‘இந்து’ என்.ராம்:
அமைதி ஒப்பந்தத்தில் பெருமாள்முருகன் கையெழுத்து போட்டதாலேயே அவரது
எழுத்து இறந்துவிட்டதாக அர்த்தமல்ல. அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு
உட்பட்டு படைப்பாற்றல் சுதந்திரம், கருத்துரிமையைக் காத்துக்கொள்ள நாம்
உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
இந்தியாவில் கருத்துரிமை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவருகிறது.
சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைத் தடை செய்தது, ஜெய்ப்பூர்
விழாவுக்கு அவர் வரவிடாமல் தடுத்தது, எதிர்ப்பாளர்களுக்குப் பணிந்து ஓவியர்
எம்.எப்.உசைனை நாட்டைவிட்டு விரட்டியது, கார்ட்டூன் வெளியிட்டதால் விகடன்
குழும ஆசிரியர் பாலசுப்ரமணியனை கைது செய்தது என பல மோசமான நிகழ்வுகள் இங்கு
தொடர்கின்றன. படைப்பாளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். குற்றவியல்
நடைமுறையே சில நேரங்களில் நகைப்புக்குரியதாக ஆகிறது.
எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மற்றும் அமைப்புகள்
போராட்டம் நடத்தின. இதற்கெல்லாம் பயந்து தளர்ந்துவிடக்கூடாது.
எழுத்தாளர்கள், பதி்ப்பா ளர்கள் மேலும் உறுதியுடன், தீரத்துடன் போராட
வேண்டும். இப்பிரச்சினைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
பெருமாள்முருகன் பல ஆய்வுகளை மேற் கொண்டு ‘மாதொருபாகன்’ நூலை
எழுதியுள்ளார். அது மீண்டும் வெளியாகவேண்டும். வெளியாகியே தீரும்.
சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி:
பெருமாள் முருகனை அரசுத் தரப்பில் அமைதிப் பேச்சுக்கு அழைத்து, கடைசியில்
மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு எந்த
அளவுக்கு கருத்துரிமை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
நீதியரசர் சந்துரு:
பெருமாள்முருகனுக்கு எதிராக கொரில்லா முறையில், ஆனால் முறையாக
திட்டமிடப்பட்டு போராட்டம் நடந்தது. சாதி, மதம், பெண் என பலவிதங்களில்
பிரச்சினைகளைத் திரித்து போராட்டம் நடத்தினர். கொங்கு வேளாளர் அமைப்பும்,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அமைப்பு, தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக் கான
கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ‘வேற்று சாதியினரை மணம்புரியமாட்டேன்’
என்று உறுதிமொழி வாங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்
வடக்கு, தெற்குப் பகுதிகள் மட்டுமின்றி மேற்குப் பகுதியிலும் சாதிப்
பிரச்சினை வேரூன்றியிருக்கிறது.
டெல்லியில் உள்ள ஒரு அமைப்பு எல்லா நூல்களையும் படித்து, தங்களுக்கு
பிடிக்காத கருத்து இருந்தால், நூல் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது.
வழக்கு தொடுக்கிறது. பெருமாள்முருகன் விஷயத்திலும் அவர்களது பின்னணி
இருக்கிறது. சமூகத்தின் காவலர்களாக கருதிக்கொள்ளும் ஒரு குழு, என்ன
புத்தகம் வெளியாகலாம், என்ன வாசகங்கள் இருக்கக் கூடாது என்பதை முடிவு
செய்கிறது. இத்தகைய போக்கை எதிர்த்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்து
போராடவேண்டும்.
காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்:
‘மாதொருபாகன்’ நூலை மீண்டும் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால்,
அதற்கு பெருமாள்முருகனின் ஒப்புதல் வேண்டும். புத்தகத்தை வெளியிடக்கூடாது
என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அவர் எனது 20 ஆண்டு நண்பர். அவரது
வார்த்தையை நான் மீறமுடியாது. கையில் இருக்கும் நூல்களை விற்கமாட்டேன்.
வேண்டுமானால், இந்த புத்தகத்தை யாராவது பக்கம்வாரியாக ஸ்கேன் செய்து
இணையத்தில் வெளியிடுங்கள். ஒரு பதிப்பாளராக அதை எதிர்த்து நிச்சயம் வழக்கு
போடமாட்டேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது. tamil.hindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக