திங்கள், 26 மார்ச், 2012

TN Budget ஸ்ரீரங்கம், பழனி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்

சென்னை: தற்போது 468 திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் 2012-2013ம் ஆண்டில் மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலிலும், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

சுற்றுலா வாய்ப்புகளைக் கண்டறிந்து முழுமையாக பயன்படுத்திட, மாநில அளவிலான தொலைநோக்கு சுற்றுலா திட்ட அறிக்கை ஒன்றை இந்த அரசு தயாரிக்கும். சிறப்பு சுற்றுலா பகுதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள முட்டுக்காட்டில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை ஒன்றை இந்த அரசு தயார் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில், கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் சிறப்பு சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்திட, வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவது குறித்தும் இந்த அரசு பரிசீலிக்கும்.

2011-2012ம் ஆண்டு 1,006 திருக்கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குட முழுக்கு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று வரும் ஆண்டிலும் 1,006 கோவில்கள் தெரிவு செய்து குட முழுக்கு செய்யப்படும்.

முதல்வர் சிந்தையில் உதித்த உன்னதத் திட்டமாகிய அன்னதானத் திட்டம் தற்போது 468 திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2012-2013ம் ஆண்டில் மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கோவில்களிலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும் வகையில், சமையற் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலிலும், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் அளித்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக, குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு வசதியான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கம்பி வட சீருந்து வசதி ஏற்படுத்தப்படும்.

இன்னொரு சிறப்பு முயற்சியாக, நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதி நெறிக் கருத்துக்களை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்படுத்திட சனிக்கிழமை தோறும் ஆன்மீக, நீதி நெறி வகுப்புகளை முக்கிய திருக்கோவில்களில் நடத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்படும்.

தமிழ் அறிஞர்களுக்கு 3 புதிய விருதுகள்:

பெரும் தமிழ் அறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது என்ற இரண்டு புதிய விருதுகளும், தமிழ் தொழில் வளர்ச்சிக்காக நமது நாட்டில் அருந்தொண்டாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருதும் வழங்கப்படும்.

தமிழுக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கு தமிழ் பேரறிஞர்களின் பெயரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவைகளோடு சேர்த்து மேற்குறிப்பிட்ட மூன்று விருதுகளும் புதிதாக வழங்கப்படும்.
விருது பெறுவோருக்கு, தலா 1 லட்சம் ரூபாயும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை சான்றிழும் வழங்கப்படும்.

காமராஜர் இல்லம், மண்டபம் புதுப்பிப்பு:

கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மண்டபத்தையும், சென்னையில் உள்ள காமராஜர் இல்லத்தையும் புதுப்பிப்பதற்கான பணிகளை 2012-2013ம் ஆண்டில் இந்த அரசு மேற்கொள்ளும்.

இளைய தலைமுறையினரின் திறனை மேம்படுத்தும் வகையில், 2012-2013ம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆர். திரைப்பட தொலைகாட்சிக் கல்லூரியில், உயிர்ப்பூட்டல் காட்சிப் பயன் பற்றிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: