புதன், 16 மே, 2018

நடிகையர் திலகம் எனப்படும் ஒரு மகாநதி

கேபிள் சங்கர் -மின்னம்பலம்:
சிறப்புக் கட்டுரை: உண்மையின் பங்கு என்ன?நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்டபோதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாக அதில் நடிப்பவர்கள் பற்றித் தெரியவர, கீர்த்தி சுரேஷ்தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்துக் கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான தேர்வு என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும்போது அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஏறி இறங்கிய அத்துணை சம்பவங்களையும் சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாக நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும் என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது.

ஏனென்றால் பயோ பிக் வகைப் படங்களில் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு அதைக் கையாளும் லாகவம் தெரிந்த இயக்குநர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களைக் காட்டவே முடியாது. இந்திய அளவில் சென்சார் ஆன படத்துக்கு எந்த மூலையிலிருந்து எதிர்ப்பு வருமென்று யாருக்கும் தெரியாது. ஆளும் அரசின் ஆதரவுடன் துண்டு துக்கடா கட்சிகள்கூடப் பிரச்சினையைப் பெரிதாக்கி, ஊதிப் பெருக்கி, பட வெளியீட்டைத் தடுக்க முடிகிற நாடு இது.

தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அவர்களின் அரசியல் வாழ்வைப் பற்றி வேண்டாம், அவர்களது திரையுலக வாழ்க்கையைப் பற்றி எடுத்தால்கூட அதை அரசியலாக்கி, பஞ்சாயத்துச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதையெல்லாம் மீறி மணிரத்னம் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரை அடிப்படையாய் வைத்து எடுத்த இருவர் படத்துக்கு வந்த எதிர்ப்பு எல்லோரும் அறிந்ததே. தன்னைப் பற்றிய படம் என்பதை அறிந்து அதில் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்று ஒன்றுக்கு நான்கு முறை பார்த்து விசாரித்தே கலைஞர் அனுமதித்தார் என்றும் கூறுவார்கள்.
இப்படியான ஒரு மாநிலத்தில் பயோ பிக் என்பது கத்தி மேல் நடப்பதுபோல. அதிலும் மக்கள் மனதில் இன்றைக்கும் நல்ல பெயரோடு இருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியைப் பற்றி எனும்போது இன்னும் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகத்தான் செய்தது. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை எனும்போது அதில் ஜெமினி கணேசனைப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனென்றால் அவரின் ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் மிக முக்கியக் காரணமான கேரக்டர் ஜெமினி.

ஜெமினி ஒரு திறந்த புத்தகம். அதனால் அவர் குடும்பத்திலிருந்து பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால், இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பாகக்கூடத் தனது மகள் வயதுடைய ஒரு பெண்ணை பகிரங்கமாக அறிவித்து திருமணம் செய்துகொண்டவர் அவர். ஆனால், சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு சினிமா உலகங்களையும் அதில் கொண்டுவந்தே தீர வேண்டும். சொந்த வாழ்க்கை என்று வரும்போது அவரது பொருளாதாரத் தாழ்வுக்கு மிக முக்கியமான காரணம், அவரது குடிப் பழக்கம். அதற்குக் காரணம் நிஜ வாழ்வில் ஜெமினிக்கும் அவருக்குமிடையே ஆன பிரிவு. பின்பு சாவித்திரிக்கும் சந்திரபாபுவுக்குமிடையே ஆன உறவு அதன் மூலம் அதிகமான குடிப் பழக்கம் போன்றவற்றைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.
ஆனால், இந்தத் திரைப்படத்தில் தமிழக சினிமாவில் அவர் கோலோச்சிய விஷயங்கள் பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை. இரண்டு மொழிகளில் எடுக்கப்படவிருக்கிற படம் என்று அறிவித்திருந்தாலும், கடைசியில் தமிழில் வரும்போது டப்பிங் படமாகவே வெளிவந்திருக்கிறது. அதனால்தான் சிவாஜி பற்றிப் பேசும்போது பாசமலர் காட்சியை ரீ கிரியேட் செய்து மட்டுமே காட்டியிருக்கிறார்கள். நாகேஸ்வரராவைப் பற்றிப் பேசியிருக்கும் அளவுக்கு என்.டி.ராமாராவைப் பற்றிப் பேசவில்லை. கடைசியாக சங்கரய்யா என்பவரைத் தேடிப் போனார் என்று கதை ஆரம்பிக்கும்போது ஒருவேளை சந்திரபாபுவைத்தான் அப்படி மாற்றி வைத்திருக்கிறார்களோ என்றுகூட நினைத்தேன். ஒருவேளை சந்திரபாபுவுக்கும் சாவித்திரிக்குமான உறவு குறித்துக் காட்டினால் சாவித்திரியின் மீதுள்ள புனித பிம்பம் குறைந்துவிடும் என்கிற பயம் காரணமாய்க்கூட இயக்குநர் அதைத் தொடாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இதெல்லாம் சின்னஞ்சிறிய குறைகளாகவே எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் ஒருகட்டத்துக்குப் பிறகு படம் பார்க்கும் பார்வையாளர்கள் சாவித்திரியின் வாழ்க்கையோடு ஒன்ற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதைத் திரையரங்கில் கேட்கும் “உச்” கொட்டும் சத்தமும், மிகுந்த அமைதியுமே சாட்சி. பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக கீர்த்தி சுரேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்.

தரமான படங்கள் மலையாளத்தில் வருவதும், அவை கமர்ஷியல் வெற்றி பெறுவதும் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், மசாலா படங்களுக்குப் பெயர்போன தெலுங்கு சினிமா உலகத்திலிருந்து தொடர்ந்து எவடே சுப்ரமணியம், அர்ஜுன் ரெட்டி, மஹாநடி போன்ற படங்கள் வெளிவந்து கமர்ஷியல் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான விஷயம்.
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் இந்தப் படம் தமிழில் வெற்றியா என்று கேட்டீர்களானால் நிச்சயம் டப்பிங் பட பட்ஜெட்டுக்கு வெற்றியே. ஆனாலும், சிறு ஊர்களில் நிறைய அரங்குகளில் இரண்டாவது நாளிலேயே படம் தூக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன வாரம் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்துக்கு நடுவில், இப்படத்துக்கு மிகச் சொற்பமான திரையரங்குகளே கிடைத்திருக்கிறது. என்றாலும், பெருநகரங்களில் உள்ள திரையரங்கள், மல்ட்டி ப்ளெக்ஸுகளில் திங்கட்கிழமை இரவுக் காட்சிக்கு 80 சதவிகிதம் பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள். இளைஞர்கள் தங்களது தாயை அழைத்துக்கொண்டு திரையரங்குக்கு வந்ததைக் கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது. படம் முடிந்து பல பெண்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு போனதைப் பார்த்தபோது சாவித்திரி அவர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சமயங்களில் உண்மையைச் சொல்லாமல் இருப்பதுகூட நல்லதுதான் போல.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். மின்னம்பலம் பதிப்பகம் சார்பாக இவருடைய ‘கனவைத் துரத்தல்’ நூல் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com

கருத்துகள் இல்லை: