சனி, 31 மார்ச், 2012

வெளிமாநில கூலிப்படை ஊடுருவலா? ராமஜெயம் கொடூர கொலை?

திருச்சி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும்போது, அதை செய்தவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராமஜெயம், நேற்று முன்தினம் காலை வாக்கிங் செல்லும்போது கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கல்லணை செல்லும் வழியில், திருவளர்ச்சோலை என்ற இடத்துக்கு முன் சாலையோர முட்புதரில், கொலையாளிகள் வீசிவிட்டு சென்றனர். ராமஜெயம் உடல், போலீசாரால் மீட்கப்பட்டு, நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்குப் பின், நேற்று காலை 11 மணிக்கு திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட ராமஜெயம், எந்த விதத்திலும் தப்பிவிடக்கூடாது என்று அதீத முன்னெச்சரிக்கையாக கொலையாளிகள் செயல்பட்டுள்ளனர். அவரது கை, கால், முட்டிக்கால் ஆகிய இடங்கள் கட்டுக்கம்பி கொண்டு கட்டியும், டேப்பால் இறுக்க சுற்றியும் உள்ளதிலிருந்து, கொலையாளிகளின் செயல் அப்பட்டமாகி உள்ளது.வாயில் துணியை வைத்து அடைத்து, கட்டையால் அடித்தும், உயிர்பயத்தை ஏற்படுத்தி, மிகவும் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கை, கால்கள் கம்பி மற்றும் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் புதிதாக இருந்ததால், யார் கொலையாளி என்பதை தெரிந்து கொள்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும்போது, "உள்ளூர் கூலிப்படையினர் செய்ய வாய்ப்பில்லை; வெளிமாநில கொலையாளிகள் தான் செய்திருக்க வாய்ப்புள்ளது' என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலையில் வெளிமாநில கூலிப்படையினர் தொடர்பு உள்ளதா அல்லது வெளிமாநிலத்தில் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் புதிதாக உள்ளது. ஏனென்றால், வெளிமாநில கூலிப்படையினர் மட்டும் தான், இது போன்ற ஸ்டைலில் கொலை செய்வர். ஒன்று இந்த சம்பவத்தில் வெளிமாநில கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம், அல்லது வெளிமாநில கூலிப்படையினரிடம் பயிற்சி பெற்ற தமிழக கூலிப்படையினர் செய்திருக்கலாம்.ஆனால், தொழில்முறை கூலிப்படையினர் தான், மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு கொலையை செய்துள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் வெளிமாநில கொள்ளையர்கள் ஊடுருவி உள்ளது சென்னை என்கவுன்டர் சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது.இந்நிலையில் ராமஜெயம் கொலையால் வெளிமாநில கூலிப்படையினரும் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராமஜெயம் மும்பையில் தொழில் செய்து வருவதால், அங்கு ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, வெளிமாநில கூலிப்படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.அதேசமயம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதி கூலிப்படையினரும் கை, கால்களை கட்டி, டேப் ஓட்டி கொலை செய்து, கடலில் வீசிவிடுவர். அதே பாணியை பின்பற்றி, ராமஜெயத்தை ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு போலீசாருக்கு மிகவும் சவாலான வழக்காகத்தான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மனைவியிடம் இன்று போலீஸ் விசாரணை: ராமஜெயம் நேற்று முன்தினம் வாக்கிங் செல்லும் போது கடத்திச் செய்யப்பட்டதாக கூறப்படும் நேரத்துக்கும், பிரேத பரிசோதனையில் இறந்த நேரமாக கூறப்பட்டுள்ள நேரத்துக்கும் வித்தியாசம் அதிகம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.உண்மையில் ராமஜெயம் வாக்கிங் செல்லும் போது தான் கடத்தப்பட்டரா அல்லது அதற்கு முன்னரே கடத்தப்பட்டரா என்ற உண்மை நிலை குறித்து, ராமஜெயம் மனைவி லதாவிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.நேற்று உடல் தகனம் நடந்துள்ளதால், இன்றோ அல்லது நாளையோ அவர் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்பின் தான் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று போலீஸார் நம்புகின்றனர்.

கொடுத்து வைத்த பணத்தை கேட்டதால் கொலை?ராமஜெயம் மிகப்பெரும் தொழிலதிபராக இருந்தார். கிரானைட், இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம், ரியல் எஸ்டேட் என்று பல தொழில்கள் புரிந்த அவர், பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகவும் இருந்தார்.இவருடைய சகோதரர்களும் பல தொழில்கள் செய்து வந்ததால், திருச்சியின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராகவும் ராமஜெயம் திகழ்ந்தார். தி.மு.க., ஆட்சியில், தமிழக மின்வாரியத்துக்கு, இந்தோனேசியாவில் உள்ள ராமஜெயத்தின் சுரங்கத்தில் இருந்து தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது, தன் சகோதரர் நேருவுக்கும், தன் குடும்பத்தார் மீதும் வழக்குகள், சோதனைகள் வரும் என்பதை கணித்த ராமஜெயம், தன்னிடம் உள்ள பெரும் பணத்தை, திருச்சியில் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்து வைத்ததாகக் கூறப்படுகிறது."தற்போது அந்த பணத்தை கேட்டதால் தான், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்று பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர்கள் இருவரை பண விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமஜெயம் கொலையில் மதுரை கூலிப்படைக்கு தொடர்பா? தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையில், மதுரை கூலிப்படைக்கு தொடர்பு உண்டா என, சிறப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் "வாக்கிங்' சென்ற ராமஜெயத்தை, சிலர் கடத்திச் சென்று, கொலை செய்தனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால், அவரை, மதுரை கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவே ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு (ஓ.சி.ஐ.யூ.,) போலீசார் விசாரணையை துவக்கினர். அவர்கள் கூறியதாவது:முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, கிருஷ்ணன் "வாக்கிங்' சென்ற போது தான், மதுரை கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டனர். அதே போல, ராமஜெயத்தையும் கொலை செய்திருக்கலாம் என விசாரிக்கிறோம். "மாஜி' அமைச்சர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை, தொடர்ந்து கண்காணிக்கிறோம்.இதுவரை தலைமறைவாகாமல் அவர்கள் மதுரையில் தான் உள்ளனர். இதனால், இவர்களுக்கும், ராமஜெயம் கொலைக்கும் தொடர்பில்லை என்றே கருதுகிறோம். இருப்பினும், வேறு கோணங்களிலும் விசாரிக்கிறோம் என்றனர்.

தி.மு.க., முக்கிய புள்ளிகள் ஆஜர்:ராமஜெயத்தின் உடல், தில்லை நகர், 10வது கிராசில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.மத்திய அமைச்சர் அழகிரி, அவரது மனைவி காந்தி, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, மத்திய இணையமைச்சர்கள் பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான பாலு, எம்.பி.,க்கள் சிவா, விஜயன், ராமலிங்கம் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை, 10.40 மணிக்கு பிரமாண்ட மலர் பல்லக்கில் ராமஜெயத்தின் உடல் வைக்கப்பட்டு, தில்லை நகர், சாலை ரோடு, கல்லூரி சாலை, சத்திரம் பஸ் ஸ்டாண்ட், எஸ்.ஆர்., கல்லூரி வழியாக ஓயாமரி சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.ஓயாமரி சுடுகாட்டில் ராமஜெயத்தின் குல வழக்கப்படி மதியம், 12.15 மணிக்கு இறுதி காரியங்கள் செய்யப்பட்டு, அவரது மகன் வினீத், சிதைக்கு, "தீ' மூட்டினார். மத்திய அமைச்சர் அழகிரி, ஓயாமரி சுடுகாட்டில் ராமஜெயத்தின் உடல் தகனம் செய்யும் வரை உடனிருந்தார்.

ராமஜெயம் கொலையாளிகளை நெருங்கிய போலீஸ்? மொபைல்போன் பேச்சு மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வாகனங்கள் மூலம், இரண்டொரு நாளில், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தை கொன்ற கொலையாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.அரசியலிலும், தொழிலிலும் கோலோச்சி வந்த ராமஜெயம் கொலை செய்யப்பட்டது, நேருவின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள், திருச்சி மாவட்ட தி.மு.க.,வினர் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமஜெயம் கொலை வழக்கை பொறுத்தவரை, போலீசாருக்கு முக்கிய தடயங்களாக இருப்பது, கொலையான ராமஜெயத்தின் மொபைல்போன்களிலிருந்து, கொலையாளிகளில் ஒருவர், அவரின் மனைவி லதா, கேர் கல்லூரி கேன்டீன் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், புழுதேரியில் உள்ள விவசாயப் பண்ணையை கவனித்துக் கொள்ளும் அனுராதா ஆகியோருடன் பேசியதாகும். தவிர, ராமஜெயத்தை கடத்தியதாகக் கூறப்படும் வேனோ, காரோ, மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்கியிருக்கும் என்பதும், போலீசாரிடம் முழுமையான தடயமாக உள்ளது. அதனால், கே.டி., தியேட்டர் மற்றும் மாம்பழச் சாலை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வாகனங்களை, போட்டோக்களாக மாற்றும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவற்றின் மூலம், கொலையாளிகளை இன்று மாலைக்குள் அடையாளம் கண்டு விடுவோம் என்று, போலீசார் நம்பிக்கையுடன் உள்ளனர்.நேற்று முன்தினமும், நேற்றும் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தனிப்படை போலீசாருடன், நேற்று காலையும், மாலையும் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த ஆலோசனையில், கொலையாளிகளை நெருங்கி விட்டோம் என, போலீஸ் அதிகாரிகள் பேசியது குறிப்பிடத்தக்கது.

வேன் சந்தேகம் நீங்கியது : "இந்நிலையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு இரண்டு கி.மீ., தொலைவில், பனையபுரம் என்ற இடத்தில் கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற டெம்போ டிராவலர் வேன் (எண்: டி.என்., 07 கே 8136) நிற்பதாக கிடைத்த தகவல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, அந்த வேன், திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது என தெரியவந்தது. அந்த வேனை, ஜெபக்கூட்டத்துக்கு வரும் மக்களை அழைத்துச் செல்ல பாதிரியார் பயன்படுத்தியதும் தெரியவந்தது.இதையடுத்து, ராமஜெயம் கொலைக்கும், பனையபுரத்தில் நின்ற வேனுக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: