வியாழன், 15 மார்ச், 2012

மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்?

டெல்லி: ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு நேற்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது எஸ்.எம்.கிருஷ்ணா மூலம்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக கிளம்பிய திமுக தலைவர் கருணாநிதியிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது கருணாநிதி கூறுகையில், நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.
 எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் முடிவெடுப்போம் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த பேச்சால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது கருணாநிதியும், திமுகவும் திடமாக செயல்படுவார்களா அல்லது வழக்கம் போல சொதப்புவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: