புதன், 15 ஜூலை, 2015

ராமஜெயம் கொலை விரைவில் கைது நடவடிக்கை! அரசியல் கட்சி பிரமுகர் போலீசாரின் சந்தேகப்பட்டியலில்.....

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் வருகிற 24–ந்தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது. கெடு முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான 12 இன்ஸ்பெக்டர்களை கொண்ட டீம் தனித்தனியே பிரிந்து சென்று வெவ்வேறு இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்தியது. 2012 மார்ச் 29–ந்தேதி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அரசியல் பகை, கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் மோதல், கட்டப்பஞ்சாயத்து, பெண் பிரச்சனை என விசாரணை நடந்தது. இதில் கொலைக்கான பின்னணியை கண்டுபிடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருகின்றனர். 10 முக்கிய பிரமுகர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சந்தேகப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு 2012 மார்ச் 25–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை 5 நாட்கள் திருச்சியில் முகாமிட்டிருந்த பிரபல தொழில் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள், கூலிப்படைகள் பற்றிய விபரம் திரட்டப்பட்டது. இதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை திருச்சியில் தங்கியிருந்தது பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. இதில் தேசிய கட்சி அரசியல் பிரமுகர் தொழில் ரீதியான பிரச்சனைக்காக தங்கியிருந்த பிரமுகர் பற்றிய விபரமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் கிடைத்துள்ளது. இதில் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது விசாரணை விபரம் அனைத்தையும் ரகசியமாக வைத்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை வழக்கை திசை திருப்புவதற்காக சிலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதும் அது கொலையாளிகளை இதுநாள் வரை தப்ப உதவியதும் தெரிய வந்தது. தங்களது விசாரணையில் இவற்றையெல்லாம் கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை குற்றவாளியை நெருங்கி விட்டனர். எனவே விரைவில் குற்றவாளிகள் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது

கருத்துகள் இல்லை: