திங்கள், 2 மார்ச், 2015

நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம்: தாமரைக்கு தியாகு கடிதம்

கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி   காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை  நான்காவது  நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.
இந்நிலையில் தாமரைக்கு அவரது கணவர் தியாகு எழுதியுள்ளார். அதில், நான் விலகியிருப்பதால் உனக்கும் சமரனுக்கும் எவ்வளவுத் துன்பம் என்று எனக்குப் புரியாமலில்லை. கடந்த ஓராண்டுக்கால நிகழ்வுகளை மட்டும் எண்ணிப் பார்த்தாலே போதும், நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம் என்பது விளங்கும்.இப்போது என்ன செய்வது? மற்றவர்களை அணுகிப் பேசுவதென்றால் பேசலாம், நீதிமன்றப் படியேறுவதென்றாலும் ஏறலாம். அதற்கு முன் நமக்குள் கொஞ்சம் உரையாடலாம் என்பது என் கருத்து. நேரில் பேசும் போது நீ உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதால் மின்னஞ்சல் வழியாகவே உரையாடலாம் என்கிறேன். அது சரிப்படாத போது மற்ற வழிகளை நாடலாம்.

நமக்குள் பொது என்று எதுவும் மிச்சமில்லை, சமரன் ஒருவனைத் தவிர அவனுக்கும் கூட உடனே இடர்ப்பாடுகள் இருந்தாலும், நெடுங்கால நோக்கில் நம் பிரிவுதான் நல்லது என்பதை எண்ணிப் பார்த்தால் நீயும் ஏற்றுக் கொள்வாய். அவனை நீ வளர்க்கும் முறை சரியோ தவறோ, என் குறுக்கீடு இல்லாமல் அதைச் செய்வதுதான் அவனுக்கும் உனக்கும் நல்லது. நம் போராட்டத்தில் சமரனை ஒரு பகடையாக உருட்ட வேண்டாம். ஓராண்டு முன்பு எடுத்திருக்க வேண்டிய முடிவு அவர்கள் சொன்னதைக் கருதித்தான் தள்ளிப் போயிற்று, ஆனால் எதற்கும் எல்லை உண்டு என்பதை எண்ணி அவர்கள் ஆறுதல் அடையலாம். நீ உன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளாதே. நலம்பேண உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால் மனம் உடலைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள். பொறுமையாகச் சிந்தித்து சீர்தூக்கி விடைதர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: