செவ்வாய், 21 மே, 2013

இந்திய சீன நட்புறவு துளிர்த்தது! ஒரு புதிய அத்தியாயம்

வரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும்,
இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று, ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை முடித்ததும், லீ கெகியாங், ஐதராபாத் இல்லம் சென்றார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், லீ கெகியாங் தலைமையிலான, சீன உயர் மட்டக்குழுவும், பேச்சுவார்த்தை நடத்தியது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, மதியம், 12:30 வரை நீடித்தது.இதன்பின், இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, சீன பிரதமர் லீ கெகியாங்
கூறியதாவது:ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக, இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வதேச வர்த்தகத்துக்கு, மிகப்பெரிய உந்து சக்திகளாக, இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே, பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன; அவற்றை, மூடி மறைத்திட விரும்பவில்லை.

சுமுக தீர்வு
கடந்த கால வரலாறு, இரு நாடுகளுக்கும் இடையே, சில பிரச்னைகளை விட்டுச் சென்றுள்ளது. ஆனாலும், அந்தப் பிரச்னைகளுக்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டிய கடமை, இரு நாடுகளுக்கும் உள்ளது.இந்தியாவும், சீனாவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே, எல்லைப் பிரச்னை உள்ளது; அதை மறைக்க விரும்பவில்லை. அந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதிலும், இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.பிரம்மபுத்ரா நதியின் நீர் நிலை பற்றிய ஆய்வுகள் குறித்து, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள, சீனா தயாராக உள்ளது. பிரம்மபுத்ரா நதி என்று தான் இல்லை. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பொதுவாக உள்ள எல்லா நதிகள் பற்றியுமே, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள, சீன அரசு தயாராக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல பிரச்னைகள் உள்ளன. ஆனாலும், அவற்றை எல்லாம் கடந்து, இருதரப்பு உறவு மேம்பட வேண்டியது அவசியமானது. அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முடியும். இதில், பலமான நம்பிக்கை எனக்கு உள்ளது.
முதலீடு செய்ய சம்மதம்
இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கி, ஒரு புதிய அத்தியாயம் துவங்க வேண்டியது அவசியமான கடமையுமாகும்.மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டபடி, கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளில், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய, சீனா சம்மதம் தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே, தரை வழியாக சாலை போக்குவரத்து அமைப்பது ஏற்புடையதே. இந்த திட்டம், கிழக்கு ஆசியா பகுதிக்கு மிகப்பெரிய பயன்
அளிக்கும் என, நம்புகிறேன்.நான் பிரதமராக பதவி ஏற்றவுடன், என்னுடைய முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் எதுவாக இருக்க வேண்டும் என, யோசனை செய்தபோது, முதலில் என் மனதில் தோன்றியது இந்தியாவே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். சீனாவுக்கு இணையாக, மக்கள் தொகையையும் கொண்ட நாடு.
இந்தியா மீது காதல்
கடந்த, 27 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுக்கு வந்துள்ளேன். அப்போது, இளைஞர்கள் குழு ஒன்றுக்கு, தலைமை ஏற்று வந்தேன். ஒரு வாரகாலம் இங்கு தங்கியிருந்தேன். அப்போதே, இந்தியா மீது எனக்கு காதல் பிறந்து விட்டது. அதுதான், முதல் புள்ளி. அந்த ஆர்வமே, இப்போது பிரதமர் ஆனவுடன், முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, இந்தியாவுக்கு என்னை வரச் செய்துள்ளது.என் அழைப்பை ஏற்று, சீனாவுக்கு வர சம்மதம் தெரிவித்த, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி.இவ்வாறு லீ கெகியாங் கூறினார்.வழக்கமாக இதுபோன்ற சந்திப்புகளில், நிருபர்கள் கேள்விகளுக்கு, பதில் அளிப்பது வழக்கம். ஆனால், நேற்று, இரு தலைவர்களும் தங்களின் உரையை மட்டும் படித்து விட்டு சென்றனர்.

எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேற்று, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை:
1. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த, மூன்று செயல் குழுக்கள் அமைப்பது.
2. ஆண்டுதோறும், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை பக்தர்களுக்கு, வயர்லெஸ் செட் மற்றும், "சிம்' கார்டுகள் வழங்குவது.
3. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில், பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம், சீன அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அளவு குறித்து, இந்தியாவுக்கு தினமும் அறிக்கை அளிப்பது.
4. குறைந்த நீரில், நிறைவான பாசன வசதிக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது.
5. பரஸ்பரம், இரு நாடுகளின், இறைச்சி, மீன் போன்ற உணவுப்பொருட்களின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு.
6. இந்தியாவுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்புக்கான தொழில்நுட்பம் வழங்குவது.
7. இரு நாடுகளின் பாரம்பரிய, 25 நூல்களை மொழிமாற்றம் செய்வது.
8. இருநாடுகளின், பாரம்பரியத்துடன் இணைந்த நகரங்கள், மாநிலங்களை கண்டறிந்து, உறவை மேம்படுத்திக் கொள்வது.
இந்தியா - சீனா இடையே சாலை போக்குவரத்து: பிரதமர் மன்மோகன் சிங் தகவல்
சீன பிரதமருடனான பேச்சுவார்த்தைக்குப் பின், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:இன்றைய பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அனைத்து பிரச்னைகள் குறித்தும், ஒளிவு மறைவின்றி பேசினோம். பல முக்கிய பிரச்னைகளில், ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான, நட்பு பலப்பட வேண்டும்.சீனா - இந்தியா இடையே நல்லுறவு நிலவினால் தான், இந்த பிராந்தியத்தில், அமைதி ஏற்படும். இரு நாடுகளுமே, மிகப்பெரிய நாகரிக சமுதாயத்தை கொண்டவை. இரு நாடுகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக, பல பிரச்னைகள் உள்ளன. ஆனாலும், கடந்த, 25 ஆண்டுகளாக எந்தவொரு பிரச்னையும், வேறுபாடுகளும் ஏற்படவில்லை.கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் தாண்டி, இப்போது இரு நாடுகளின் உறவு பன்மடங்கு வளர்ந்துள்ளது. அமைதியும், நல்லிணக்கமுமே மிகவும் அவசியம். இதற்கு இரு நாடுகளுமே சம்மதம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்னைக்கு, விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.சமீபத்தில், லடாக் பகுதியில், சீன ராணுவத்தின் ஊடுருவல் நடைபெற்றது. அது, இரு தரப்புக்கும் மத்தியில், அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. அதுபற்றியும் இன்று பேசினோம்.இந்த பிரச்னை பெரியதாகி, ஒரு யுத்தம் ஏற்படும் அளவுக்கு சென்று விடாதபடி, இரு நாடுகளுமே பொறுப்புடன் நடந்து கொண்டது, மிகவும் திருப்தி அளிக்கிறது. எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, இருதரப்புமே ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில், சீன அரசின் உயர் அதிகாரிகள் இந்தியா வந்து, பேச்சுவார்த்தை நடத்துவர்.இந்தியா - சீனா இடையே, சாலை போக்குவரத்து ஏற்படுத்த வேண்டியது அவசியம். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியா - சீனா இடையே சாலை அமைப்பதற்கு, இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், சீனாவுக்கு வருகை தரும்படி, லீ கெகியாங் விடுக்கப்பட்ட அழைப்பை, நான் ஏற்றுக் கொள்கிறேன்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார். -நமது டில்லி நிருபர்-
dinamalar .com

கருத்துகள் இல்லை: