புதன், 16 மே, 2018

ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு

ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு? - நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்மாலைமலர் :கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்தாகவும், நாளை காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனை, ஆங்கில ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதும் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: