புதன், 15 ஜூலை, 2015

குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடு

 மும்பை : மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி யாகுப் மேமனுக்கு ஜூலை 30ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் யாகுப்பின் கருணை மனு மீது ஜூலை 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய உள்ளது.
1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட யாகுப் மேமன் உள்ளிட்ட பலர் இவ்வழக்கில் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த மும்பை டாடா கோர்ட், 2000ம் ஆண்டு யாகுப்பிற்கு மரண தண்டனையும், மேலும் 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி ஆகியோருக்கு யாகுப் கருணை மனு அனுப்பினார். இதனையடுத்து யாகுப்பிற்கு தண்டனை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் யாகுப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததுடன், இது தொடர்பாக முடிவு செய்து கொள்ளும் பொறுப்பை மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைத்தார்.
இதனை அடுத்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டும் கருணை மனுவை நிராகரித்தது. இருப்பினும் யாகுப், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கருணை மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஜூலை 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய உள்ளது.

யாகுப்பின் மனுவை மீண்டும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டால் அவரத தண்டனை உறுதி ஆகி விடும். இந்நிலையில், யாகுப்பிற்கு ஜூலை 30ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாக்பூர் மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியன யாகுப்பின் கருணை மனுவை நிராகரித்து விட்டதால் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன், நிழலுலக தாதா தாவூப் இப்ராஹிமின் கூட்டாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: