விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால்
தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.வினவு.com
தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.வினவு.com
இந்த சம்பவம் பற்றி மருத்துவர் ராமதாஸ் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டி உள்ளார் :விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கலவரம் தொடர்பாக, காவல்துறை மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி இம்மாதம் 26-ம் தேதி பாமக சார்பில் போராட்டம்
நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "வேலியே பயிரை மேய்வதைப்
போல, மக்களை காக்க வேண்டிய காவல்துறையினரே விழுப்புரம் மாவட்டம்
சேஷசமுத்திரத்தில் அப்பாவி மக்களை, குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும்
மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இரு தரப்பு மோதலை கையாளுவதற்கான
விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, ஒரு தரப்பினருடன் சேர்ந்து இன்னொரு
தரப்பினரை வெறி கொண்டு தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சேஷசமுத்திரத்தில் தேரோட்டம் நடத்துவதற்கு முறைப்படியாக எந்த அனுமதியும்
வழங்கப்படாத நிலையில், தேரோட்டம் நடத்தியே தீருவோம் என்று ஒரு பிரிவினர்
சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, இன்னொரு பிரிவினர் வாழும்
பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகவே மோதலும், வன்முறையும் ஏற்பட்டிருக்கின்றன. இதைக்
கட்டுப்படுத்துவதற்காக வந்த காவல்துறை மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளன.
எனினும் இதற்கு காரணம் யார்? என்பது தெரியாத நிலையில், அமைதியை ஏற்படுத்த
வேண்டிய காவல்துறையினர் சேஷசமுத்திரத்தில் பெரும்பான்மையான மக்கள் வாழும்
தெருக்களில் நுழைந்து இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அடக்குமுறைக்கு பயந்து அருகிலுள்ள கிராமங்களுக்கு தப்பி ஓடிய ஆண்களை
துரத்திச் சென்று தாக்கி கைது செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக ஊரில் இருந்த ஆண்கள் அனைவரும்
வெளியேறிவிட்ட நிலையில், வீட்டில் இருந்த பெண்களிடம் காவலர்கள் தங்களின்
வீரத்தை காட்டியுள்ளனர். தொலைக்காட்சிகள், இரு சக்கர ஊர்திகள்,
டிராக்டர்கள் என கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் தாக்கி சூறையாடியுள்ளனர்.
60-க்கும் மேற்பட்ட வீடுகள் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில
குடிசைகளை காவல்துறையினரே தீயிட்டு எரித்துள்ளனர். காவல்துறையினரால்
சேதப்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று
மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவல்துறையினரே சமூக விரோதிகளைப் போல செயல்பட்டு
மக்களை தாக்கி, அவர்களை சொத்துக்களை சேதப்படுத்தியது இதுவரை நடக்காத மனித
உரிமை மீறலாகும்.
மோதலுக்கு காரணம் என்று கூறி 11 பெண்கள், 7 சிறுவர்கள் என மொத்தம் 70 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளை வன்முறை செய்ததாக
பொய்க்கதை எழுதி அதனடிப்படையில் கைது செய்யும் அளவுக்கு காவல்துறையினர்
துணிந்திருக்கின்றனர் எனில், அவர்கள் மனதில் எந்த அளவுக்கு வெறி
இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த தாக்குதல்கள்
அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் தான்
அரங்கேற்றியுள்ளனர் என்பதற்கும், மக்களை தாக்கும் போது அவர்களது சமூகத்தின்
பெயரைக் குறிப்பிட்டு "அடித்துக் கொல்லுங்கடா?" என்று கூறி ஆவேசமாக
பாய்ந்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன.
அமலா என்ற நிறைமாத கருவுற்ற பெண்ணை காவல்துறையினர் அடித்து உதைத்து
இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பொதுவாக மோதல் வழக்குகளில்
அதற்குக் காரணமானவர்கள் தான் கைது செய்யப்படுவர். ஆனால், மோதலிலும்,
அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்களை கைது செய்வது எந்த வகையில்
நியாயம்? எந்தச் சட்டம் இதை அனுமதிக்கிறது?
அதேநேரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியதுடன்,
அருவருப்பான முறையில் நடந்து கொண்டோர் கைது செய்யப்படவில்லை; குறைந்த
பட்சம் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தேரோட்டம் என்ற பெயரில்
வன்முறையைத் தூண்ட சதித் திட்டம் நடப்பது தெரிந்திருந்தும் அதைத் தடுக்கத்
தவறிய காவல்துறை அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவியிருப்பது
மன்னிக்க முடியாதது.
அனைவருக்கும் பொதுவாக செயல்படவேண்டிய காவலர்களில் ஒரு பிரிவினர் சாதி
வெறியுடன் நடந்துள்ளனர். தாக்குதல், கைது நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகும்
144 தடை உத்தரவு என்ற பெயரில் அடக்குமுறை தொடருகிறது. ஒரு பிரிவைச்
சேர்ந்தவர்களை கும்பல் கும்பலாக நடமாட அனுமதிக்கும் காவல்துறையினர்,
இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2 பேராக சென்றாலும் கூட அடித்து உதைக்கும்
அவலம் நீடிக்கிறது.
இலங்கையில் கம்பி வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள்
சிங்களப் போர்ப்படையினரால் நடத்தப்பட்டதை விட மிக மோசமான முறையில்
சேஷசமுத்திரம் கிராம மக்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
மற்றொருபுறம் தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில
கட்சி தலைவர்கள் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கைகளில் ஒருதரப்பு உண்மையை
அப்பட்டமாக மறைத்துள்ளனர். அப்பாவி மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து
விட்ட வன்முறையோ, கருவுற்ற பெண்களும், சிறுவர்களும் கைது செய்து இழுத்தச்
செல்லப்பட்டக் கொடுமையோ, வீடுகள் சூறையாடப்பட்டதோ அவர்களின் காமாலைக்
கண்களுக்கு தெரியவில்லை. அவர்களின் இதயங்களில் கூட வகுப்பும், வண்ணமும்
பார்த்து தான் இரக்கம் சுரக்கும் போலிருக்கிறது.
சேஷசமுத்திரம் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டதற்கும், சொத்துக்கள்
சூறையாடப்பட்டதற்கும் விழுப்புரம் காவல் துறை அதிகாரிகள் சிலர்தான் மூல
காரணம். இவர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கிராம மக்கள் அளித்த
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் அவர்கள் மீதான
வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், மோதல் மற்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
வரும் 26.08.2015 புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து
வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் அறவழியில் தொடர் முழக்கப்
போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ்
கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக