செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ? நவாஸ் ஷெரிப் ராணுவ தளபதிகள் சந்திப்பு !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பாக்., ராணுவ தளபதி, ரகீல் ஷரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பாகிஸ்தானில், எந்த நேரத்திலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த மாதம், 14ல் ஆரம்பித்த இந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளான, பி.டி.ஐ., தலைவர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஏ., தலைவர் காத்ரியின் ஆதரவாளர்கள், தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருவதால், நிலைமை மோசமடைந்து உள்ளது.
'முறைகேடான வகையில் ஆட்சியை கைப்பற்றிய, பிரதமர் நவாஸ் ஷெரீப், உடனடியாக பதவி விலக வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரரும், முக்கிய அரசியல் தலைவருமான, இம்ரான் கான், தானே நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவரின் போராட்டத்திற்கு, ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதால், நவாசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், போராட்டக்காரர்கள் பார்லிமென்டை முற்றுகையிட முயன்றதால், அங்கிருந்து தப்பிய பிரதமர் நவாஷ், ஹெலிகாப்டர் மூலம், தன் சொந்த ஊரான லாகூரில் தஞ்சம் அடைந்தார்.
கலவரத்தை ஒடுக்க முடியாததால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட, மூன்று பேர் பலியாயினர்; 550 பேர் காயம் அடைந்தனர். நேற்று, எதிர்க்கட்சியினர், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.'டிவி' அலுவலகம் முற்றுகை:
பிரதமர் வீட்டுக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. கோபமடைந்த போராட்டக்காரர்கள், அரசு 'டிவி' அலுவலகமான, பி.டி.வி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏராளமானோர் திரண்டு, அங்கிருந்த கேமராக்களை உடைத்தனர். கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது. அங்கு வந்த ராணுவ வீரர்கள், போராட்டக்காரர்களை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினர். பின், பி.டி.வி., அலுவலகம், ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது; மீண்டும் ஒளிபரப்பு துவங்கியது.நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து, கவலை அடைந்துள்ள ராணுவ தளபதி, ரகீல் ஷரீப், உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கூறியுள்ளார். போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சில், மத்தியஸ்தம் செய்யவும், ராணுவம் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.மேலும், பிரச்னைக்கு தீர்வு காண, ராணுவ தளபதி ரகீல் ஷரீப், பிரதமர் நவாஸை, நேற்று சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது, நவாஸை உடனடியாக பதவி விலகும்படி, அவர் கூறியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.இதனால், அந்நாட்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ தளபதியும், பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுவதை அடுத்து, பாகிஸ்தானில், எந்த நேரத்திலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.வழக்கு பதிவு:
*பிரதமருக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்டு, பயங்கரவாத செயல்களுக்கு துணை போனதாக, இம்ரான் கான் மற்றும் காத்ரி மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
*பிரச்னை குறித்து விவாதிக்கவும், விரைந்து நல்ல முடிவெடுக்கவும், அந்நாட்டு தலைமை நீதிபதி, அனைத்து நீதிபதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
*போராட்டக்காரர்கள், தலைமைச் செயலகத்தையும் முற்றுகையிட்டதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது.
*நவாஸ் பதவி விலகும் வரை, போராட்டத்தை தொடரவுள்ளதாக கூறியுள்ள இம்ரான் கான், ''நாட்டு மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார்,'' என, அறிவித்து உள்ளார்.
*இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில், பிரதமர் நவாஸ், ஊடகங்களின் வாயிலாகக் கூட, பொதுமக்களுக்கு எவ்வித செய்தியும் அளிக்காதது, அவர் மீதான நம்பிக்கையின்மையை, மேலும் அதிகரித்து உள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழ்நிலை, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி, விரைவில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நவாஸ், உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.
பிரகாஷ் ஜாவடேகர்
மத்திய அமைச்சர் - பா.ஜ.,


ராணுவ தளபதி ரகீல், பிரதமர் நவாஸை பதவி விலகக் கோரி, நெருக்கடி கொடுப்பதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை. இந்த விவகாரத்தில், ராணுவ தளபதி, பிரதமருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
மர்யம் ஷெரீப்,
பாக்., பிரதமர் நவாசின் மகள்


பாக்., எங்கள் நட்பு நாடு. அந்த வகையில், அங்கு நிலவும் அரசியல் குழப்பங்கள் கவலை அளிக்கின்றன. அந்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ, எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு, அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். இதைத் தான், சீனா விரும்புகிறது.
குயின் கங்க்
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் DINAMALAR.COM

கருத்துகள் இல்லை: