்மணர்களும் தீர்க்கதர்சிகளாகவும், ஜீவாத்ம பரமாத்மதத்வஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக் கண் போன்றும் விளங்குகிறார்கள். கண்ணிற்கு அடுத்தபடியான மேன்மைவாய்ந்தது காது. சப்தராசியான வேதமும் கர்ணபரம்பரை யாகவே வந்தது. "பஹுநா ச்ருதேந" என்கிறபடி பலரிடம் கேட்டுப் பரமாத்மஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது. ரஸனேந்திரியம் ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப் போஷிப்பதற்கும் ரஸனேந்திரியம் அவச்யம், "ஸ்வதோஹம் ஆத் யம் கலு தர்மஸாத நம்" [தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்.) என்று சொல்லப் பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம் (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம். சந்தனம் முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ச்வாஸம் விடுவதற்கும் மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால் ஏற்படும் உணர்ச்சியை அறி விப்பது த்வக் (தோல்) என்னும் இந்த்ரியம்.
தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம் புருஷோத்தமன் விஷயத்தில் ஈடுபடுத்துபவர்களாகையால் ப்ராஹ்மணர்கள் முகத்தினின்றும் உண்டானார்கள். கர்மேந்த்ரியங்களில் ப்ரதானமான வாயும் முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின் வாக்குவன்மையையும் சாபானுக்ரஹஸாமர்த்யத்தையும் காட்டுகிறது.''ஸர்வேஜநா: ஸுகிநோ பவந்து" என்றும் அச்யுதனால் படைக்கப்பட்ட அவனியி லுள்ளோர் எல்லோரும் ஸுகமாயிருக்கவேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணனுடைய தொழில் என்று உணர்த்தப்படுகிறது.
வேதாத்யயனத்திற்கும் வேதத்தை ஓதுவிப்பதற்கும் யஜ்ஞம் முதலியவைகளைப் பண்ணிவைப்பதற்கும் வாய் உபயோகப்படுவ தாகையால் இவைகள் அவனுடைய தொழில்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. முகம் புத்தி (மூளை)யையும் தேஜஸ்ஸையும் உடையதாதலால் ப்ராஹ்மணன் புத்திமானாகவும், ப்ரஹ்மதேஜஸ்ஸை உடையவனாகவும் இருப்பான் என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால் ப்ராஹ்மணன் எனப்படுகிறான். ராஜாக்களுக்கு மந்த்ரியாகவும் ஆசார்யனாகவும் இருந்து புத்திமதியும் உபதேசமும் செய்பவன் ப்ராஹ்மணன். இவ்வளவு கார்யங்களையும் செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன் பிரமனின் முகத்திலிருந்து உண்டானான். ப்ராஹ்மணர்களுடைய தேஹகுடும்பஸம்ரக்ஷணங்கள் ராஜாக்களால் நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால் முன்காலத்தில் அவர்கள் தங்கள் தொழிலை சரியாகச்செய்துவந்தார்கள். ஆசார்யர்கள் காலத்தில், ராஜாங்கம் பரதேசிகள் கையில் அகப்பட்ட போதிலும், ப்ராஹ்மணர்கள் உஞ்சவ்ருத்தி செய்தாவது தங்கள் தொழிலைச் செய்துவந்தார்கள். கலியின் கோலாஹலத்தினாலும், பல வித அஸௌகர்யங்களாலும், இப்போது ப்ராஹ்மணர்கள் தங்கள் தொழிலைவிட்டுப் பல தொழில்களிலும் புகும்படி நேரிட்டிருக்கிறது. சில பாக்யவான்கள் இக்காலத்திலும் வைதிகமார்க்கத்திலிருந்து கொண்டு பணப்பேயாட்படாமல் முறைதவறால் இருந்துகொண்டு வருகிறார்கள்.
