செவ்வாய், 27 மார்ச், 2012

ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்


‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்குவது என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய தனது மதிப்புரையைத் தொடங்குகிறார்  ஜெயமோகன்.

தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களில், அதிகார வர்க்கத்தின்  மனோபாவம் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற சுருக்கமான இலக்கிய  வரலாற்றுடன் நின்றுவிடாமல், அதிகாரவர்க்கத்தைப் பற்றி இதுவரை எழுதப்படாமல் விட்டதையெல்லாம் ஈடுகட்டியும், இனிமேல் எழுதப்படுபவற்றை புரிந்து கொள்ளும்படியும், அதிகாரவர்க்கத்தின் ஆளுமை, ஆணவம், அசட்டுத்தனத்தையெல்லாம் ‘பொத்தைக்கலக்கி’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளடக்கியிருந்தார் ஜெயமோகன். அதிகாரவர்க்கதைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கும் எதையும் நான் படித்திருக்கவில்லையெனினும், ஜெயமோகனின் எழுத்திலிருந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தமைக்கு  என்னுடைய கள அனுபவமே கைகொடுத்தது.
பொத்தைக்கலக்கி என்ற ஒரு வார்த்தை, என்னுடைய வாசிப்பனுபவங்களையும் களப்பணி அனுபவங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மீண்டும் கண்டடைய  உதவியது. பொத்தைக்கலக்கிகளின் கலக்கல் விதிமுறைகளை, அதன் விளைவுகளை என் மனம் தன்னிச்சையாகத் தொகுக்க ஆரம்பித்தது. களப்பணியில் நாங்கள் கையாண்ட பங்கேற்புத் திறனாய்வு (Participatory Appraisals) முறைகளெல்லாம், பொத்தைக் கலக்கிகளுக்கெதிரான எதிர்வினையாக்கமே என்றுகூடப் பட்டது.
‘சென்ற இருபதாண்டு காலத்தில் தான் சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஓர் உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை’ என்ற ஜெயமோகனின் அதிர்ச்சியே நம்மனைவரின் அதிர்ச்சியுமாகும். ‘உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்’ என்று ஜெயமோகன் சொல்லும்போது, நம்முடைய அனுபவங்களையெல்லாம் அவர் வார்த்தை வடிவில் கட்டமைக்கும்போது, நமக்கான வார்த்தைகளைத் தந்தமைக்காக, அவரை நன்றியுடன் பார்க்கப், படிக்கத் தோன்றுகிறது.
பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்களாகவோ, கேட்கும் திறன் குறைந்தவர்களாகவோ, Selective Amnesia என்பதுமாதிரி Selective Hearing Loss என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால், ‘ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்’ என்று ஜெயமோகன் தொடரும்போது, அது ஜெயமோகனின் வார்த்தைகளாக  நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.
‘அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்னையின் விளைநிலம் பற்றியோ, அதன் உள்ளோட்டங்கள் பற்றியோ எதுவுமே தெரியாவிட்டாலும், கலக்குவதை மட்டும் தொடர்ந்து செய்கின்றார்கள். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அவர்களின் கலக்கல் முறைகள் சிக்கலானவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை’ என்று ஜெயமோகன் இரண்டே வரிகளில் நம்மில் பலரின் பல்லாண்டு அனுபவங்களை வடித்தெடுத்து விடுகின்றார்.
செயலற்றதாக ஆகிவிட்ட குடிமைச் சமூகத்தை, செயலூக்கம் பெற்றதாக ஆக்க, அதிகாரிகளின் கண்ணோட்டத்தில் அல்ல, இரையின் கண்ணோட்டத்தில் பார்க்க எத்தனையோ முறைகள் உருவாகி வடிவெடுத்துள்ளன. எப்படித்தான் கலக்கியெடுத்தாலும், அந்தக் கலங்கலிலும் தெளிவாகப் பார்க்க அம்முறைகள் (பங்கேற்பு ஊரகத் திறனாய்வு, மற்றும் அதைச் சார்ந்த பலப்பல நுண் உத்திகள்) நடைமுறையில் உதவினாலும், இன்னும் வேகமாகக் கலக்கி எல்லோரையும் மூச்சுத் திணற வைப்பதில் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் திறமையே அலாதியானதுதான்.
அவர்கள் விதவிதமாகக் கலக்குகிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் ‘ராஜகலக்கல்’. இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் பாவம்தான். யாராலும் புரிந்து கொள்ளப்படாது என்று நினைத்து அவர்கள் கலக்கும்போது, அந்தக் கலங்கல்களில் அவர்களே மறைந்தும், கரைந்தும், மூச்சுத்திணறிப் போவதும் மிகப்பெரிய  துரதிருஷ்டம்தானே!
பங்கேற்பு ஊரகத் திறனாய்வில், சப்பாத்தி வரைபடம் (Venn Diagram) என்று ஒரு முறையுள்ளது. ஓர் ஊரோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவை செய்யும் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றி, மக்களின் மதிப்பீடுகளை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அறிய உதவும் ஓர் உத்தி. தங்கள் ஊர் சம்பந்தப்பட்டதென அவர்கள் பல அரசு நிறுவனங்களை அடையாளப்படுத்தினாலும், 90 சதவீத கிராமங்களில், ‘கவர்ன்மெண்ட் மசுரு எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு: ஒன்னுங் கிடையாது’ என்றுதான் ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் மேலும் மேலும் உரையாடும் போதுதான் தெரியவரும் ‘கவர்ன்மெண்ட் மசுரு’ அவர்களுக்கு என்னென்னமோ செய்திருந்தாலும், அதிகாரவர்க்கம்  கலக்கிய கலக்கலில், அரசே கரைந்தும், மறைந்தும் போய்விட்டதென்பதை. ஓர் அரசு கரைவதும், மறைவதும் தவறுகளை, திறமையின்மையை மறைக்க வேண்டுமானால் உதவியாயிருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமான சமூக மாற்றுருவாக்கத்திற்கு உதவாது.
ஒரு சின்ன உதாரணத்திலிருந்து ஆரம்பிப்போம். 200 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். ஐம்பத்தைந்து மாணவர்களைக்கொண்ட ஈராசிரியர் பள்ளி. ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 45-50 ஆயிரம் ரூபாய் வரை, வருடத்துக்கு ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை ஆகலாம். அப்பள்ளிகளை கண்காணிக்க ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அதிகார அடுக்குகள். அதற்காக ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகலாம். பள்ளிக் கட்டடங்கள், அதன் பராமரிப்பு, இலவச பாடப் புத்தகங்கள் என்று ஆகும் செலவுகள். ஈராசிரியர் பள்ளி நடத்தவே எட்டு லட்சத்துக்கு மேலாகலாம். இது தவிர, மதிய உணவு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இலவச பஸ் பாஸ், விதவிதமான கல்வி உதவித்தொகை…. என்று நீள்கிறது பட்டியல். இவ்வளவு செய்தும் உள்ளூர்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் கடன் வாங்கி, நன்கொடை அழுது,  வேன் ஏற்றி வெளியூர் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றால், அது பெற்றோர்களின் அறியமையா, அல்லது கலங்கலின் அடையாளமாக அவர்கள் காணும் ஆரம்பப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை மூச்சுத்திணற வைத்து விடுவார்களென்ற எச்சரிக்கை உணர்வா? பயமா?
அதே ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, இன்று வரை பல்வேறு பெயர்களில் கட்டப்பட்டு வரும் காலனி மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்கள், இலவச மின்சாரம் – வீடுகளுக்கும், விவசாயத்துக்கும் வகை வகையான மானியங்கள், நலத் திட்டங்கள். ஊருக்கு மாதம் நான்கு லட்சத்துக்கு மேல், வருடத்துக்கு 50 லட்சம் வரை வரும் முதியோர் உதவித்தொகை, பொது வினியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், பஞ்சாயத்து, தாலுகா, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, ஆரம்ப சுகாதாரம்,  கால்நடைத்துறை பொதுப்பணித்துறை, காவல் என்று உள்ளடக்கிய 23 க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியாக இல்லாவிட்டாலும், பகுதி/வட்டார அளவில் செய்யப்படும் செலவில் அக்கிராமத்துக்கான பங்கு – உத்தேசமாகக் கணக்கிட்டாலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வருடமும் கோடிகளைத் தாண்டும். இவ்வளவு செலவு செய்தும், ‘கவர்ன்மெண்ட் மசுரு’ எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு என்று அவர்கள் கேட்டால், அரசாங்கம், அதிகார வர்க்கம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? இதை எப்படி எடுத்துக் கொள்வது? வலது கையினால் கொடுப்பது இடது கைக்குக் தெரியலாகாது என்ற அதிகார வர்க்கத்தின் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்வதா? இல்லை, அவர்கள் கலக்கிய கலக்கலில் அவர்களே கரைந்து போய்விட்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா?
3000-5000 ரூபாய் சம்பளத்தில், நான்கைந்து கிராமங்களுக்குப் பொதுவாக ஓர் ஊழியரை மட்டும் பணியிலமர்த்தி, சில சில்லறைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஓர் உப்புமா தொண்டுநிறுவனத்தைக் குறிப்பிட்டு, “அவர்கள் தாம் எங்களுக்கு எல்லாமும்” என்று சொல்லும்போது, பேரதிகாரமும், பெரும்பொருளுமிக்க அரசையே மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் அதிகார வர்க்கத்தின் கலக்கல் சாமர்த்தியத்தை யாரிடம் சொல்லி முட்டிக்கொள்ள?
மாதம் நூறிலிருந்து நூற்றைம்பது வரை சளைக்காமல் கேபிள்காரனுக்கு தரும் சாதாரண பொதுஜனங்கள், வீட்டு வரி தண்ணீர் வரியைக்கூட கட்டுவதற்கு சலிப்படைவது எதனால்? அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களை எடுத்துக்கொள்வோம். எம்எஸ், எம்டி போன்ற உயர்கல்வி படித்த மருத்துவர்களும் முறையாகப் பயிற்சி பெற்ற செவிலியர்களும் அங்கே இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சட்டென்று மக்களின் கவனத்துக்கு அவர்களால் வரமுடியவில்லை. “உடம்புக்கு முடியலேன்னா, மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கிச் சாப்பிடுவோம். ஒருக்க வாங்கிச் சாப்பிட்டாலே சரியாயிடும்”  என்று சொல்லும்போது, முறையாகப் படிக்காமலே மருந்துகளைக் கையாளும் ஒரு மருந்துக் கடைக்காரனின் செல்வாக்குக்கு முன்னால், அதிகார வர்க்கம் மட்டுமல்ல நாமனைவரும் மண்டியிடத்தான் வேண்டியுள்ளது.
இதையெல்லாம் அதிகார வர்க்கம் தனது அறியாமையால் செய்கிறதா என்றால் இல்லை. ஜெயமோகன்  சொல்வது மாதிரி அவர்கள் செவியற்றவர்களாகிவிட்டார்கள். கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்கள்.  அவர்கள் மட்டுமல்ல, நம் எல்லோருடைய கேட்கும் திறனையும் சற்று அதிகப்படுத்த உருவான செவுட்டு மிஷன்தான் பங்கேற்பு முறைகள். அதன் வலிமையே எந்த முன் அனுமானமும் இன்றி மக்கள் சொல்வதைக் கேட்பதுதான். பிரச்னைகளையும், தீர்வுகளையும் அவ்வாறுதான் கண்டறியமுடியும். மக்களைப் பேசவைக்கவேண்டும். அவர்கள் பேசுவதை அவர்களை வைத்தே தொகுக்க வைக்கவும் வேண்டும். அதற்கு சுவாரஸ்யமான முறைகளைக் கையாளவேண்டும்.
மக்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால், பல பிரச்னைகளுக்கு எளிமையான, சிக்கனமான தீர்வுகளைக் கையாண்டிருக்கமுடியும். பங்கேற்பு முறைகள் வலியுறுத்துவதும் அதைத்தான். பங்கேற்பு முறைகள் ஆய்வு முறைகள் மட்டுமல்ல. சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவும் ஞானத் திறவுகோலும்கூட.
0
பேரா. எஸ்.ரெங்கசாமி

கருத்துகள் இல்லை: