புதன், 4 மார்ச், 2015

தமிழக கூட்டணி கட்சிகளுக்கு சலுகைகளை அள்ளிவீச தொடங்கிய பாஜக! ஸ்ரீ ரங்கம் பேதி வேலை செய்கிறது?

மிழக பா.ஜனதா கூட்டணியிலிருந்து மதிமுக, பாமக என வரிசையாக கூட்டணி கட்சிகள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவோ மதில் மேல் பூனையாக தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இருக்கும்  கட்சிகளையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சிகளுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் பதவிகளை வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பா.ஜனதா கட்சியின் கூட்டணியில் தற்போது தேமுதிக, இந்திய ஜனநாயகக்  கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை உள்ளன.
மதிமுக விலகிய பிறகு டாக்டர் ராமதாஸின் பாமக, தனி பாதை கண்டு முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தேர்தலைச் சந்திக்க தீவிர மாகியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் கொடுத்த படு தோல்வி பாஜக தலைமையை யோசிக்க வைத்துள்ளது. அதனால் மீதம் உள்ள கூட்டணி கட்சிகள் தங்களைவிட்டு விலகாமல் இருக்கவும், கூட்டணியைப்  பலப்படுத்தவும் பாஜகவின் டெல்லி தலைமை  முடிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்ற முடிவில் இருந்து மாறப்போவதில்லை என்று வலியுறுத்தினார் என்றும், ஆனால் அமித்ஷா இது தொடர்பாக எதுவும் பிடிகொடுத்து  பேசவில்லை என்றும் செய்திகள் வெளியானது. இதனால் தேமுதிகவும் கூட்டணியிலிருந்து கழன்றுகொண்டால் என்னவாது? என்ற கவலை தமிழக பா.ஜனதாவினருக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படியே நிலைமை நீடித்தால் வரும் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக மட்டும்  தனித்துப் போட்டியிடவேண்டிய சூழல் ஏற்படும் என்று மேலிடத் தலைவர்களிடம் கவலையுடன் கூற, இதுகுறித்து  மத்தியில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதற்கான மாற்று ஏற்பாடுகளை செயல்படுத்த தமிழக பாஜக முடிவெடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.        

எனவே பாஜகவின் கூட்டணி  கட்சிகளான தேமுதிக, பாரிவேந்தரின்  ஐ.ஜே.கே., ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு, மத்திய அரசு வழக்கறிஞர்  பதவிகளைக்  கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின்  பெயர்கள்  தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான  சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதி மன்றத்தில் பணிபுரிகிறார். மாநில உயர்நீதி மன்றத்தில்  உதவி சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர், ஜெனரல் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
சென்னை உயர்நீதி மனறத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞர்களாகப் பணிபுரிகிறார்கள்.
இவர்கள் சென்னை, மதுரை உயர் நீதி மன்றங்களில் நடைபெறும் மத்திய அரசு வழக்குகளில் ஆஜர் ஆவார்கள். இவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது.

சென்னை, மதுரை உயர் நீதிமன்றம்  மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்குகளில் வாதாட 150  பேர்  கொண்ட மத்திய அரசு வழக்கறிஞர்கள் நிலைக்குழு உள்ளது.
இதில் 60 மூத்த வழக்கறிஞர்கள்  இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசின் வழக்குகளில் வாதாட வரிசைப்படி சொலிசிட்டர் ஜெனரல் அனுமதி வழங்குவார். அவர்களோடு மூத்த வழக்கறிஞர்களும் இணைந்து பணிபுரிவார்கள்.

இந்த வழக்குகளில் ஆஜர் ஆகும் வழக்கறிஞர்களுக்கென ஊதியத்தையும்  மத்திய அரசு வழங்கும்.

இந்த வழக்கறிஞர் குழுவில் மத்திய அரசு  வழக்கறிஞர்களாக தமிழக பாஜக  கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 45 பேரை சேர்க்க மத்திய சட்டத்துறைக்கு பாஜக  சார்பில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் மத்திய அரசு தொடர்பான 15 ஆயிரம் வழக்குகள் நடந்து வருகின்றன. வருடத்துக்கு சராசரி 1,500 வழக்குகள் வீதம் அதிகரித்து வருகின்றன.
எனவே, பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் நியமிக்கப்படும்  வழக்கறிஞர்கள், மத்திய அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாட வாய்ப்பு கிடைக்கும் என்று  கூறப் படுகிறது.இவர்களுக்கு வழக்குகளில் ஆஜராவதற்கு ஏற்ப மத்திய அரசின் ஊதியம் கிடைக்கும்.
இதனிடையே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்த சிபாரிசு பட்டியலில் முடிவில் பாமக வழக்கறிஞர்களின்  பெயரும் இடம் பெற்றிருந்ததாகவும், பின்னர் அது நீக்கப்பட்டு விட்டது என்றும் நம்பத் தகுந்த பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விகடன்.com

கருத்துகள் இல்லை: