புதன், 28 மார்ச், 2012

துறையூரில் நில அதிர்வு பெரம்பலூரிலும் பதட்டம்

துறையூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியதால், பதட்டம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில், நேற்று காலை, 10.23 மணிக்கு லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர். வீட்டிலிருந்த பெண்களும், முதியவர்களும், பெரும் பதட்டமடைந்து, தங்கள் வீடுகளில் இருந்து வீதிக்கு ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம், நிலஅதிர்வு குறித்து விசாரித்தனர். வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் உட்பட இதயநோயாளிகள், இந்த நில நடுக்கத்தில், லேசான பதட்டத்துக்கும், படபடப்புக்கும் உள்ளாகினர். இந்த உணர்வும், பதட்டமும், துறையூர் சுற்றுப் புறங்களிலும் உணரப்பட்டது.
பச்சமலை கிராமங்களில் குறிப்பாக டாப் செங்காட்டுப்பட்டியில் ரேஷன் கடையில் பொருள்கள் கீழே விழுந்தன. பெரும்பாலான வீடுகளில், சுவர்களில் லேசான விரிசல் காணப்பட்டது. பள்ளிகளில் நிலநடுக்கத்தை உணர்ந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் உடனடியாக திறந்த வெளிப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, பெற்றோர் பள்ளிக்கு வந்து பிள்ளைகளை பதட்டத்துடன் அழைத்து சென்றனர். பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

* இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நேற்று நில லேசான அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து, வீடுகளிலிருந்து வெளியில் ஓடிவந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்குன்று, மலையாளப்பட்டி, சின்னமுட்லு உள்ளிட்ட கிராமங்களில், நேற்று, 11 மணியளவில், நில அதிர்வு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: