திங்கள், 12 மார்ச், 2012

கீழ்வெண்மணி... குடிசைக்குள் 44 பேரும் கரிக்கட்டையா உதிர்ந்துபோனாங்க

தாழ்த்தப்பட்டவன் அவன் என்ன வயசா இருந்தாலும் மிராசுதாரர் வீட்டு புள்ள எட்டு வயசா இருந்தாலும் டேய் வாடான்னுதான் கூப்பிடுவான்
சாப்பாடு மரக்காலில் கொடுக்கப்படும். டீ குடித்தால் கழுவி வைத்துவிட்டு வரவேண்டும். செருப்பு கூடாது. வேட்டி கூடாது. சைக்கிள் கூடாது.
சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலருடன் இணைந்து நாகப்பட்டிணத்தில் இருந்து கீழ்வெண்மணி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  மதிய நேரம், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். நீண்ட பச்சை நிலப்பரப்புகளையும் சிறிதும் பெரிதுமான பல குளங்களையும் கடந்து முன்னேறினோம்.  திரும்பும் திசையெங்கும் செங்கொடி. ஒரு பக்கம் ஜெயலலிதாவும் இன்னொரு பக்கம் பிரகாஷ் காரத்தும் டிஜிட்டல் தட்டிகளில் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள்.

சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நிறைவுபெற்ற தினம் அது என்பதால் நாகை வந்திருந்த தோழர்கள் கட்சி கொடி கட்டிய வண்டிகளில் சரசரவென்று பறந்துகொண்டிருந்தனர். வெண்மணிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருக்கும் வண்டிகள் ஒரு பக்கம். வெண்மணி நோக்கி சென்றுகொண்டிருக்கும் வண்டிகள் இன்னொரு பக்கம். அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, பாதை குறுகிய ஓரிடத்தில் அனைத்து வண்டிகளும் நிறுத்தப்பட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
தஞ்சாவூரில் இருந்தும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல குடும்பங்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களில் சிலர் சாப்பாட்டு மூட்டையுடன் கால்நடையாகவே வந்திருந்தனர். சிலர் டிசம்பர் 1968-ஐ நினைவுகூர்ந்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் சிலர் அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள். சிலர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது ஊர்க்காரர்கள். ‘அப்போ நீ பிறந்திருக்கமாட்டே தம்பி…’ என்றபடி சம்பவத்தை ஒவ்வொரு கட்டமாக விவரித்துக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘குடிசைக்குள் இருந்த அந்த 44 பேரும் கரிக்கட்டையா உதிர்ந்துபோனாங்க…’ என்று சொல்லி முடிக்கும்போது அவர் குரல் தழுதழுத்துவிட்டது.
இவ்வளவு கூட்டமா? ‘டிசம்பர் 25 வந்து பாருங்கள். கால் பதிக்கக்கூட இடம் இருக்காது. பொங்கலிட்டும் குலவையிட்டும் தியாகியரை மக்கள் நினைவுகூர்வார்கள். என்ன செய்வது? அவர்களுக்கு எதையுமே கடவுளைப் போல் வழிபட்டுத்தான் வழக்கம். அவர்கள் வாழ்ந்த, கற்ற பின்னணி அது.’
கீழ்வெண்மணியை அசைபோட ஒவ்வொருவரிடமும் ஏதோ விஷயமிருந்தது. புழுதி படர்ந்த சாலையைத் தவிர்த்துவிட்டு வயல் பரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமய்யாவின் குடிசையில் ஒலிக்கும் குரல் நினைவுக்கு வந்தது. ‘சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி வயல்லே எறங்கனும். சூரியன் மறைஞ்சுதான் கரையேறனும். அதுக்கப்பறம் கூலி வாங்கிட்டு வந்து ஒன்பது மணி, பத்து மணி ஆகியிடும். துண்ட இடுப்பிலே கட்டிக்கிட்டு வேட்டிய அவுத்து அதில நெல்ல வாங்கிட்டு வந்து அந்த பச்ச நெல்ல குத்தி சமைச்சி சாப்பிடனும். சமைச்சி சாப்பிட்டு அதுக்கப்பறம், தண்ணி அடைக்கப் போகணும். வயலுக்கு கிளம்பி விடிகாலம் பரவு வந்து நாலு மணிக்கு வந்து படுக்கறாங்களோ தூங்கறாங்களோ அது தெரியாது.’
இன்னொரு குரல். ‘தாழ்த்தப்பட்டவன் அவன் என்ன வயசா இருந்தாலும் மிராசுதாரர் வீட்டு புள்ள எட்டு வயசா இருந்தாலும் டேய் வாடான்னுதான் கூப்பிடுவான்… ஒரு நா தான் மாப்பிள்ளையா இருக்கமுடியும். அவன் பொண்டாட்டியும் அவனும் மறுநாள், சாணி எடுக்கப்போயிடணும். அவன் வேலைக்கி போயிடணும். அப்புறம் மறுவீடு மாமனார் வீடு அதுஇது எல்லாம் கிடையாது. அந்த ஊர் நாட்டாமைகாரன் வருவான். இந்த வூர் நாட்டாமை அவனும் போய் பொண்ணு மாப்பிள்ளைய அங்க அழைச்சுட்டு போகணும். அய்யா கால்ல விழுந்துட்டு ஏதோ நெல்லோ காசோ கொடுப்பாங்க அதை வாங்கிட்டு வந்துடணும்.’
பெண்கள் வயலில் மீன் பிடிக்கமுடியாது. சாப்பாடு மரக்காலில் கொடுக்கப்படும். டீ குடித்தால் கழுவி வைத்துவிட்டு வரவேண்டும். செருப்பு கூடாது. வேட்டி கூடாது. சைக்கிள் கூடாது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் தொட்டு அடிக்கமாட்டார் என்பதால் குழந்தைகள் அதை ஒரு சிறப்புச் சலுகையாகக் கருதியிருக்கலாம்.
அடிமாட்டுக் கூலிதான் என்றாலும் அதையும்கூட உரிமையுடன் கேட்டுப் பெற்றுவிடமுடியாது. கொடுக்கும்போது முதுகை வளைத்து வாங்கிக்கொள்ளவேண்டியது. ‘இந்த நிலைமையை மாற்றியவர் பி. சீனிவாசராவ்!’ என்றார் தோழர். ‘சாணிப்பாலையும் சவுக்கடியையும் தலித் மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். விலங்குகளாக அடிமைப்பட்டுகிடந்தவர்கள் மனிதர்களாக நிமிர்ந்து நின்றார்கள். கம்யூனிசம் அவர்களுடைய ஊன்றுகோலாக இருந்தது.’
பத்து நிமிட நடைக்குப் பிறகு நினைவிடத்தை நெருங்கினோம். கிராம நூலகம் போல் சிறிய அளவில் வெள்ளையும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு மண்டபம். அருகில் சில கல் வீடுகளும் குடிசைகளும் இருந்தன. முகப்பில் உள்ள நினைவு ஸ்தூபியில் செங்கொடி பறந்துகொண்டிருந்தது.
குறுகலான அந்த மண்டபத்துக்குள் ஒருவர், இருவராக உள்ளே நுழைந்தோம். மிகச் சிறிய அந்த அறையில் இருபது பேருக்கு மேல் நிற்க முடியாது.
சிவப்பு வண்ணத்தில் மலர் மொட்டு போலவும் நெல் மணி போலவும் தீப்பந்தம் போலவும் நினைவு அடையாளம் எழுப்பப்பட்டிருந்தது. உச்சியில் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெல்மணிக்கதிர்களும் மலர் இதழ்களும் சுற்றிலும் தூவப்பட்டிருந்தன. பலர் உணர்ச்சி மேலிட அப்படியே நின்றுகொண்டிருந்தனர். கலங்கிய கண்களுடன் சிலர் வட்டமாகச் சுற்றி வந்தனர்.சிலர் நெல்மணிகளை இரு கைகளிலும் அள்ளி ‘இதற்காகத்தானே உயிரை விட்டீர்கள்’ என்று சொன்னபடி, கோயில் அர்ச்சனை போல் தூவிவிட்டனர். செஞ்சட்டைத் தோழர்கள் சிலர் வலக்கரத்தை மேலே உயர்த்தி வீர முழக்கம் இட்டனர். சிலர் வீர வணக்கம் செலுத்தியபடி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இடப்புறத்தி உள்ள சிறிய கதவு வழியாக வெளியேறினோம். வாசலில் அதற்குள் கூட்டம் கூடியிருந்தது. கீழ்வெண்மணிச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் பிரசுரங்களோ, சிறு பிரதிகளோ இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோழரிடம் சொன்னபோது, அவர் எதிரில் சுட்டிக்காட்டினார். நினைவிடத்துக்கு மிகச் சரியாக எதிரில், மிகப் பெரிய கட்டடம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. ‘புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் நினைவிடம் அது. அங்கே நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும். அரசியல் வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக பெரிய அறைகளும் உள்ளன. அரசியல் நூல்கள் அனைத்தும் இனி இங்கே கிடைக்கும்.’
இங்கே சிபிஎம் கட்சிக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது? ‘ஒரு காலத்தில் வலுவான கோட்டையாக இருந்தது. இப்போது அப்படிச் சொல்லமுடியாது. கம்யூனிஸ்டுகளை மிகவும் மதிக்கிறார்கள். ஆனால் ஓட்டு என்று வரும்போது திராவிட கட்சிகளின் நினைவு வந்துவிடுகிறது.’ தோழர் தொடர்ந்தார். ‘சிறிது காலத்துக்கு முன்பு, திருமாவளவன் கீழ்வெண்மணியைத் தனக்கான அடையாளமாக மாற்ற முயன்றார். சுற்றுப்பயணம் எல்லாம் செய்தார். ஆனால் அந்த முயற்சி எடுபடவில்லை.’
உழைப்புக்கு ஏற்ற கூலி அளிக்கப்படவேண்டும் என்று விவசாயக் கூலிகள் அறுபதுகளில் குரல் கொடுத்தபோது, பண்ணையார்களும நிலப்பிரபுக்களும் கோபமும் எரிச்சலும் அடைந்தனர்.  சங்கம் கொடுத்த துணிச்சல் இது என்பதால் வன்முறை கொண்டு சங்கத்தைக் கலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 25, 1968 அன்று வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இரு விவசாயிகளை மிராசுதாரர் ஒருவர் தன் வீட்டுக்கு இழுத்துச் சென்று கட்டி வைத்து உதைக்க ஆரம்பித்தார். விஷயம் கேள்விப்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து இருவரையும் மீட்டெடுத்துச் சென்றனர்.
அடிமைகளின் வெற்றி என்றல்லவா இந்தச் சம்பவத்தை வரலாறு பதிவு செய்யும்? அதை அனுமதிக்கமுடியுமா? கொதித்தெழுந்தார்கள் நிலச்சுவான்தார்கள். அவர்களில் ஒருவராக கோபால கிருஷ்ண நாயுடு தனது அடியாட்களை அழைத்துக்கொண்டு வெண்மணிக்குள் புகுந்து தென்பட்டவர்களையெல்லாம் வெறிகொண்டு சுட ஆரம்பித்தார். கோழிக்குஞ்சுகளைப் போல் சிதறியோடினார்கள் மக்கள். சுதந்தர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் அரங்கேற ஆரம்பித்தது. குண்டடிப்பட்டவர்களும் குழந்தைகளும் பெண்களும் வயதானவர்களும் உயிர் பயத்துடன் கூக்குரல் எழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தனர். தெருவின் இறுதியில் அமைந்திருந்த ராமையாவின் குடிசைக்குள் அவர்கள் ஓடியபோது, தப்பித்த நிம்மதியை அடைந்திருப்பார்கள். எட்டடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட குடிசை அது. இருப்பதிலேயே பெரிய மறைவிடம். எனவே, பாதுகாப்பானதும்கூட என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். சில நிமிடங்களில் குடிசைக் கதவு அறைந்து சாத்தப்பட்டது. மீண்டும் அவர்கள் குரல் எழுப்பி கத்துவதற்குள் கதவு பூட்டப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் குடிசை பற்றி எரிய ஆரம்பித்தது. ஆறு பேரால் வெளியில் தப்பி ஓடிவரமுடிந்தது. ஒரு தாய், தன் ஒரு வயது குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்ற வெளியில் எடுத்து வீசினாள். தீயைக் காட்டிலும் அடர்த்தியாக எரிந்துகொண்டிருந்தது வெளியில் இருப்பவர்களின் உள்மன வன்மம். தப்பி பிழைத்த அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து தீயில் வீசியெறிந்தார்கள். அப்படியும் ஆத்திரம் தீராததால், குடிசைக்கு வெளியே பயத்தில் உறைந்து கிடந்த மூன்று குழந்தைகளைப் பிடித்து அவர்களையும் நெருப்புக்குள் தள்ளினர்.
நடக்க ஆரம்பித்தோம். ஏதேதோ நினைவுகளை, சோகங்களை, கோபங்களைப் பகிர்ந்துகொண்டே உள்நுழைந்த கூட்டம் இப்போது அமைதியாக திரும்பிகொண்டிருந்தது.
0
மருதன் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: