ஞாயிறு, 19 மே, 2013

கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் மட்டும் ரூ. 100 கோடி பணப்பரிமாற்றம்?

சென்னை: கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னையில் மட்டும் ரூ. 100 கோடி
அளவிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின், ஆறாவது சீசன் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், "ஸ்பாட் பிக்சிங்' என்ற சூதாட்டம் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக, கிடைத்த தகவலை அடுத்து, கடந்த, 20 நாட்களாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 13 தனிப் படையினர், சென்னையில், சைதாப்பேட்டை, அண்ணா நகர், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை உள்ளிட்ட, 13 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில், சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஷ் பஜாஜ் என்பவர் தான், சென்னையில் நடைபெறும் சூதாட்டத்துக்கு பொறுப்பாளர் என, தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், கூடுதல் தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தைச்சேர்ந்த விருத்தாசலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு கவுதம், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களின் சூதாட்ட களமாக பயன்பட்ட, சைதாப்பேட்டைமேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள, "ஹைடெக்' அலுவலகத்தில் இருந்து, 14 லட்சம் ரூபாய்ரொக்கம், 10 லேப் - டாப்கள், ஐந்து வயர்லெஸ் போன்கள், 24 மொபைல் போன்கள், நான்கு கம்ப்யூட்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்? இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் என்பவர் தென் ஆப்ரிக்காவுக்கு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த், கிரிக்கெட் சூதாட்டத்தில் பல கோடி சம்பாதித்துள்ளதாகவும், சென்னையின் புறநகர்ப்பகுதியில் சமீபத்தில் மூன்றரை கோடி மதிப்பில் வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் சூதாட்ட புகார்கள் தொடர்பான விசாரணை துவங்கியதும் அவர் தென் ஆப்ரிக்காவுக்கு எஸ்கேப்பாகியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ரூ. 100 கோடி? கிரிக்கெட் சூதாட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ரூ. 100 கோடி அளவிற்கு பணம் புழங்குவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். இவ்வளவு பெரிய பணம் புழங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், விசாரணை வளையத்தை மேலும் விரிவாக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் சூதாட்ட புரோக்கர்களை பிடிக்க ஓட்டல்கள், லாட்ஜ்கள், கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். dinamalar,com

கருத்துகள் இல்லை: