புதன், 21 ஜனவரி, 2015

ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலி கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுவதற்கு முன் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டி சமீபத்தில் மீட்கப்பட்டது. அதில் உள்ள பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கருப்பு பெட்டியில் இரைச்சலுடன் பல அலாரங்கள் பதிவாகியிருப்பதாகவும், அதில் ஒன்று விமானம் கட்டுப்பாட்டை இழந்து செல்வதை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த எச்சரிக்கை அலாரத்தில், பைலட்டும் துணை பைலட்டும் விமானத்தை நிலைப்படுத்தி விபத்தை தவிர்க்க கடுமையாக முயற்சி செய்வது கேட்பதாகவும், இரைச்சல் காரணமாக அவர்கள் பேசுவது சரியாக பதிவாகவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். விமானம் கடலில் விழுவதற்கு முன், மோசமான வானிலை காரணமாக வழக்கத்திற்கு மாறான உயரத்தில் பறந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை மந்திரி கூறியதையடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: