புதன், 28 மார்ச், 2012

விரட்டல், மிரட்டல், கண்ணீர், கெஞ்சல், சரணாகதி, சந்திப்பு… எல்லாம் பிரமை!

சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா விரட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், நம்மிடம் ஒரு மூத்த நிருபர் (அதிமுக அலுவலக பீட் பார்ப்பவர்) சொன்னது, ‘ஆரம்பிச்சிடுச்சி அடுத்த எபிசோட்… ஒரு மூணு மாசத்துக்கு தாங்கும்,’ என்றார் கிண்டலாக!அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது!

உண்மையில் ஜெயலலிதாவை அறிந்த யாரும் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டார் என்பதை நம்பவில்லை. ‘ம்ம்.. நடக்கட்டும்… கொஞ்சநாள் போனதும் ரெண்டுபேரும் ஒண்ணா போஸ் தருவார்கள்’ என்பதுதான் சலூன்கடை அரசியல் ஆர்வலர்களின் பேச்சாகவும் இருந்தது.
ஆனால் இந்த பிரிவுக்குப் பின்னணியில் இருந்த பேரங்கள், உடன்பாடுகள், சமாதானப் படலங்கள் அல்லது ஜோசியக் காரணங்கள் தெரியாமல் அவரவர் இஷ்டத்துக்கு அடித்துவிட்டனர்.

சில நாளிதழ்கள் ஜெயலலிதாவின் திடீர் ஆலோசகர்கள் போல ‘சசி குறித்து அவர் இதைச் சொன்னார், அதைச் சொன்னார், இப்படி நினைக்கிறார், இந்தத் திட்டமிடுகிறார்’ என எழுதித் தள்ளின.
இன்னொரு பக்கம் ‘இந்த நாடகங்களுக்கெல்லாம் இவர்தான் ஸ்கிரிப்ட் ரைட்டர்’ என அவரவருக்குத் தோன்றிய பெயர்களை சொல்லிக் கொண்டனர்.
ஆனால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சசிகலா சொல்ல வேண்டியதை கிட்டத்தட்ட சொல்லிவிட்ட சூழலில், சசி உறவினர்கள் மேல் மேம்போக்கான சில வழக்குகள் பாய்ச்சப்பட்டு, இப்போது ஒவ்வொருவராக ஜாமீனில் வரும் சூழலில் சசிகலாவின் அறிக்கை வந்தது. அதாவது அவருக்கும் ஏறத்தாழ இது ஒரு ஜாமீன் வாப்புதான்!
இந்த அறிக்கையின்படி, என் பெயரைப் பயன்படுத்தி உறவினர்கள் விளையாடிவிட்டார்கள். இதற்கும் எனக்கும் பொறுப்பில்லை. எனவே நான் மட்டும் இப்போதைக்கு சேவகம் செய்ய வருகிறேன் அக்கா என கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் சசிகலா.
ஏற்கெனவே ஏற்கப்பட்டுவிட்ட மனு இது. அடுத்தடுத்த பாசக் காட்சிகள் பல இந்த சீரியலில் அரங்கேறும் என்று தெரிகிறது. சசிகலா என்ற ‘ஒன்று’ முதலில் கார்டனுக்குள் செல்லட்டும்…. பூஜ்யங்களை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் வழக்கமான திட்டமாக இருக்கலாம்.
அதன்படியே, இன்று முதல்வர் ஜெயலலிதாவை – தன் அக்காவை- போயஸ் கார்டனில் சந்தித்துவிட்டார் சசிகலா. ஆக எல்லாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.
இன்று ஜெயா டிவியில் சசிகலாவின் அறிக்கை விவரம் வெளியான போதே இதையெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்டது. அது ஒவ்வொன்றாக நடந்து வருகிறது!
ஆக, ‘கட்டம்’ கட்டிய இடத்திலேயே மீண்டும் கட்டடம் கட்டி குடியேறுகிறார் சசி!
இவர்களையும் நம்பி ஆதரிக்க ஒரு கும்பலிருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றல்லாமல், வேறென்ன சொல்ல!
குறிப்பு: இன்னும் கூட சில திடுக்கிடும் திருப்பு முனைகள் கொண்ட காட்சிகள்  உருவாகலாம், அரங்கேறலாம். பார்த்து ரசிக்க தயாராகுங்க!

கருத்துகள் இல்லை: