வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 பெருநகரங்களில் கொல்கொட்டா,சென்னை ,பெங்களூரு ,அய்தரபாத்,மும்பை ,,டில்லி ......

புதுடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் ஐந்து இடங்கள்:இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்கள் இரவில் நடமாடுவதை பார்க்க முடியும் .. மதுரை நெல்லை போன்ற சிறு நகரங்களில் கூட பாதுகாப்பாக உள்ளது
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ள, நாகாலாந்தின் மொத்த மக்கள் தொகை, 19 லட்சம் மட்டுமே. இங்கு, கடந்த 2014ல், 67 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 6 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.

ஆறாமிடம் பிடித்துள்ள தமிழகம், பெரிய மாநிலங்கள் வரிசையில், முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ல், தமிழகத்தில், பெண்களுக்கு எதிராக, 6,325 குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகை, 7.2 கோடி. இதில், 3.6 கோடி பேர் பெண்கள். தமிழகத்தில், கடந்த 2014ல், நிகழ்ந்த மொத்த குற்றங்களில், 18.4 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.
குற்றங்கள்பட்டியலில், 7ம் இடத்தில் மணிப்பூர், 8ம் இடத்தில் மேகாலயா, 9ம் இடத்தில் உத்தரகண்ட் உள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், பீகார் மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான, 10வது மாநிலமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக, 15 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பீகார் மாநிலம், 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட, நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இங்கு, கடந்த ஆண்டு, நிகழ்ந்த குற்றங்களில், மூன்றில் ஒரு பகுதி, அதாவது, 31.3 சதவீதம், பெண்களுக்கு எதிரானவை.



குற்ற நகரம் டில்லி!
இந்திய நகரங்களில், 'பாலியல் பலாத்கார' நகரமாக, டில்லி உருவெடுத்துள்ளது. டில்லியில் நிகழும் குற்றங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களின் விகிதம், பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. சென்னை, பாலியல் பலாத்கார குற்ற பட்டியலில் கீழிருந்து இரண்டாவது நகரமாக இருக்கிறது. பெருநகரங்களில், ஒரு லட்சம் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் விகிதம், என்.சி.ஆர்.பி., ஆய்வு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், டில்லி முதலிடத்தை பிடித்து, பெண்கள் பயத்துடன் வாழக்கூடிய நகரமாக உள்ளது. கடந்த, 2014ல், டில்லியில், பெண்களுக்கு எதிராக, 1,813 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு லட்சம் பெண்களுக்கு, 2௪ பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். 2013ல், 1,441 பாலியல் பலாத்காரங்கள் நடந்தன. கடந்த, 2014ல், தேசிய அளவில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 6 பேர் என்ற விகிதத்தில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. டில்லிக்கு அடுத்து, மும்பையில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள், 607. ஒரு லட்சம் பெண்களுக்கு, 7 பேர் என்ற விகிதத்தில், இக்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தளவு, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்த நகரங்களாக, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் திகழ்கின்றன. கோல்கட்டாவில், 1 லட்சம் பெண்களுக்கு, 0.5, சென்னையில், 1.5, பெங்களூருவில், 2.5, ஐதராபாத்தில், 3.3 என்ற எண்ணிக்கையில், பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன.



பெண்களை கடத்தி திருமணம்:
என்.சி.ஆர்.பி., ஆய்வறிக்கையின்படி, பெண்களை கடத்தும் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காகவே நிகழ்கின்றன. பொதுவாக, பணயத் தொகை கேட்கவே, கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்நிலை, சமீபகாலமாக, மாறி வருகிறது. பெண் கடத்தல் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காக நிகழ்வதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.கடந்த, 2014ல், இந்தியா முழுவதும், 77 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டதாக, வழக்குகள் பதிவாகின. இவற்றில், 676 சம்பவங்கள் மட்டுமே, பணயத் தொகை கேட்க நடத்தப்பட்டன. 31 ஆயிரம் பெண்கள், கட்டாயத் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்; 1,500 பெண்கள், கொலை செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டனர். பெண்களை திருமணம் செய்வதற்காக, கடத்தப்பட்ட சம்பவங்களில், 50 சதவீதம், உ.பி., பீகார், அசாம் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. உ.பி.,யில் அதிகபட்சமாக, 7,338 பெண் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. உ.பி.,யில் நடந்த மொத்த கடத்தல் சம்பவங்களில், 60 சதவீதம், திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்டவை. பீகாரில், 4,641 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இங்கு, 2014ல் நடந்த மொத்த கடத்தல்களில், 70 சதவீதம், திருமணம் தொடர்பானவை. அசாமில், 3,883 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இம்மாநிலத்தில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 25 பேர் என்ற விகிதத்தில், திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர் தினமலர்..com

கருத்துகள் இல்லை: