வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சென்னை ..Gujarat Files புத்தக எழுத்தாளர் ரானா அயுப் .. போலி என்கவுண்டர்களை அம்பலபடுத்தி இந்துத்வாவுக்கு....


ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம் முன்கதை பூர்வீகம் உத்தரப் பிரதேசம். அப்பா அய்யூப் வகீஃப் உருது கவிஞர். ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திலும் இருந்தவர். அவரைப் பின்தொடர்ந்து, ராணாவும் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்துவைத்தார்.
இதழியல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு 2006-ம் ஆண்டு ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆரம்பித்த அவரது பயணம் ‘தெஹல்கா’வில் உச்சத்தைத் தொட்டது. குஜராத் கலவரங்கள், போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக அங்கு அவர் எழுதிய கட்டுரைகளால் பாரதிய ஜனதா கட்சியின் இந்நாள் தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார்.

தெஹல்காவில் சுமார் ஏழு வருடங்கள் ‘பொலிட்டிக்கல் மற்றும் இன்வெஸ்டிகேட்டிவ் கரஸ்பாண்டன்ட்’ ஆகப் பணியாற்றினார். அப்போதைய தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராகப் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘அந்தப் பிரச்சினை நியாயமான முறையில் கையாளப்படவில்லை’ என்று சொல்லி, ராஜினாமா செய்த முதல் பத்திரிகையாளர் இவர்.
ஏன் இந்தக் கோபம்?
‘குஜராத் கலவரம் மாதிரி சென்ஸிட்டிவான விஷயத்தைத் தொட்டிருக்கீங்க. எப்படி இந்தத் துணிச்சல் வந்தது?’ என்று கேட்டதற்கு, சற்று யோசித்துவிட்டுப் பதில் சொல்கிறார்.
“நீதி! அது மட்டும்தான் என்னை உந்தித் தள்ளியது. அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்று என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால்தான் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தேன்” என்றார்.
நாட்டின் பல்வேறு மூலைகளில் நடக்கும் விஷயங்களை, அங்கு நேரில் செல்லாமல் தலைநகர் டெல்லியில் இருந்துகொண்டே கட்டுரைகள் எழுதும் போக்கை, இன்றைய ஊடக உலகில் ‘லுட்டியன்ஸ் ஜர்னலிசம்’ என்று சொல்வதுண்டு. இவர் அப்படிப்பட்ட பத்திரிகையாளர் இல்லை.
குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்ட்டர்களால் பாதிக்கப்பட்டவர்களை, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றி குஜராத்திலேயே எட்டு மாதங்கள் தங்கியிருந்து, பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார். இதற்காக இவர் ‘வெளிநாட்டிலிருந்து குஜராத் மாநிலத்தைப் பற்றி ஆவணப் படமெடுக்க வந்திருக்கும் பெண் இயக்குநர்’ என்ற வேடமிட வேண்டியிருந்தது. அந்தக் கற்பனைப் பாத்திரத்துக்கு அவர் சூட்டிய பெயர் மைதிலி தியாகி.
உண்மைகளின் பதிவு
‘‘அந்த மைதிலி தியாகி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’’ என்றதும், சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ராணா அய்யூப் ஆக என்னால் அந்த மாநிலத்துக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், என் பெயர் அங்கு மிகவும் பிரபலம். பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். எனவே, ‘மைதிலி தியாகி’ ஆக மாறினேன். என் சிகை, உடை அலங்காரம் போன்றவற்றை மாற்றிக்கொண்டேன். வெளிநாட்டவர்களைப் போல ஆங்கில உச்சரிப்பை திருத்திக் கொண்டேன். இந்தியா, ஃபிரான்ஸ் நாட்டு மாணவர்கள் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தியா வந்திருந்த ஃபிரெஞ்சு மாணவர் ‘மைக்’ (இது அவரின் உண்மைப் பெயர் அல்ல) என்பவரை கேமராமேனாக நடிக்கச் சொல்லித் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.
ஒரு விடுதியில் மாத வாடகைக்குத் தங்கியிருந்து பல காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தோம். போகிற இடங்களிலெல்லாம், என் குர்தாவுக்குள் சிறிய கேமராவை மறைத்து வைத்துக்கொண்டு செல்வேன். எப்போதெல்லாம் ஒரு அதிகாரி சில உண்மைத் தகவல்களைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம், வேண்டுமென்றே என் பேனாவைக் கீழே நழுவவிட்டுக் குனிந்து எடுப்பேன். அப்படிக் குனியும்போது என் கேமராவை ‘ஆன்’ செய்துவிடுவேன்.
சில்லிடச் செய்த அனுபவம்
இப்படி ஒரு முறை ஒரு பெண் காவல்துறை அதிகாரியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் நாங்கள் அறிமுகமானோம். இரண்டாம் நாள் இரவில் அவர் என்னைத் தனியே ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். ‘ஏதேனும் முக்கியமான தகவலை அவர் நமக்குத் தரப் போகிறாரோ?’ என்ற எண்ணத்துடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். அது ஒரு நெடுஞ்சாலை. சாலையின் இருபுறமும் காடு. ஆள் அரவம் எதுவுமில்லை. ஒரே ஒரு போலீஸ் ஜீப் மட்டும் நின்றிருந்தது. நான்கைந்து ஆண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர்.
எனக்கு வியர்த்துக் கொட்டியது. முதுகு சில்லிட்டது. அப்போது அதிலிருந்து அந்த அதிகாரி இறங்கி வந்தார். ‘நான் உன்னை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்குக் கூட்டிப் போகிறேன். நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்றார். ஜீப்பில் ஏறினோம். ‘இவர் நம்மை எங்கே கூட்டிப்போகிறார்?’ என்ற கேள்விதான் மனதில் அலையடித்துக்கொண்டே இருந்தது. வழி நெடுக அவர் பேசிக்கொண்டே வந்தார். என்னால் அவர் பேச்சைக் கவனிக்க முடியவில்லை. அப்போது என் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது என் கடைசி இரவாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், நான் கடைசியாக இருந்த இடத்தையாவது அவர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தேன்.
நல்லவேளை, நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. உண்மையிலேயே ரெஸ்டாரன்ட்டுக்குத்தான் போனோம். அப்போதுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது. உடனே நான் கழிவறைக்கு ஓடினேன். குழாயைத் திறந்துவிட்டு, அழத் தொடங்கினேன். அன்று நான் அழுத அழுகை... இன்றுவரை அழுததில்லை. இது ஒரு சம்பவம்தான். நான் தங்கியிருந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் என்னை ஆபத்து சுற்றிக்கொண்டிருந்தது. நான் எந்த நிமிடம் வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருந்தது!” என்று சொல்லிவிட்டுத் தேநீரைப் பருகினார்.
‘ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு இஸ்லாமியராக இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய வேலையைச் செய்தது நிச்சயம் சாதனைதான்!’ என்று சொன்னதற்கு, “தயவு செய்து நான் ஒரு பெண் என்றோ, இஸ்லாமியர் என்றோ பார்க்காதீர்கள். நான் ஒரு ஆணாகவோ அல்லது இந்துவாகவோ இருந்திருந்தால்கூட, நான் செய்திருக்கும் பணிகளுக்கு வேறு சில கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே, என்னை ஒரு பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்!” என்கிறார் கம்பீரமாக!
நன்றி - http://tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: