வியாழன், 16 ஜூலை, 2015

கும்பகோணம் பள்ளி தீ விபத்து:11 ஆண்டுகள் கடந்தும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை!

கும்பகோணம் : அனைவரின் நெஞ்சையும் பதற வைத்து கோர விபத்துகளில் ஒன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. இந்த பயங்கர தீ விபத்து நடைபெற்றதன் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று. ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், தீயின் கோர பசிக்கு தங்களின் பிஞ்சுக் குழந்தைகளை பறி கொடுத்து விட்டு தவித்து நிற்கும் பெற்றோர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. 2004ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 16) தான் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த விபத்து நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் கூட கிடைக்கவில்லை.


தீராத சோகம் :

விபத்தில் காயமடைந்த 18 குழந்தைகளில் மெர்சி என்ற பெண் தற்போது நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு திருமணம் செய்யாததால், நர்சிங் படித்து மருத்துவ சேவைக்காக அவளை அர்ப்பணிக்க பெற்றொர்கள் முடிவு செய்துள்ளனர். இதே போல் கவுசல்யா என்ற பெண்ணிற்கு வலது கை முழுவதுமாக தீயில் கருகி விட்டதால் அவரால் எழுதக் கூட முடியாத நிலையில் இருந்து வருகிறார். எதிர்காலத்தில் என் பிள்ளையை டாக்டராக்குவேன், இன்ஜினியர் ஆக்குவேன் என கனவு கண்டிருந்த பெற்றோர்கள் 15 பேருக்கு இன்று வாரிசுகளே இல்லாமல் யோய் விட்டது துயரத்தின் உச்சம்.

குற்றவாளிகளின் நிலை :

இந்த விபத்து தொடர்பாக மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து 21 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மேலும் 11 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தொடரும் வழக்கு :

குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களுக்கு துவக்கத்தில் தலா ரூ.1 லட்சம் அரச சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அதற்கு பின் எந்த நிவாரணமும் கிடைக்காததால், உரிய இழப்பீடு கேட்டு குழந்தைகளின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.  dinamalar.com

கருத்துகள் இல்லை: