புதன், 18 ஜனவரி, 2012

ஜால்ராக்கள்தான் ராமதாஸுக்குப் பிடிக்கும்!'வேல்முருகன் பாய்ச்சல்..


'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, பொங்கல் அன்று புதிய கட்சியைத் துவங்கி இருக்கிறார் வேல்முருகன். கட்சியின் பெயர் 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சி’. அதாவது டி.வி.கே. அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து...


''தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஏராளமான கட்சிகள் இருக் கின்றன. எதைச் சாதிக்க இந்தப் புதிய கட்சி?''

'' கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக்கொண்டு ஒரு கட்சிக்காக உழைத்தேன். ஆனால், விளக்கம்கூட தராமல் வெளியேற்றினார்கள். என்னை நேசித்த மக்கள், தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியலை உருவாக்கும் வகையில் ஒரு புதிய கட்சியைத் துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதனால், கட்சியைத் துவக்கினேன்.
தமிழர்களின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமைகளான கச்சத் தீவை மீட்பது; காவிரி, முல்லைப் பெரியாறுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது; சிங்களப் படையினரால் சிதைக்கப்படும் மீனவரைக் காப்பது; ஈழ மக்களுக்காகப் பாடுபடுவது... இவையே என் கட்சியின் நோக்கங்கள்!''

''பயிர்களும் உயிர்களும் அழிந்து மயானக் காடாக இருக் கிறது உங்கள் சொந்த மண். ஒரு வேளை உணவுக்காக அங்கு மக்கள் கையேந்திக் கிடக்கிறார்கள். துக்க வீட்டில் பொங்கல் கொண்டாடுவதுபோல இந்த சமயத்தில் பொங்கல் கொண்டாடி புதிய கட்சியைத் துவக்குவது சரிதானா?''

'' நியாயமான கேள்வி! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று புதிய கட்சியைத் தொடங்குவது என்று நான் எப்போதோ திட்ட மிட்டுவிட்டேன். இடையில் தான் கடலூர் பாதிப்புகள் நடந்து முடிந்துவிட்டன.

நான் நன்றாகத் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. புயல் பாதித்த பகுதிகளில் இரவும் பகலுமாக சுற்றினேன். அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் என் கையைப் பற்றிக்கொண்டு, 'ஆயி... யாருமே எங்களைக் கண்டுக்கலை. நீ பதவில இருந்திருந்தா, எல்லாரும் எங்களை வந்து பார்த்திருப்பாங்களே... எப்ப கட்சி ஆரம்பிக்கப்போற?’ என்று அழுதார்கள். எந்தக் கட்சியிலும் இல்லாததால், நிவாரணப் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான், கட்சியை ஆரம்பித்தேன். கடலூரில் மாநாடு போல் கூட்டம் கூட்டித்தான் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டேன். இந்த நேரத்தில் அத்தகைய கொண்டாட்டம் தேவை இல்லை என்பதால்தான் துவக்க நிகழ்ச்சியைக்கூட கூட்டம் சேர்க்காமல், சென்னையில் எளிமையாக நடத்தினேன். இது ஒரு சம்பிரதாயத் தொடக்கம்தான். உண்மையான தொடக்க விழா பிரமாண்டமாக இன்னும் சில காலம் கழித்து நடக்கும்!''
'' இப்போதாவது சொல்லுங்கள். பா.ம.க-வில் உங்களுக்கும் தலைமைக்கும் என்ன பிரச்னை?''

'' கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடிக்கடி என் பெயரை உச்சரித்ததால், என் தலைமைக்கு எரிச்சல். மழைநீர் சேமிப்புத் திட்டம் தொடங்கி மணல் குவாரிகளை அரசுடமை ஆக்க வேண்டும் என்பது வரை நான் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி னார்கள். அதுவும் எரிச்சல். ஒரு கட்டத்தில், 'சட்ட சபையில் நீ பேசக்கூடாது; பத்திரிகைகளுக்கும் பேட்டி தரக்கூடாது’ என்று டாக்டர் ராமதாஸ் உத்தரவு போட்டார்.

ஈழ விவகாரத்தில் வாயைத் திறக்கக் கூடாது என்றார்கள். முத்துக்குமார், செங்கொடி தோழர்களின் இறுதி ஊர்வலங்களுக்கு செல்லத் தடை விதித் தார்கள். மீறிச் சென்றேன். ஈழத் தமிழருக்காக சமீபத்தில் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்தேன். அன்புமணி போன் செய்து, 'ஐயா கோவிச்சுக்கிறார். நீ போகாதே; வடிவேல் ராவணனை அனுப்பு’ என்றார்.

இதை எல்லாம் கட்சியில் இருக்கும்போது அவரிடமே கேட்டேன். அந்த ஆத்திரம் அவருக்கு. கடலூர் நிர்வாகக் குழு கூட்டத்திலும் இதைத்தான் பேசினேன். இது, ராமதாஸுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் என்னைத் திட்டமிட்டு வெளியேற் றினார். ஜி.கே.மணியைப் போன்ற ஜால்ராக்கள்தான் ராமதாஸுக்குப் பிடிக்கும். என்னைப் போன்ற சுய சிந்தனையாளர்களைப் பிடிக்காது!''

'' சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று சொன்னீர்கள். அப்படி என்றால், உண்மையான குற்றவாளிகள் யார்?''

'' உண்மையான குற்றவாளிகள் யார் என்பது ஊருக்கே தெரியும். தனக்கு எதிராகப் பேசினால் கட்சியின் நிர்வாகிகளை விட்டே 'அவனைக் கவனி யுங்கள்’ என்று உத்தரவிட்டவர்களை, இப்போது தமிழகத்தில் இருக்கும் நேர்மையான சி.பி.ஐ. அதிகாரிகள் வெகு விரைவில் கண்டுபிடித்து சட்டத் தின் முன் நிறுத்துவார்கள்!''

வட மாவட்டம் மீண்டும் ஒரு கொந்தளிப்பில் குலுங்கப்போகும் அறிகுறிகள் தெரிகின்றன!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

thanks vikatn +saravanakumar vilupuram

கருத்துகள் இல்லை: