வெள்ளி, 23 ஜனவரி, 2015

வரலாறு காணாத சுயநலவாதி பன்னீர்செல்வம் ! தப்பி தவறியும் ரோஷம் காட்டாத அடிமைதொழில் . காசு.... பதவி ..கண்றாவி?

ஓ பன்னீர்செல்வம்ராமனின் பாதரக்ஷையை அரியணையில் அமர்த்தி பரதன் அயோத்தியை ஆண்ட புராணக் கதையை இன்றைய தமிழகம் புதிய வடிவில் கண்டு வருகிறது. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகுமாறு விதிக்கப்பட்ட ராமனின் இடத்தில் ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஜெயா. ராமனின் செருப்பு இருந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்துக்கும் போயசு தோட்டத்துக்கும் தூரம் அதிகமில்லை என்பதாலும், அ.தி.மு.க.வில் செகண்ட் ஹீரோக்களுக்கு இடமில்லை என்பதாலும் இந்த நவீன இராமாயணத்தில் பரதன் கதாபாத்திரம் ரத்து செயப்பட்டுவிட்டது.
அரியணையில் அமர வைக்கப்பட்ட ராமனின் செருப்பிற்குக்கூடக் கொஞ்சம் தலைக்கனம் ஏறியிருக்கலாம். ஆனால், பன்னீர்? தன் பெயருக்கு முன்னால் முதலமைச்சர் எனப் போட்டுக் கொள்வதில்லை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்குரிய அறையைப் பயன்படுத்துவதில்லை, சட்டசபையில் முதலமைச்சருக்குரிய நாற்காலியில் அமருவதில்லை, சட்டசபை வளாகத்தில் ஜெயாவின் காரை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்கூடத் தனது காரை நிறுத்துவதில்லை என அவரது பணிவு கொடிகட்டிப் பறக்கிறது.

தீபாவளிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட சில்லறை விசயம் தொடங்கி பிரதமர் மோடி நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியது வரை எல்லா இடங்களிலும் இது அம்மாவின் வழிகாட்டுதலில் நடந்துவரும் ஆட்சி என்பதைத் திரும்பத் திரும்ப அடக்கத்தோடு பதிவு செய பன்னீர் மறந்ததேயில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆட்சியாளர்களின் பணி, முன்னேற்றம், நிர்வாகத்திறன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் அம்மா இன்றைக்கு நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்” எனப் பதில் அளித்து, அம்மாவின் பாதரக்ஷைத் தமிழகத்தை ஆளவில்லை, அம்மாதான் போயஸ் தோட்டத்து மர்மக் குகைக்குள் இருந்துகொண்டு ஆண்டு வருகிறார் எனத் தெளிவுபடுத்தினார், அவர்.
உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜெயாவிற்கு நிபந்தனை ஏதுமற்ற பிணை வழங்கிய பிறகு, ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமன், “தங்களின் வழிகாட்டுதலில்தான் தமிழக அரசு இயங்குகிறது என்கிற தோற்றத்தைக்கூட உருவாக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டு அவருக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவுகளையே பகிரங்கமாகக் காலில் போட்டு மிதிக்கும் தன்னகங்காரம் கொண்ட ஜெயா, கேவலம் தன்னிடம் பீஸ் வாங்கும் வழக்குரைஞரின் கடிதத்தை எதைத் துடைக்கப் பயன்படுத்தியிருப்பார் எனச் சொல்லத் தேவையில்லை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில், “எந்தெந்த வங்கிகளில் இவர்களுக்கு நிரந்தரக் கணக்கு மற்றும் பணம் கையிருப்பு இருக்கிறதோ அந்த வங்கிகளில் இருந்து எடுத்து அபராதத் தொகைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தொகையும் அபராதத்துக்குப் போதவில்லையென்றால், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை (இவர்களால் கணக்குக் காட்ட முடிந்த 7,080 கிராம் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களைத் தவிர்த்து) ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் வங்கி அல்லது பொதுமக்களிடம் ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையையும் அபராதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களான நிறுவனங்கள் மற்றும் நிலங்களை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
ஜெயா, ஷீலா பாலகிருஷ்ணன், இராமானுஜம்
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் இருந்து கொண்டு தமிழக அரசை ஆட்டுவிக்கும் ஜெயா மற்றும் அவரது கையாட்கள் ஷீலா பாலகிருஷ்ணன், இராமானுஜம்
குற்றவாளியிடமே தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சிக்கிக் கொண்டிருப்பதுதான் இவ்வழக்கில் முரண்நகை.  ஊழல் வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்ட விவரத்தையும், அதனால் அவர் பதவியிழந்து, அவர் போட்டியிட்டு வென்ற சிறீரங்கம் தொகுதி காலியாகிவிட்டதையும் அமுக்கிவிட முயன்ற அ.தி.மு.க. அரசு, இப்பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நீதிமன்றத்தை அணுகப் போகிறது எனத் தெரிந்த பிறகுதான், இந்த விவரங்களை, தீர்ப்பு வந்து ஒன்றரை மாதங்கள் கழித்து அரசிதழில் வெளியிட்டது.  ஊருக்கே தெரிந்த தண்டனை விவரத்தை அரசிதழில் வெளிட்டதற்காகச் சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பிறகு, எந்தவொரு அதிகாரியாவது ஜெயாவிடமுள்ள திருட்டுச் சொத்துக்களைக் கையகப்படுத்தத் துணிவாரா?
இதுவொருபுறமிருக்க, தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்பு பிரிவுதான் பெங்களூரு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமாம். அந்தப் பிரிவின் ஐ.ஜி.யாக இருக்கும் குணசீலனோ ஜெயாவின் தீவிர விசுவாசி.  இதனாலேயே அவர் மே 2013-லேயே பதவி ஓவுபெற்ற பிறகும், அவரது பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து, தனக்கு அரண் அமைத்துக் கொண்டுள்ளது ஜெயா கும்பல்.
ஜமாலுதீன், மோகன் வர்கீஸ் சுங்கத்
ஜெயாவின் தண்டனை விவரத்தை அரசிதழில் வெளியிட்ட ‘குற்றத்திற்காக’ சட்டப் பேரவைச் செயலர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட ஜமாலுதீன் (இடது) : தலைமைச் செயலர் பதவியிலிருந்து அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுப் பிணையில் வெளியே வந்த பிறகு, ஜெயா போயசு தோட்டம் என்ற அலிபாபா குகையைவிட்டு வெளியே வருவதில்லை என்றாலும், தலைமைச் செயலகம் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை அரசின் அதிகாரத் தாழ்வாரங்களை எல்லாம் அவரது படம் அலங்கரித்து வருகிறது. அறிவிக்கப்பட்ட அரசின் திட்டங்களிலிருந்து இன்னும் அவர் பெயரும் படமும் மறைந்துவிடவில்லை.  அவர் கூடிய விரைவில் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில் புதிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படி சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு, அறநெறிகளைக் கடுகளவிற்குக்கூட மதிப்பு கொடுக்காமல், ஜெயா தனது தர்பாரை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, பல மர்மங்கள் நிறைந்ததாகவும் இந்த பினாமி ஆட்சி விளங்குகிறது.
சட்டப்பேரவைச் செயலராக இருந்த ஜமாலுதீன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது நிர்பந்தம் காரணமாக அவரே பதவி விலகிவிட்டாரா என்பது இன்னும் புதிராகவே இருந்துவருகிறது. தலைமைச் செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் உப்புச்சப்பில்லாத பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பதவி மூப்பில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் ஆலோசகராக இருந்துவரும் ஷீலா பாலகிருஷ்ணன்தான் காரணமென கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசகர் பதவியென்பதே ஓர் அலங்காரப் பதவிதான். அதற்குச் சட்டபூர்வத் தகுதியெல்லாம் கிடையாது.  ஆனாலும், ஷீலா பாலகிருஷ்ணன்தான் சூப்பர் தலைமைச் செயலராகச் செயல்பட்டுவருவதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட முட்டல் மோதலின் விளைவாகவே மோகன் வர்கீஸ் சுங்கத் தூக்கியடிக்கப்பட்டதாகவும் புலனாவு இதழ்கள் குறிப்பிடுகின்றன.
இராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பதவியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் ஓவுபெற்ற நாளன்றே, அவரைத் தமிழக அரசின் இன்னொரு ஆலோசகராக நியமித்தது, ஜெயாவின் பினாமி அரசு. இராமானுஜம் பதவி நீட்டிப்புப் பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக டி.ஜி.பி.யாக இருந்ததே சட்டவிரோதமானது என முந்தைய காங்கிரசு அரசு குற்றஞ்சுமத்தியதோடு, அவரது பதவி நீட்டிப்பை அங்கீகரிக்கவும் மறுத்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே அவருக்கு டி.ஜி.பி. சலுகைகளோடு ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இராமானுஜம் அ.தி.மு.க.வின் கள்ள ஓட்டு, பணப்பட்டுவாடாவிற்குச் சாதகமாக நடந்துகொண்டதற்கு அளிக்கப்பட்டுள்ள பரிசு இது.
கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்
கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டத்தில் ஊழல் குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாக ரகளை-அதிரடியில் இறங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
சூப்பர் முதல்வர் ஜெயா, சூப்பர் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், சூப்பர் டி.ஜி.பி. இராமானுஜம் என இந்த ஆட்சியைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இந்த அதிகார கும்பல்தான் நடத்திவருகிறது.  பிறகு, சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு துறையிலும் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்து, அதைப் பெட்டிபெட்டியாக போயஸ் தோட்டத்துக்கு அனுப்பும் வேலையை வார நாட்களில் செய்கிறார்கள். மற்ற நாட்களில் அம்மாவை மீண்டும் முதல்வராக்க ஆண்டவனை வேண்டி கோவில் கோவிலாய்ப் போய் பூஜைகளையும் யாகங்களையும் நடத்துகிறார்கள்; காசு கொடுத்துக் கும்பலைச் சேர்த்து பால்குடம் எடுக்க வைக்கிறார்கள்.
சத்துணவு முட்டையின் விலையை ரூ.4.50 எனச் சந்தை விலையைவிடக் கூடுதலாக நிர்ணயம் செய்திருப்பதும்; கோழிப்பண்ணை எதுவுமே நடத்தாத, முட்டை குடோன்கூட வைத்து நடத்தாத கிறிஸ்டி மற்றும் சொர்ணபூமி நிறுவனங்களுக்குத் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 60 இலட்சம் முட்டைகளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதும் அம்மா ஆட்சியின் கொள்ளையடிக்கும் நோக்கத்தைப் புட்டுவைக்கின்றன. சந்தைவிலையைவிடக் கூடுதலாக விலையை ஏற்றிக் கொடுத்திருப்பதன் மூலம் மட்டும் அரசுக்கு ஏற்படும் இழப்பு 80 கோடி ரூபாயாகும் என நாமக்கல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.
முட்டை ஊழலுக்கு அடுத்து, ரேஷன் கடைகளின் மூலம் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு கொள்முதலில் 3,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றஞ்சுமத்தியிருக்கிறார். சந்தை விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்து பருப்பு வாங்க ஒப்பந்தம் இறுதி செயப்பட்டிருப்பதாகவும், இந்த ஒப்பந்தமும் நாமக்கல்லைச் சேர்ந்த ராசி நியூட்ரி ஃபுட்ஸ் என்ற ஒரே நிறுவனத்திற்கு ஓராண்டிற்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் ஆட்சியாளர்கள் 40 கோடி ரூபாய் வரை இலஞ்சம் பெற்றிருப்பதாகவும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகமெங்குமுள்ள தனியார் பள்ளிகளில் நடப்பாண்டில் 74,217 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களுக்கான கட்டணம் 25.13 கோடி ரூபாய் என்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வி அமைச்சர் வீரமணி அறிவித்தார். பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா இச்சட்டத்தின் கீழ் 89,941 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகக் கூறிவருகிறார். இந்நிலையில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் இது தொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, நடப்பு கல்வியாண்டில் 2,959 மாணவர்கள் மட்டுமே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்திருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் 23 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அவ்வியக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகமெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செயப்பட்டுள்ளனர். ஒரு இடமாற்றத்திற்கு 6 முதல் 7 இலட்ச ரூபாய் வரை பெறப்பட்டு, இதில் 500 கோடி ரூபாய் வரை இலஞ்சப் பணம் கைமாறியிருப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாசு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஜெயா கொள்ளைக் கூட்டத் தலைவி
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், மேலாகவும் இருந்து கொண்டு ஆட்சியதிகாரத்தை அனுபவித்து வரும் ஜெயா-சசி கும்பலைத் தட்டிக் கேட்பதற்கான துணிவும் நேர்மையும் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல. உச்ச, உயர்நீதி மன்றங்களிடமும் இல்லை.
இவற்றுக்கு அப்பால் ஆவின் பால் திருட்டு ஊழல், சென்னை மாநகராட்சி ரோடு காண்டிராக்டு ஊழல், சத்து மாவு விநியோகத்தில் நடந்துள்ள முறைகேடுகள், சென்னை பெருநகருக்குள் பேருந்து நிழற்குடைகளை அமைக்கத் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் எனப் புற்றீசல் போல ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமாகி வருகின்றன. சகாயம் கமிசனை அமைக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ரத்து செய்வதற்கும், அது முடியாமல் போன பிறகு அக்கமிசனின் விசாரணையை முடக்குவதற்கும் இப்பினாமி அரசு எடுத்துவரும் முயற்சிகள் ஒவ்வொன்றும் எப்பேர்பட்ட கிரிமினல் கும்பலிடம் தமிழகத்தின் ஆட்சியதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், மேலாகவும் இருந்துகொண்டு ஆட்சியதிகாரத்தை அனுபவித்து வரும் ஜெயா-சசி கும்பலைத் தட்டிக் கேட்பதற்கான துணிவும் நேர்மையும் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல, உச்ச, உயர்நீதி மன்றங்களிடமும் இல்லை. ஜெயா தண்டிக்கப்பட்டதைச் சாக்காக வைத்துக்கொண்டு தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வைத் தடைசெய்யக் கோரும் வழக்கு, அரசு அலுவலங்களிலும் அதனின் இணைய தளங்களிலும் ஜெயாவின் படத்தை எடுக்கக் கோரும் வழக்கு, நீதிபதி குன்ஹாவைக் கீழ்த்தரமாக விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கும், கண்டனத் தீர்மானங்கள் இயற்றப்பட்டதற்கும் எதிரான வழக்கு என இந்த மூன்று மாதங்களில் அ.தி.மு.க.வின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நியாயமாகப் பார்த்தால், இந்த ஒவ்வொரு வழக்கிலும் ஜெயா முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றம் அவ்வழக்குகளை இந்தக் கோணத்தில் பார்க்கவோ, நடத்திச் செல்லவோ மறுக்கிறது.  மாறாக, வாய்தாவுக்கு மேல் வாய்தா அளித்து தொடுக்கப்பட்ட வழக்குகளையும் இழுத்தடித்து அ.தி.மு.க. கும்பலுக்குச் சாதகமாக நடந்து வருகிறது.
“ஜெயாவின் கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு, அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என ஜெயாவின் வக்கீலாக மாறி வாதிட்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. அந்நீதிமன்றம் இப்பொழுது ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையை நீட்டித்துக் கொடுத்திருப்பதோடு, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் அக்கும்பலின் மேல்முறையீட்டு மனுவையும் விசாரித்து முடிக்கும்படி உத்தரவும் போட்டுவிட்டது. இந்நிலையில் பகற்கொள்ளைக் கூட்டமான ஜெயா-சசி கும்பலை ஆட்சியதிகாரத்திலிருந்து துரத்தவும், கிரிமினல் குற்றங்களுக்காகத் தப்பிவிடாதபடி தண்டிக்கவும் சட்ட வழிமுறைகளின்படி வாய்ப்புள்ளதாக யாரேனும் நம்பமுடியுமா?
- செல்வம் வினவு.com

கருத்துகள் இல்லை: