ஞாயிறு, 3 நவம்பர், 2024

கலைந்து போன வேடம்

ilakkiyainfo.: தேசிய மக்கள் சக்தி தன்னை மதவாதம், இனவாதம் இல்லாத கட்சியாக அடையாளப்படுத்துவதன் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே, பொதுத்தேர்தலில் எல்லா இனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி என நிரூபிக்க முனைகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறிவைக்கும், இந்த கட்சி, அவர்களுக்கு அதிகாரங்களைவழங்குவதற்கு தயாராக இருக்கிறதா என்பதுதான் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டமோ, அதிகாரப்பகிர்வோ அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து,தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது, முக்கியமான ஒன்று அல்ல. தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வாக அதனை கருதிக் கொண்டதுமில்லை.

ஆனால் அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுக்காக முக்கால் நூற்றாண்டாக தமிழர்கள் போராடி வந்திருக்கிறார்கள்.

தனிநாட்டை அடைவதற்காகவும், மூன்று தசாப்தங்களாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இனரீதியாக, இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளுகின்ற பாரபட்சங்கள், அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள் எல்லாமே, தனித்துவமான அதிகாரம் கொண்ட ஒரு தீர்வை அடைவதற்கான போராட்டத்தில் ஈடுபடத் தமிழர்களைத் தூண்டியது.

தமிழர்களின் சமஷ்டிகட் கோரிக்கையையும் சரி, தனிநாட்டு கோரிக்கையை சரி- ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் ஏற்றுக் கொண்டு தீர்வைத் தருவதற்கு முன்வரவில்லை.

இதனால் தான், இந்தளவு காலமும் இனப் பிரச்சினையும் அதனைச் சார்ந்த போர் மற்றும் நெருக்கடிகளும், நாட்டைச் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளிச் சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் இந்த கருத்தை பகிரங்கமாக கூறியிருந்த நிலையில், அது கடுமையான விவாதங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள சூழலில்- ஜே.வி.பி. தலைமையோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ அந்தக் கருத்து தவறானது என்று கூறவில்லை.

வவுனியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்றிருந்த பிமல் ரத்னநாயக்கவிடம் இது பற்றி கேட்டபோது, ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்கமாட்டார் என்று மாத்திரம் தெரிவித்திருந்தார்.

அவர் கூட, கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல , என்று உறுதியான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அப்படியானால் , ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு தயாராக இல்லாத தேசிய மக்கள் சக்தி, எவ்வாறு இனப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று நம்பிக்கை வைக்க முடியும்?

ரில்வின் சில்வா

ரில்வின் சில்வாவின் இந்த கருத்து, தமிழ் அரசியல் பரப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் மத்தியில் – தமிழ் தேசிய கட்சிகள் மீதான வெறுப்பில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில்- தேசிய மக்கள் சக்தி மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டது உண்மை .

ஆனால், அந்த மாற்றக் கவர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஜேவிபிக்கு தெரியவில்லை .

அப்படி தெரிந்திருந்தால் ரில்வின் சில்வா இத்தகைய தருணத்தில், தமிழ் மக்கள் தொடர்பாக இப்படிப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் .

அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க திட்டமிட்டிருந்த பலர் தமது முடிவை மாற்றிக் கொள்ள தீர்மானித்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.

கைக்கு வந்தது வாய்க்கு எட்ட முன்னரே ,தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் ஆதரவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது .

தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை அந்தக் கட்சி தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை . அதன் ஆழ அகலங்களை தீர்க்கமாக ஆராய்ந்திருக்கவில்லை .

வெறுமனே அதனை ஒரு ஆயுதப் போராட்டமாக -பொருளாதார பிரச்சினையாக மாத்திரமே நோக்கி இருக்கிறது

அதனால் தான் அதற்கு அப்பால் சென்று யதார்த்தபூர்வமாக இந்த விடயங்களை அணுகுவதற்கு முற்படவில்லை -ஆராய்வதற்கு எத்தனிக்கவில்லை .

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில் அணுகக் கூடிய- தீர்க்கக் கூடிய எவருடனும் ஒத்துழைக்கத் தயார் என்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கூறி வருகின்ற சூழலில், ரில்வின் சில்வாவின் இந்த கருத்து எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவது அல்லது இணங்கிப் போவது தொடர்பாக, இந்தக் கட்சிகள் விலகியே இருக்க வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது .

இது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று அல்ல . இனவாத சேற்றில் இருந்து வெளியே வராத தேசிய மக்கள் சக்தியே இதற்கு காரணம் .

தங்களை இனவாத அல்லது மதவாத கட்சி இல்லை என்று கூறும் தேசிய மக்கள் சக்தி , எல்லோரும் சமம் என்று கூறினாலும், தங்களின் கட்சியில் தமிழர்களுக்கு போதுமான இடம் அளித்திருக்கிறதா இந்த கேள்வி இருக்கிறது.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 29 தேசியப் பட்டியல் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. அவர்களில் ஒரே ஒருவர் ஆத்திரமே தமிழர்.

மலையாகத் தமிழரானமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் மாத்திரமே தேசிய பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.

இலங்கைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கூட, தேசிய பட்டியலில் உள்ளடக்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கவில்லை.

இந்தமுறை தேசிய மக்கள் சக்திக்கு கணிசமான தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில், துறை சார் வல்லுநர்கள் , நிபுணர்கள் என்ற அடிப்படையில் தமிழ்ச் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தனது தேசிய பட்டியலில் குறிப்பிட்டளவு இடங்களை வழங்கி இருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.

சிங்கள பேரினவாத கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா பொதுஜன பெரமுன, எந்த ஒரு தமிழரையும் தனது தேசிய பட்டியலில் உள்ளடக்கவில்லை .

தங்களை இனவாதக் கட்சியில்லை என்று கூறுகின்ற தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?

களுத்துறை மாவட்டத்தில் 50,000 தமிழர்கள் வரை வசிக்கின்ற நிலையில், ஒரு தமிழ் வேட்பாளரை கூட தேசிய மக்கள் சக்தி நிறுத்தவில்லை.

ஆனால், சுமார் 20,000 சிங்களவர்கள் வசிக்கின்ற வவுனியா மாவட்டத்தில், 2 சிங்கள வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியிருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

எல்லா இனங்களுக்கும் சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதானால், அதுவே கொள்கை என்றால், எப்படி தேசிய மக்கள் சக்தியினால் தனது தேசியப் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழரை கூட சேர்த்துக் கொள்ளாமல் இருந்திருக்க முடியும்?

வவுனியாவில் இரண்டு சிங்கள வேட்பாளர்களை நிறுத்திய போது, அங்குள்ள சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக தோன்றிய கரிசனை, ஏன் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்து வராமல் போனது?

இதுதான் தேசிய மக்கள் சக்தியின் இரட்டை வேடம். ஆட்சியை கைப்பற்றுவதற்காக அது இனவாதம் இல்லாத மதவாதம் இல்லாத கட்சி என்ற ‘அரிதாரத்தை பூசி’ நம்ப வைக்க முனைகிறது. அதன் அணுகுமுறைகளே அதன் அரிதாரத்தைக் கலைத்து விட்டது.

-என்.கண்ணன்

கருத்துகள் இல்லை: