செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வைகுண்டராஜன் கோஷ்டிக்கு விருந்து வைத்த அதிமுக நாராயணபெருமாள்... அமைப்பு செயலர் பதவி பறிப்பு !

P.Narayana Perumal loses post after Sasikala issueசென்னை: சசிகலா புஷ்பா விவகாரத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்த நாராயணயப் பெருமாள், மகனிள் திருமண வரவேற்பில் வைகுண்டராஜன் தரப்பு ஆட்களுக்கு விருந்து வைத்ததே அவரது அமைப்புச் செயலாளர் பதவி பறிப்புக்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாளை அப்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.கவில் ஒரு காலத்தில் பி.ஹெச்.பாண்டியனின் குடும்பமே கோலோச்சியது. அமைப்புச் செயலாளராக அவர் இருந்த நிலையில் அவரது மகன் மனோஜ் பாண்டியனுக்கு மாநில வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அரவிந்த் பாண்டியனுக்கு அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
மனோஜ் பாண்டியன் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனுக்கு எம்.பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த அளவுக்கு செல்வாக்கோடு இருந்த அந்த குடும்பத்தை ஜெயலலிதா தற்போது ஓரங்கட்டி வைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் சார்ந்த நாடார் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரான நாராயண பெருமாளை அமைப்புச் செயலாளராக்கினார். அத்துடன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
நாடார் சமூகத்தைச் சேர்ந்த நாராயண பெருமாள், இவர் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராகவும், ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார். அதிமுகவில் 11 பேர் அமைப்புச் செயலர்களாக உள்ளனர். அவர்களுடன் நாராயண பெருமாளும் நியமிக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாராயணப் பெருமாளிடம் இருந்து புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த ஜெயலலிதா, தற்போது அமைப்புச் செயலாளர் பதவியையும் பறித்துள்ளார். இந்த பதவி பறிப்புக்கு பின்னர் சசிகலா புஷ்பா விவகாரமும், வைகுண்ட ராஜன் மீதான விசுவாசமும்தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக கட்சிப் பணியைத் தொடங்கினார் நாராயணப் பெருமாள். தொடக்கத்தில் சசிகலா புஷ்பா எம்.பியின் எதிர்ப்பாளராகச் செயல்பட்டவர், பின்னர் தீவிர ஆதரவாளராக மாறினார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்தளவிற்கு கட்சி மேலிடத்தில் செல்வாக்குமிகுந்தவராக மாறினார்.
சசிகலா புஷ்பா ஆதரவில் அடுத்தடுத்த பதவிகளைப் பெற்றார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி கிடைக்க முக்கியக் காரணமே பழனியப்பன்தான். சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார் எனப் பல புகார்கள் வந்தன.
'தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கிறார்' என ராதாபுரம் தொகுதியில் இருந்து சிலர் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர். சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், இதுநாள் வரை தப்பி வந்த நாரயாண பெருமாள் தற்போது சசிகலா புஷ்பாவின் நீக்கத்திற்கு பின்னர் வசமாக மாட்டிக்கொண்டார் என்கின்றனர் அதிமுகவினர்.
இதையடுத்து, கடந்த வாரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ' மேலிடம் தன்னைக் கண்காணிக்கிறது' என்பது தெரிந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் வைகுண்டராஜனின் ஆட்களுடன் நட்பு பாராட்டியதே தற்போது விவகாரமாக அமைந்துள்ளது.
நேற்று வள்ளியூரில் அவருடைய மகன் பால ரிச்சர்ட்டின் திருமண வரவேற்பு விழாவை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனின் ஆட்கள் வந்து அன்பளிப்பையும் அளித்துள்ளதாக கட்சித்தலைமைக் தகவல் தெரியவந்தது.
சசிகலா புஷ்பா விவகாரத்தை வளர்த்துவிடுவதே வைகுண்டராஜன்தான் என்பதால் கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். இந்நிலையில், திருமண வரவேற்புக்கு வைகுண்டராஜன் ஆட்கள் வந்த தகவலை அப்போதே வாட்ஸ் அப் மூலம் நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்பினார் ராதாபுரம் கட்சி நிர்வாகி ஒருவர். இதற்கு மேலும் பதவியில் நீடிக்க விடுவது சரியல்ல' என்பதால்தான், அதிரடி முடிவு எடுத்தார் ஜெயலலிதா என்கின்றனர்.
சசிகலா புஷ்பா விவாகாரத்தில் இன்னும் சிலரது பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் உலா வருவதால், நாராயணப் பெருமாளுடன் நட்பு பாராட்டிய சீனியர்கள், நெல்லை மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் அச்சமடைந்துள்ளார்களாம்.
சசிகலா புஷ்பா பாணியிலேயே , தலைமைக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டதாலேயே நாராயணப் பெருமாள் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்குகள் பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகள்
நெல்லை அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடர்கிறது. அதே நேரம், சசிகலா புஷ்பா சார்ந்த சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் கட்சித் தலைமை மேற்கொண்டு வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது யாருக்குமே அறிமுகம் இல்லாதவராக இருந்த கே.ஆர்.பி.பிரபாகரனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுத்து எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பினார்.
தற்போது, சசிகலா புஷ்பா விவகாரம் பூதாகரமாக வெடித்து தென் மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களிடம் அ.தி.மு.க மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில நாடார் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதனால் அந்த சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் அ.தி.மு.க இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக எம்.பி.யாக உள்ள கே.ஆர்.பி.பிரபாகரனுக்கு நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளராக ஆவாரைகுளத்தை சேர்ந்த பால்துரைக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் நபர்கள், கட்சித் தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சசிகலா புஷ்பாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அவரது வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள் மற்றும் தற்போதும் தொடர்பில் இருப்பவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதால் அச்சத்தில் இருக்கிறார்கள்   /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: