வெள்ளி, 23 ஜனவரி, 2015

Chennai Book Fair ரூ15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை 700 கடைகள் 12 லட்சம் பார்வையாளர்கள்...

சென்னை,ஜன.22 (டி.என்.எஸ்) கடந்த 13 நாட்களாக நடந்து வந்த 38வது சென்னை புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த 13 நாட்களில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.700 அரங்குகளுடன் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த சென்னை புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு பேசினார்.


நிகழ்ச்சியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம், துணைத்தலைவர் அமரஜோதி, செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன், சைதாப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் தம்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகள் தொடர்ந்து புத்தக பதிப்பு துறையில் ஈடுபட்டு வரும் 33 பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், ”சமுதாயத்தில் உள்ளவர்கள் அனைவரையும் படிப்பதற்கு தூண்டும் விழாவாக நான் இதனை (புத்தக கண்காட்சி) கருதுகிறேன். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் தலைமை பண்புகள் வளரும். அறிவும், ஆற்றலும் புத்தகங்களை படிப்பதால் மட்டுமே வளரும். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்களை அடுத்த வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும்”, என்றார்.

நிறைவு விழாவில், ‘பபாசி’ செயலாளர் கே.எஸ்.புகழேந்தி பேசுகையில், ”கடந்த 13 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சியை 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். ரூ.15 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளது. பல்வேறு வகையான புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.1000-க்கும் மேற்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதனால் எத்தனை புத்தகங்கள் விற்றுள்ளன? என்பதை உடனடியாக கணக்கிடுவது என்பது சிரமம்.” என்றார்.

புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த குறும்படமாக மகா விதுரன் இயக்கிய ‘ஆயா’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த குறும்பட இயக்குநராக ‘தெய்வா’ குறும்பட இயக்குநர் ராம் செந்தில்குமாருக்கும், சிறந்த நடிகருக்கான விருது ‘மோனோ லாக்’ குறும்படத்தில் நடித்த ராகவ் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியை முன்னதாகவே நடத்த உள்ளதாக ‘பபாசி’ அமைப்பினர் தெரிவித்தனர். tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை: