தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில்
பணிபுரியும் ஊழியர்களுக்கும் தேனியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும்
முத்துலெட்சுமியைத் தெரியாமல் இருக்க முடியாது. அவர் அரசாங்க உயர்
அதிகாரியோ கட்சிப் பிரமுகரோ இல்லை. தாசில்தார் அலுவலக வளாகத்தின்
மரத்தடியில் அமர்ந்து மனு எழுதித் தருகிறவர். தனது உடல் ஊனத்தை ஒரு
பொருட்டாக நினைக்காமல் எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களுக்குத் தனது
மனுக்களால் முதியோர், திருமணம், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல்வேறு
உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தந்து அவர்களின்
நன்மதிப்பைப் பெற்றுவருகிறார்.
தேனி அருகே அல்லிநகரத்தில் எந்தவொரு வசதியும் பின்புலமும் இல்லாத ஏழைக்
குடும்பத்தின் இரண்டாவது மகள் முத்துலெட்சுமி. மூன்று வயதில் தந்தையை
இழந்து, வறுமையில் வாடினார். ஐந்து வயதில் விஷக்காய்ச்சலால்
பாதிக்கப்பட்டார். முத்துலெட்சுமியின் இடது கை, முதுகுத் தண்டுவடம்
பாதிக்கப்பட்டு 60 சதவீத ஊனத்தை அடைந்தார். இவரால் இயல்பாக நடக்கவோ, வேலை
செய்யவோ முடியாது. தன் அம்மாவின் ஒத்துழைப்புடன் கல்லூரிப் படிப்பை
முடித்தார்.
உதவும் உள்ளம்
பள்ளியில் படித்தபோது சக மாணவர்களின் கேலி, கிண்டல் பேச்சுக்களால் மனம்
உடைந்து போனார். அப்போது அவருடைய ஆசிரியர்கள் கொடுத்த தைரியமும் ஊக்கமும்,
முத்துலெட்சுமிக்குத் தன்னம்பிக்கை கொடுத்தன. கல்லூரிப் படிப்பை
முடித்துவிட்டு வேலை தேடி அலைந்தபோது எந்த வேலையும் கிடைக்காமல்
சோர்ந்துபோயிருந்த நேரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் தன்னை அவர்கள்
குழுவில் சேர்த்துக்கொண்டதாகச் சொல்லும் முத்துலெட்சுமி, தேனி தாசில்தார்
அலுவலக வளாகத்தில் புகார் மனு எழுதிக் கொடுக்கும் வேலையைக் கடந்த நான்கு
ஆண்டுகளாகச் செய்துவருகிறார்.
“படிச்சவங்களுக்கும் மனு எழுதும்போது சந்தேகம் வந்தா என்கிட்டேதான்
கேட்பாங்க. நான் அவங்களுக்கு விளக்கமா எடுத்துச் சொல்வேன். நான் தினமும்
நியூஸ் பேப்பர் படிக்கறதால அரசாங்கத்தோட நலத்திட்டங்கள் பத்தி நல்லா
தெரியும். கிராமத்துல இருந்து வர்றவங்க சிலர், மனு எழுதி முடிச்ச பிறகு
கையில காசு இல்லைன்னு சொல்லுவாங்க. வசதியா இருக்கறவங்ககூட ரெவின்யூ
ஸ்டாம்ப், அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு, ‘சில்லறை இல்லை. அடுத்த முறை
வரும்போது பணம் தர்றோம்’னு சொல்லுவாங்க. அவங்ககிட்டே எல்லாம் நான் பணம்
கேட்கறது இல்லை” என்கிறார் முத்துலெட்சுமி.
தினமும் காலை பத்து மணிக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக நடந்து வருகிறார். மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்குக் கிளம்புகிறார்.
“வீட்ல ஏதாவது வேலையிருந்தா என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்வேன்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காகப் படிச்சிட்டு இருக்கேன். தாசில்தார் ஆபீஸ்ல
வேலைபார்க்கிறவங்க என்னைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவாங்க.
உதவித்தொகை பணம் வாங்கின சிலர், ‘பல வருஷமா இதுக்காக அலைஞ்சு, திரிஞ்சேன்.
உன்கிட்டே மனு எழுதி வாங்கிட்டு போனபிறகு இந்தப் பணம் வந்தது’ன்னு
சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் சின்னப் பொண்ணா இருந்தபோது
இப்படி அடுத்தவங்களுக்கு பாரமா இருக்கோமேன்னு தினமும் அழுவேன். ஆனால்
இப்படி மனுக்கள் எழுதிக் கொடுக்கறது மூலமா என்னாலயும் மத்தவங்களுக்கு உதவ
முடியுது. இது என்னோட நம்பிக்கையை அதிகரிக்குது” என்று நிறைவுடன்
சொல்கிறார் முத்துலெட்சுமி. வெற்றிக்கு உடல் ஊனம் ஒரு தடையில்லை என்பதற்கு
இவரைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?
படங்கள்: ஆர்.சௌந்தர் tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக