வியாழன், 22 ஜனவரி, 2015

அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்

பெங்களூரு: தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் என புகழாரம் செய்த நீதிபதி குமாரசாமி அதிமுகவினர் வயிற்றில் பால்வார்த்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணை, 11வது நாளாக, நேற்று நடந்தது.ஜெ., வக்கீல் நாகேஸ்வரவராவ் வாதிட்டதாவது:
முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சம்மன் அனுப்பி, ஜெயலலிதா சொத்து ஆய்வு குறித்த, அறிக்கையை, விளக்கும்படி, நீதிமன்றமே கேட்டது. இதற்காக, டெபுடி எஸ்.பி., சம்பந்தம் ஆஜராகி, தான் ஆய்வு செய்த அறிக்கையை விளக்கினார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நீங்கள் எப்படி ஆஜராகலாம் என்று கூறி, அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. இதை, தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்தி, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போது, அவர் வீட்டில் இல்லை. பறிமுதலான, வெள்ளியின் எடை, 1,116 கிலோ என்றும், அதன் மதிப்பு, 48 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டனர். உண்மையில், அங்கிருந்த, வெள்ளி பொருட்களின் எடை, 1,250 கிலோவாகும். இதன் மதிப்பு, 83 லட்சத்து, 7,000 ரூபாய்.இந்த வெள்ளி பொருட்கள், ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட, 1991ம் ஆண்டுக்கு முன்பே, அவர் சம்பாதித்தது. இதுபற்றி, போலீஸாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முறையான அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தினர், என்றார்.


அப்போது, நீதிபதி குமாரசாமி, அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து, “ரெய்டு நடத்துவதற்கு, அனுமதி பெறவில்லையா. ஜெயலலிதா இல்லாத போது, யார் முன்னிலையில் ரெய்டு நடந்தது,” என்றார்.

வக்கீல் பவானிசிங்: ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற, அவரது செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் ரெய்டு நடந்தது. கைப்பற்றப்பட்ட, வெள்ளி பொருட்கள் பட்டியல் குறித்து, அவரிடமே கையெழுத்து பெறப்பட்டது. அவர் இறந்து விட்டார். மரண சான்றிதழ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர், நாகேஸ்வரராவ் வாதிட்டதாவது:ஜெயலலிதா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட, வெள்ளிப் பொருட்களில், எம்.ஜி.ஆர்., வழங்கிய, வெள்ளி செங்கோலும், கிரீடமும் உள்ளது. தமிழக தலைவர்கள், பிறந்த நாள் கொண்டாடும்போது, அந்தந்த கட்சியினர், பரிசு வழங்குவதுண்டு. இதுபோன்று, ஜெயலலிதாவின், 1992ல், 44வது பிறந்த நாளன்று, ஒன்றரை கோடி ரூபாய், 'டிடி' வந்தது. இது பற்றி, 125 பேர் சாட்சியம் கூறியுள்ளனர். இவர்களிடம், வழக்கை விசாரித்த எஸ்.பி., நல்லம்ம நாயுடு, எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.ஆந்திரா மாநிலம், பகிராபாத்தில், ஜெயலலிதாவுக்கு, 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், ஜெயலலிதா தாயார் சந்தியா காலத்தில், 1964ல் வாங்கப்பட்டது. இந்த நிலத்திலிருந்து, 1972 வரை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. 1987 முதல், 1993 வரை, ஆண்டுக்கு, ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதற்கு வருமான வரியும் செலுத்தியுள்ளனர்.ஆனால், ஊழல் தடுப்பு போலீஸார், ஐந்து ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே, வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதை, முந்தைய சிறப்பு நீதிமன்றம், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் எனக்கூறி, ஐந்து ஆண்டுகளுக்கு, 10 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டனர்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.விசாரணை இன்றும் தொடர்கிறது.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு-நீதிபதி குமாரசாமி புகழாரம்:

நீதிபதி குமாரசாமி:
தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை, பெரிய தலைவர். தமிழகத்தை ஆண்ட காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பிடித்து, முதல்வரானார். தமிழகத்தில் திராவிட பாரம்பரிய கட்சி, மாநிலத்தில் பெரிய கட்சியாக விளங்கியது. இதன் பின்னர், எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்று, பெரிய தலைவராக விளங்கினார். அவர், எவ்வளவு நாள் முதல்வராக இருந்தார்.
ஜெ., வக்கீல் செந்தில்: 10 ஆண்டுகள், முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வரானாரா?
ஜெ., வக்கீல் அசோகன்: இல்லை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: அது, எப்படி நடந்தது? எம்.ஜி.ஆர்., மறைந்த அனுதாப அலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே.
வக்கீல் அசோகன்: அந்த தேர்தலில், மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி, ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., இரண்டாக, உடைந்ததால், வெற்றி பெற முடியவில்லை. dinamalar.com

கருத்துகள் இல்லை: