வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இந்துமதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை! திருமாவளவன் Ultimatum ?


விழுப்புரம்: சேஷ சமுத்திரம் மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. 15ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. அந்தத் தேரை பொதுப் பாதையில் கொண்டு வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு முன்பு தேரோட்டத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தேர் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலனி பகுதியில் உள்ள தலித் வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இந்த கலவரம் தொடர்பாக 7 சிறுவர்கள், 11 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 3 மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "சேஷ சமுத்திரம் தலித்துகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அரசியல் கட்சிகளும் இதில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சேஷ சமுத்திர மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை"என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலித்துகள் தாக்கப்பட்டமைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன inneram.com

கருத்துகள் இல்லை: