வெள்ளி, 16 மார்ச், 2012

84 வயதில் 5வது முறையாக பஞ்சாப் முதல்வரான பர்காஷ் சிங் பாதல்

Parkash Singh Badal
சப்பார்சிரி: சிரோமணி அகாலிதள கட்சித் தலைவர் பர்காஷ் சிங் பாதல் 5வது முறையாக பஞ்சாப் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவரது மகன் சுக்வீர் சிங் பாதல் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பஞ்சாப் மாநிலத்தில் 2வது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் முதல்வராக சிரோமணி அகாலிதள கட்சித் தலைவர் பர்காஷ் சிங் பாதல்(84) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.பஞ்சாப் மாநிலத்தில் 14 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் பாதல். கடந்த 1970 மார்ச் 27ம் தேதி முதல் முறையாக பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 1977, 1997, 2007 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக பதவியேற்றார். தற்போது அவர் 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அஜித்கர் மாவட்டத்தில் உள்ள சப்பார்சிரி என்ற இடத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீல் பாதலுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பாதலின் மகன் சுக்வீர் சிங் பாதல்(50) துணை முதல்வராக பதவியேற்றார். அவருடன் 16 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

கடந்த 2007ம் ஆண்டு பாதல் முதல்வராக இருந்த போது தனது அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த முறையும் வாய்ப்பு அளித்துள்ளார். அமைச்சரவையில் 4 பேர் மட்டுமே புதுமுகங்கள்.

பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, நவ்ஜோத் சித்து ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இமாச்சலப் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமல் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவில்லை

கருத்துகள் இல்லை: