புதன், 3 செப்டம்பர், 2014

தெலுங்கானாவுக்கும் ஆந்திராவுக்கும் அள்ளி கொடுக்கும் மோடி தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் ?

ஆந்திரா, தெலங்கானாவுக்கு ஆயத்தீர்வை விலக்கு< புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆயத்தீர்வை விலக்கு அளிக்கப்படும் என்று ஓர் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது.இந்த மாநிலங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் ஊக்கம் தரவேண்டும் என்றால், பணமாக வேண்டுமானால் தாருங்கள், ஆனால் ஆயத்தீர்வை விலக்கு கொடுக்கக்கூடாது; அது தமிழகத்துக்கு ஆபத்தாக முடியலாம் என்பது ஜெயலலிதாவின் வாதம். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு ஆயத்தீர்வை விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க இந்த மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.


தமிழகத்தைச் சேர்ந்த ஒரு FMCG கம்பெனி, உத்தராகண்டில் தொழிற்சாலை அமைத்து ஒரு பொருளைத் தயாரித்துவருவதாக நான் முன்னமேயே எழுதியிருக்கிறேன். இதனைத் தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருள்கள் அனைத்தும் தென்னிந்தியாவிலிருந்து உத்தராகண்ட் வரை எடுத்துச் செல்லப்படுகின்றன. பொருள் உற்பத்தியானதும் மீண்டும் தென்னிந்தியா கொண்டுவரப்பட்டு இங்குள்ள மாநிலங்களில் விற்கப்படுகின்றன. போக்குவரத்துச் செலவு அதிகமானாலும் ஆயத்தீர்வை விலக்கு காரணமாக லாபம் கிடைக்கிறது என்பதால் உத்தராகண்டில் தொழிற்சாலையை வைத்திருக்கிறோம் என்றார் அந்நிறுவன அதிகாரி ஒருவர். ஆனால் விரைவில் ஆந்திராவுக்கு இதே விலக்கு கிடைத்துவிட்டால் தொழிற்சாலையை அப்படியே தூக்கி எடுத்துவந்து ஆந்திராவில் நிறுவிவிடுவோம் என்றார். போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் லாபம் அதிகரிக்கவும் செய்யும்.

இம்மாதிரியான பிராந்தியம் சார்ந்த ஆயத்தீர்வை விலக்கு, சுற்றியுள்ள மாநிலங்களைப் பாதிக்காதா? கட்டாயம் பாதிக்கும். மத்திய அரசு இம்மாதிரியான விலக்குகளைத் தரக்கூடாது. ஆனால் இதனை ஏற்கெனவே வாக்குறுதியாகக் கொடுத்துதான் தெலங்கானா, ஆந்திரா மாநிலப் பிரிப்பை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. இப்போது பின்வாங்கினாலும் இரண்டு மாநிலங்களும் சண்டைக்கு வரும். கொடுத்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என்று ஜெயலலிதா சண்டைக்கு வரப்போகிறார். இன்னும் கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவை விழித்துக்கொள்ளவில்லை.

ஒருவிதத்தில் தெலங்கானா, ஆந்திரம் இரண்டுக்கும் நிதியுதவி செய்வதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கவேண்டும். இரண்டு பேருமே வரைமுறையின்றி கடன் ரத்து செய்திருக்கின்றனர். வருமானம் பற்றிய சரியான புரிதல் இன்றி, பணத்தை வாரி இறைக்கும் செயல்களைச் செய்திருக்கின்றனர். ஆந்திரத் தலைநகரை உருவாக்குவதில் ஏகப்பட்ட செலவுகள் இருக்கின்றன. இப்படி எந்தப் பொறுப்பும் இல்லாமல் நடந்துகொள்ளும் புதிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்யவே கூடாது.

கருத்துகள் இல்லை: