சனி, 27 ஆகஸ்ட், 2016

நடிகர் அருண் விஜய் தலைமறைவு.. போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் !

சென்னை : குடிபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். ‛முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், ஆனால் அவரால் முன்னணி நடிகராக உயரமுடியவில்லை. ஹீரோவாக ஜெயிக்க முடியாதவர் அடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வா டீல், குற்றம் 23 உள்ளிட்ட அவரது படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.


இந்நிலையில், நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. இதில் நடிகர் அருண் விஜய், தன் மனைவியுடன் கலந்து கொண்டார். வரவேற்பில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறார். பின்னர் நள்ளிரவில் குடிபோதையிலேயே நிதானமின்றி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார். இதில் போலீஸ் வாகனத்தின் பின்புறம் சேதம் அடைந்தது. ஆனால் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார், அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை விசாரித்து, குடிபோதையில் காரை ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்தியது ஆகிய இருபிரிவுகளின் கீழ் அருண் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே அருண் விஜய்யை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி அபராதம் கட்டி காரை எடுத்து செல்லும் படி போலீசார் கூறி இருந்தனர். அதனால், அருண் விஜய்யை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி கூறினர். ஆனால் அவர் பாதி வழியிலேயே தப்பி ஓடிவிட்டார். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அருண்விஜய் மீது சாதாரண பிரிவுகளிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அபராதம் கட்டி காரை எடுத்து சென்றிருக்கலாம். ஆனால் தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்களோ என பயந்து அவர் தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அவர் வீட்டிலும் இல்லை என்றும் எங்கோ தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக காலையில் அவர் கைதாகி சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது பொய் என தெரியவந்தது   தினமலர்.com

கருத்துகள் இல்லை: