வியாழன், 29 மார்ச், 2012

மீண்டும் உடன்பிறவா சகோதரிகள்…நிஜமான காரணம்

“மிடாஸ் மோகன் கைதுதான் திருப்புமுனை” என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, “சசிகலா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடைசி சில தடவைகள் ஆஜரான போதே, கதையில் திருப்பம் வந்து விட்டது” என்கிறார்கள்.
  விளக்கம் எப்படியோ, காரணம் எப்படியோ, சசிகலாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது. மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சசிகலாவின் உருக்கமான அறிக்கை இன்று (புதன்கிழமை) எந்த மீடியாவில் வெளியானது என்பதைக் கவனியுங்கள், அதுவே சொல்லும் ஆயிரம் கதைகள். “அவருக்கு (ஜெயலலிதாவுக்கு) நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை” என்று கூறும் சசிகலாவின் அறிக்கை ஜெயா டி.வி.யில் படிக்கப்பட்டது.
போயஸ் கார்டனில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காமல், ஜெயா டி.வி.யில் இப்படியொரு அறிக்கை வெளியாக முடியாது.

தமக்கிடையே இருந்த எமோஷனலான நீண்ட நாள் உறவு பற்றிக் குறிப்பிடுகிறது சசிகலாவின் அறிக்கை. “முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளேன். 88 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்”
அ.தி.மு.க. ஆட்சியில் சசிகலா சின்டிகேட் உறுப்பினர்களின் தலையீடுகள், மறைக்க முடியாத அளவுக்கு வெளிப்படையாக நடந்தவை. சசிகலாவின் இன்றைய அறிக்கையும், “அப்படி எதுவும் நடக்கவில்லையே” என்று மறைக்க முயலவில்லை.
அவரது அறிக்கையில், “போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்களும், நண்பர்களும் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெயலலிதா ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. உறவினர்கள் பல குழப்பங்களை உருவாக்கினர். ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது” என்ற பார்ட், நடந்ததை ஒப்புக்கொள்ளல்.
கன்க்ளூஷன் என்ன? “ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஏற்கனவே அவருக்கு (ஜெயலலிதாவுக்கு) எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல், முதல்வருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்”
கணவர் உட்பட, உறவினர்களில் சிலர் கைதாகி சிறையில் இருக்கும் நேரத்தில்… பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் பற்றி வாக்குமூலம் கொடுக்கத் துவங்கியுள்ள நேரத்தில்… வெளியான அறிக்கை இது. பல்வேறு விதமான பாஸிபிளிட்டிகளை கூறக்கூடிய அறிக்கை.
ஒரு எக்ஸ்ட்ரீம் பாஸிபிளிட்டியாக, தாமும் (சசிகலா) கைதாவதை தடுக்கும் முயற்சியில் செய்யப்பட்ட சரணாகதி என்று சொல்லவாம். இதற்கு தலைகீழான எக்ஸ்ட்ரீம் பாஸிபிளிட்டி என்ன? They took the people of Tamil Nadu for a ride.
நிஜமான காரணம், மேலே குறிப்பிடப்பட்ட இரு எக்ஸ்ட்ரீம் சாத்தியங்களுக்கும் இடையே, எங்கோ இருக்கும்.
திடீரென சசிகலாவின் அறிக்கை வெளியாக வேண்டிய அவசியம் என்ன? அது ஜெயா டி.வி.யில் எப்படி வெளியானது? சசிகலா சொல்லியிருப்பதுபோல, தனது ஆட்களை ‘வெட்டிவிட்டு’ ஜெயலலிதாவுடன் இணையப் போகிறாரா? முழுமையான விபரங்கள் உடனடியாக கைவசம் இல்லை. கைவசம் இருப்பவை, சில தகவல்கள், சில சந்தேகங்கள், சில ஊகங்கள்… கிளீன் ஸ்லேட்!
எமது உடனடி ஊகம், மிடாஸ் மோகன் கைதுதான் திருப்புமுனை என்பதே! எமக்கு கிடைக்கத் துவங்கியுள்ள தகவல்களும், அந்த ரூட்டிலேயே எம்மை இழுத்துச் செல்கின்றன. சசிகலாவின் அறிக்கையில் உள்ள வாக்கியங்களை கவனியுங்கள். அவற்றில் நிச்சயம், ஜெயலலிதாவின் டச் இருக்கிறது. இந்த எழுத்துநடை, பரிச்சயமான ஒருவரின் (ஜெயலலிதா அல்ல) எழுத்துநடை.
அறிக்கையில் உள்ள ஒரு வாக்கியத்தை கவனியுங்கள். “போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்களும், நண்பர்களும் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர்…” இந்த வாக்கியத்தில் “நண்பர்களும்” என்ற சொல் கொஞ்சம் லூசாக உள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்று பாருங்கள். நடராஜன், ராவணன், திவாகரன், மிடாஸ் மோகன்… இந்த லிஸ்டில், முதல் மூவரும் உறவினர்கள் என்ற பிரிவுக்குள் வருகிறார்கள். உறவு முறைக்கள் வராத ஒரே நபர், மோகன். அறிக்கையில் கூறப்பட்ட ‘நண்பர்’ அவர்தான்!
மிடாஸ் மோகன் கைது தொடர்பாக இன்று காலை நாம் வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியின் முடிவில், “மிடாஸ் விவகாரம் மேலிடம்வரை போய்விட்டது என்பது சசி சின்டிகேட்டுக்கு புரிந்து விட்டால், பலருக்கு கிடுகிடுக்கும். கம்ப்ரமைஸ்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள், அறிக்கைகள், எல்லாம் அடுத்த சில தினங்களில் பாய்ந்து வரத் துவங்கும்!” என்று முடித்திருந்தோம்.
அறிக்கை இன்றே வந்துவிட்டது. கொஞ்சம் பொறுங்கள், முழுமையான காரணங்களை ஓரிரு நாட்களுக்குள் தெளிவாக தருகிறோம்.
சசிகலா தனது அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளேன். 88 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும்  ‘ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என்று கடந்த 1996-ல் பிரிந்திருந்தனர். பிரிந்த தேதியில் இருந்து, 100-வது நாள் இருவரும் சேர்ந்து கொண்டனர்.
இம்முறை சசிகலா போயஸ் கார்டனில் இருந்து ‘வெளியேற்றப்பட்ட’ தேதியில் இருந்து இன்று (புதன்கிழமை) சரியாக 104-வது நாள்!

-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி.

கருத்துகள் இல்லை: