வியாழன், 4 செப்டம்பர், 2014

புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய 8 போலீசார் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி புதுவை பெரியகடை போலீசாருக்கு டி.ஜி.பி. காமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை டி.ஜி.பி. காமராஜ் சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். அப்போது அருள்மேரி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த 5 பேரில் ஒருவர் 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அரவிந்தர்ஆச்சிரமம்   மீதும்   முன்பு  இது போன்ற  பல சந்தேகங்கள் குற்றசாட்டுக்கள் சுமத்தபட்டன.ஆனால் என்ன ஏறக்குறைய எல்லாமே ஊத்தி மூடப்பட்டு விட்டன
இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் பெயர்விவரம் மற்றும் விபசாரத்திற்கு வந்தவர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் போலீஸ் அதிகாரிகள் சிலரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியையும் அந்த கும்பல் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அந்த 14 வயது சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 8-ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியை பணத்தாசைக் காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அந்த சிறுமி ஒரு குழந்தைக்கு தயானார். இதனால் அவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

அந்த 14 வயது சிறுமி மூலம், அவருடன் படித்த மேலும் சில சிறுமிகளையும் அந்த கும்பல் விபசாரத்தில் இறக்கியது. பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமிகளிடம் உல்லாசம் அனுபவித்தது யார்? என்று சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் தீவரம் காட்டவில்லை. எனவே குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. எதிர்க்கட்சிகளும் போர்க்கொடிகள் உயர்த்தின.

இந்த நிலையில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கில் போலீஸ் ஐ.ஜி.பர்வீர் ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-

இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் ஆகிய 8 பேரை பணியிடைநீக்கம் செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: