திங்கள், 19 ஜனவரி, 2015

"ஐ" திருநங்கைகளை கேவலமாக சித்தரித்த டைரக்டர் ஷங்கர்! திருநங்கைகள் ஆவேசம்! கமிஷனர் அலுவலகம் முன்பாக முற்றுகை !


சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஐ' படம் பொங்கலன்று வெளியானது. இந்த படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள்  அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்கும்படியும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். காட்சிகளை நீக்காமல் தொடர்ந்து படம் வெளியாகி ஓடுவதால் இன்று  காலை திரைப்பட தணிக்கைதுறை (சென்சார் போர்டு) அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி சென்னை சாஸ்திரி பவன்  அலுவலகத்தில் உள்ள சென்சார் அலுவலகம் அருகே காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலையில் அங்கு திருநங்கைகள் வந்தனர். 'ஐ'  படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோஷமிட்டனர். பின்னர் கமிஷனர் அலுவலகம் புறப்பட்டு சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில்  15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் தோழி அமைப்பினர் கூட்டாக கமிஷனரிடம் கடிதம் ஒன்றை அளித்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில்  காட்சி அமைத்துள்ளனர்.  ‘ஐ'  படத்தில் திருநங்கை காதலை வெளிபடுத்துவதை காமம் போன்று காட்டி இழிவாக காட்சி அமைத்துள்ளனர். இந்த காட்சிகளை நீக்க  சொன்ன பிறகும் நீக்கவில்லை. ஷங்கர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதை கண்டித்து வரும் 22ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து அமைப்புகள்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்காக அனுமதி கேட்டு இன்று கடிதம் அளித்தோம். 'காஞ்சனா',  'தெனாவட்டு' படங்களில் திருநங்கைகள் பற்றி நல்லவிதமாக  காட்சிகள் அமைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளை சம பாலினமாக கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் சுப்ரீம்  கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் எங்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை: