வியாழன், 5 மார்ச், 2015

BBCயின் டெல்லி பலாத்கார ஆவணப்படம் உலகை உலுக்கியது !

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டிரைவர் முகேஷ் சிங் என்பவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். வருகிற 8 ந்தேதி உலக மகளிர் தினத்தில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்ப இங்கிலாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக திகார் சிறையில் அனுமதி பெற்று முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தது. அதில், பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களைவிட பெண்களே காரணம். பலாத்காரத்தின்போது நிர்பயா போராடியிருக்காவிட்டால், அவர் உயிரிழந்திருக்க மாட்டார். நாட்டில் 20 சதவிகித பெண்களே ஒழுக்கமானவர்கள் என்று முகேஷ் சிங் கூறியுள்ளான்.
இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ள இந்த தகவலை அறிந்த மத்திய அரசு சிறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தது. முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து மாநிலங்களவையில் பெண் எம்பிக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அம்பிகா சோனி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினர். சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பட்சன் தலைமையில் பெண் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி ஆண் எம்பிக்களும் இணைந்து கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாலியல் பலாத்கார குற்றவாளியிடம் பேட்டி எடுக்க எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சமூக நல நோக்கத்துடன் மட்டுமே பேட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்ள்ளது. தற்போது விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாது. இதுதொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை மார்ச் 8ஆம் தேதி பிபிசி நிறுவனம் ஒளிபரப்ப இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆவணப் படத்தின் காட்சிகளை ஒளிப்பரப்பக் கூடாது என்று நீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 2012 டிசம்பரில் நடைபெற்ற பலாத்கார சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தனி நபரோ, குழுவோ, நிறுவனமோ வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்றார். இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் தலையிட்டு இந்த ஆவணப்படம் வெளிவர உதவி செய்ய வேண்டும் என்று ஆவணப் படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் தெரிவித்துள்ளார். மேலும், ஆவணப் படத்திற்கு தடைக்கு காரணமாக இருப்பவர்கள் தயவு செய்து படத்தைப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

1 கருத்து:

Radha manohar சொன்னது…

நன்றி அன்பரே