கர்மேந்த்ரியங்களுள் வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மையுடைய க்ஷத்ரியன் பிறந்தான். தேஹம் கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவதுபோல் ஜனஸமூஹமும் க்ஷத்ரியனுடைய தோள்வலியினால் ரக்ஷிக்கப்படுகிறது. ராஜாக்களில்லாவிடில் உலகம் அராஜகமாகி அழிந்துவிடும். அதனாலேயே அரசனுக்குத்  திருமாலின் அம்சம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லாரும் உண்டு ஜீவிப்பதற்கு அவச்யமான உணவுப் பொருள்களை உண்டாக்குவதையும் பலருக்கு வினியோகிப்பதையும் தொழிலாகவுடைய வைச்யன் துடையிலிருந்து உண்டாக்கப்பட்டான். வைச்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ.எல்லாருடைய தேஹத்தையும் போஷிப்பது வைச்யனுடைய தொழில்.
இம்மூவர்ணத்தார்க்கும் வேண்டிய உபகரணங்களை ஸம் பாதித்துக் கொடுப்பதற்காக ஆடி ஓடித் திரிந்து நடந்து கார்யம் செய்பவனாகையால் சூத்ரன் காலிலிருந்து படைக்கப்பட்டான். கால்கள் சரீரத்தைத் தாங்குவதுபோல் அவன் இம்மூவர்ணத்தாரையும் தாங்குகிறான். காலிலிருந்து உண்டானதால் ஓருவிதமான தாழ்வும் கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும் வணங்கும் துறையாகும். மற்ற வர்ணத்தார்க்குள்ள நியமநிஷ்டை கள், ஆசாரவ்யவஹாரங்கள் முதலிய கஷ்டங்கள் இவர்களுக்குக் கிடையாது. சொன்னதைச் செய்வதில் பாபமும் கிடையாது; பொறுப்பும் கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்
ஸுலபமாகும். பிறப்பினாலேயே அவர்களுக்கு நைச்யமும், அஹங்கார மமகாரமில்லாமையும் ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும் உயர்ந்த வர்ணத்தார்க்குப் பிறப்பினாலேற்படும் அஹங்கார மமகாரங்கள் அழியவேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள். "தொழு மினீர் கொடுமின் கொண்மின்” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்வதிலும், அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதிலும் தடையில்லை என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும் அருளியிருக்கிறார்.
போதனம், ரக்ஷணம், போஷணம், ஸேவகம் என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும் தொழிலாகும். ஒவ்வொருவரும் மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள். நால்வரும் பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கிடை யாது. அவர்கள் ஒருவர்க்கொருவர் சண்டையிடுவது சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதையொக்கும். வயிறுடன் மற்ற அவயவங்கள் சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்தது.
நமது ஸ்நாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் ஐந்து. நடுத்தூண் ச்ருதிஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள் முதலியவையும் அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்களின் கோவில்களுமேயாகும். ஜாதி, ஸ்த்ரீகள், சொத்து, சுதந்திரம் ஆகிய நான்கும் மற்ற தூண்களாகும். இவைகளைக் காப்பாற்றுவதே
அரசர்களின் கடமையென்று பாரதத்தில் ராஜதர்மத்தில் பரக்கப் பேசப்பட்டிருக்கிறது.
பிறப்பையும் புத்தியிருப்பதையுமே குற்றமாகக்கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும், பாடசாலைகளில் படிக்கவிடாமலும் ப்ராஹ்மணர்களை த்வேஷிப்பது எல்லோரும் அறிந்ததே. ப்ராஹ்மணர்கள் க்ருஷ்ணனையே கதியாகக் கொண்டவர்கள். க்ருஷ்ணனும் ப்ராஹ்மணோ மம தேவதா" [ப்ராஹ்மணன் என்னுடைய தேவதை] என்று அருளிச்செய்தார். ஆகையால் ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வத்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும் பயந்துகொண்டிருந்தோம். அம்மாதிரியே ப்ராஹ்மணத்வேஷத்தில் ஆரம்பித்த ஒரு சாரார் தெய்வத்வேஷத்திற்குக் கொடிகட்டிக்கொண்டு கதறுகிறார்கள். ஜாதியென்பது அவரவர் கர்மானுகுணமாக பகவந் நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர் பண்ணிய புண்ய பாபத்தின் பலனேயாகும். 'மேலைத்தவத்தள வேயாகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகும் குணம்" என்றல்லவோ சொல்லப்பட் டிருக்கிறது.
பேதமென்பது இயற்கையின் சட்டமாகும். அதை ஒழிப்பதென்பது மனிதனால் முடியாத முயற்சியே. ஓருவிதமாக ஒழிக்கப்பார்த்தால் மற்றொரு விதமாக முளைக்கும். பழைய பேதத்திற்குப் பழகியிருக்கிறோம். 'அபேதம்' என்பதினாலேற்படும் புது பேதங்கள் படுவிஷத்தைக் கக்குமேயொழிய வேறொரு குணமும் காணக்கிடைக்காது.
ஆகையினால் சீர்திருத்தக்காரர்கள் முன் இருப்பதை மாற்றுவதற்கு முன் பின்வரும் கெடுதல்களைப்பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும். இதைப்பற்றிப் பரக்கப்பேசில் பாரதமாம். விரிவிற் கஞ்சி இத்துடன் விடுத்தோம்.
*******************************************
இந்த நூலில் பிராமணர்களின் அருமை பெருமைகளை ஐந்து பக்கங்களுக்கு விவரித்துவிட்டு,இறுதியில்
“நால்வரும் பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கிடை யாது.”
என சனாதனிகள் வழக்கமான பாணியில் கூறும் சமாதானத்துடன் முடிக்கிறார்.
ஆசிரியரிடமும்,சனாதனிகளிடமும் கேட்க வேண்டிய கேள்விகள்;
1.சூத்திரன் காலில் பிறந்தான் என்றாலும்,அவயங்களில் கால் என்பது மற்ற அவயங்களைப் போன்றே முக்கியமானது,அவயங்களுக்குள் பேதமில்லை என்கிறார் ஆசிரியர். ஐயா, ஒருவர் காலில்லாமல் உயிர் வாழலாம், கைகள் இல்லாமல் வாழலாம் ஆனால் தலையில்லாமல் வாழ இயலாதே?!
2.பிரம்மாவின் மனதிலிருந்து சந்திரனும்,கண்ணிலிருந்து சூரியனும்,முகத்திலிருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினார்கள்,நாபியிலிருந்து அந்தரிக்ஷம் எனும் அந்தர உலகத்தையும்,தலையிலிருந்து சொர்க்கமும்,பாதங்களிலிருந்து பூமியும் உண்டானதாக புருஷ சூக்தம் கூறுகிறது.பாத த்திலிருந்து பூமி உண்டானது என்பதால் பூமி கீழானதா?! என்கின்றனர் சனாதனிகள்.
இதே கேள்வியை, ஜடாயு புனைப்பெயரில் எழுதும் (தமிழ் ஹிந்து பத்திரிக்கை) கட்டுரையாளரும் எழுப்பியிருந்தார்.நாம் கேட்க விரும்புவது,
பிரம்மாவின் காலில் உருவான பூமியை வணங்கும் நீங்கள், அதை விட்டுவிட்டு தலையிலிருந்து உருவான சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என ஏன் ஆசைப்படுகிறீர்கள்?, அதையே பிறவியின் குறிக்கோளாக ஏன் எண்ணுகிறீர்கள்?!
 பூமியை வணங்கும் நீங்கள், அதை விட்டுவிட்டு தலையிலிருந்து உருவான சொர்க்கத்திற்கு ஏன் போக வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், அதையே ஏன் பிறவியின் குறிக்கோளாக எண்ணிச் செயல்படுகிறீர்கள் என்பதே.
வேத நூல்களில் வர்ண பாகுபாடுகளைப் பற்றிய குறிப்பு இல்லையென்று சனாதனிகள் சொல்லுவது முற்றிலும் பொய்யானது, வேத நூல்களின் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில்….
May be an image of text

கருத்துகள் இல்லை: