புதன், 15 ஜூலை, 2015

மகாபுஷ்கரம் புனித நீராடல் நெரிசலில் சிக்கி 29 பேர் பலி! ஆந்த்ரா ராஜமுந்திரியில் ....

ராஜமுந்திரி: ஆந்திராவின்
ராஜமுந்திரி நகரின், கோதாவரி நதியில், கோட்டகும்மம் புஷ்கரகாட்டில் நேற்று விமரிசையாக துவங்கிய, 'மகாபுஷ்கரம்' எனப்படும், புனித நீராடல் சடங்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடிய நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 13 பெண்கள் உட்பட, 29 பேர் இறந்தனர். இதனால், அந்த நிகழ்ச்சியில் சோகம் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில், மகாபுஷ்கரத்திற்கான ஏற்பாடுகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, பல தடவை, ராஜமுந்திரி வந்து, ஏற்பாடுகளை பார்வையிட்டார்.நேற்று அதிகாலை துவங்கிய புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர், ராஜமுந்திரியில் கூடியிருந்தனர். மகாபுஷ்கரத்திற்கான நேரம், நேற்று அதிகாலை துவங்கியதும், சாதுக்களும், சன்னியாசிகளும், கோதாவரி நதியில் நீராடினர்.  இந்த செய்தி கேட்டவுடன் எனக்கு கும்பகோணம் மகாமகம் தான் ஞாபகம் வருகிறது.
இதற்காக, இரு கரைகளையும் தொட்டபடி, நதியில் நீர் சென்றது. அதன் பிறகு, முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன் குடும்பத்தினருடன் நீராடினார்.முன்னதாக, ஆற்றிற்குள் பக்தர்கள் வேகமாக இறங்கினால், மூழ்கி விட வாய்ப்பு உள்ளது என கருதி, கரைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, பக்தர்கள் வரிசையாக குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கியஸ்தர்கள் குளித்து முடித்ததும், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, அதிகாலையில் இருந்தே, ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.அவ்வாறு பல மணி நேரம் காத்திருந்தவர்களில் முதியவர்கள் பலர், பசி மயக்கம், களைப்பில் இருந்தபோது, காலை, 8:00 மணியளவில், குளிப்பதற்காக தடுப்புகள் அகற்றப்பட்டன.அப்போது பின்னால் இருந்து வெள்ளமென, முண்டியடித்தபடி பக்தர்கள், ஆற்றுக்குள் இறங்கியதால், முன் வரிசையில் இருந்தவர்கள், நெரிசலில் சிக்கினர். பின்னால் இருந்து தள்ளப்பட்டதால், கீழே விழுந்தவர்கள் மீது நுாற்றுக்கணக்கானோர் விழுந்து துவைத்ததால், உடல் நசுங்கி, 29 பேர் இறந்தனர்; அவர்களில், 13 பேர் பெண்கள்.
இந்த சோகம் நடைபெற்ற இடத்திலிருந்து, சில மீட்டர் துாரத்தில், முதல்வர் சந்திரபாபு, புனித நீராடல் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். நெரிசலில் பலர் இறந்தது தெரிந்ததும், சிறிது நேரம், மகா புஷ்கரம் நிறுத்தப்பட்டது.
இரங்கல்:

காயமடைந்திருந்த 200க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள், ராஜமுந்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
டில்லியில் இருந்து, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வுக்கு போன் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என விசாரித்தார்.< ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:கோதாவரி நதியில் மகா புஷ்கரம் நிகழ்ச்சி, மிகச் சரியாக நடைபெற வேண்டும் என்பதற்காக, நான் நான்கைந்து முறை இங்கு வந்து ஏற்பாடுகளை கவனித்தேன். சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அவற்றை செயல்படுத்தும்போது ஏற்பட்ட சிக்கலால், உயிர் பலி ஏற்பட்டு விட்டது; அது, எனக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது.தேவைப்பட்டால், இன்னும், 11 நாட்களுக்கு நான் இங்கேயே இருந்து, எவ்வித சிக்கலும் இல்லாமல், புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடுகளைச் செய்வேன்.இவ்வாறு, சந்திரபாபு நாயுடு கூறினார்.இறந்தவர்களுக்கு, தலா, 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, முதல்வர் நாயுடு உத்தரவிட்டார்.

புனித நீராடும் சடங்கு: கோதாவரி புஷ்கரம் எனப்படும், கோதாவரி நதியில் புனித நீராடும் சடங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த முறை, மகாபுஷ்கரமாக கருதப்படுகிறது. இது, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும்.ஜோதிட முறைப்படி, சிம்ம ராசியில் வியாழன் இருக்கும் போது, மகாபுஷ்கரமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், கும்பமேளாவாக, வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஓராண்டு வரை நீடிக்கும் இந்த விழா, வட மாநிலங்களில், ஹரித்வார், அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜையினி ஆகிய இடங்களில் விமரிசையாக நடக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், திரியம்பகேஷ்வரர் கோவிலிலும், கோதாவரி நதியில் மகாகும்ப மேளா துவங்கியது. இங்குள்ள நதியில், சாதுக்களும், சன்னியாசிகளும் புனித நீராடியதை அடுத்து, நேற்று காலை பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். தினமலர்.com 

கருத்துகள் இல்லை: