வியாழன், 19 ஜனவரி, 2012

ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்!

நந்தன் நீலகேணி
இந்த செய்தித்தாள் நடத்திய விசாரணை ஒன்றில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் தனியார் சேர்க்கை ஏஜன்சிகளிடம் கொடுக்கும் முக்கியமான உடற்கூறு மற்றும் மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அச்சங்களை உறுதி செய்வதாக இது இருக்கிறது.
இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள சேர்க்கை ஏஜன்சிகள், இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் (UIDAI) அமைத்துள்ள விதிமுறைகளை மீறி, சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள்.
இந்த துணை முகவர்கள் யார் யார் என்பது பற்றி UIDAIக்கு எந்த தகவலும் இல்லை. இத்தகைய சட்ட விரோதமான நிறுவனங்கள் மூலம் தகவல் திரட்டப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. இந்த நாளிதழ் தொடர்பு கொண்ட பல சேர்க்கை நிறுவனங்கள் பணியை ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு வெளிப்பணியாக கொடுத்திருப்பதாகவோ அல்லது அத்தகைய முகவர்களைத் தேடுவதாகவோ தெரிவித்தன.
இந்த நிருபர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் விற்பனை நிறுவனம் என்ற போர்வையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சேர்க்கை ஏஜன்சியை தொடர்பு கொண்ட போது, மும்பையில் ஆதார் எண்களை திரட்டுவதற்கான முகமை தருவதாச் சொன்னார்கள். அவருக்கு மராத்தி மொழி அறிவு சுத்தமாக இல்லை என்றும், தகவல் திரட்டும் பணியில் முன் அனுபவம் இல்லை என்றும் தெரிவித்த பிறகு கூட, சுமார் 50 லட்ச ரூபாய்க்கு 30 எந்திரங்களை வழங்குவதாகவும், வசதிப்பட்ட சமயத்தில் மும்பையில் பணிகளை ஆரம்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் பல ஏஜன்சிகள் பணியை வெளியில் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலர் UIDAI வகுத்துள்ள முறைக்குள் செயல்படுவது எப்படி என்று தெரியவில்லை என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார்கள்.
“அலங்கித் பின்செக், ஆதார் சேர்க்கை பணியை பிற தனியார் அமைப்புகளுக்கு வெளிப் பணியாக கொடுத்தது தொடர்பாக பெங்களூரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனம், சண்டிகரில் சேர்க்கைப் பணிகளை ஒரு தனிநபருக்கு துணை ஒப்பந்த பணியாக வழங்கியிருக்கிறது. அந்த நபர் இன்னும் பலருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். மைசூரில் பொய்யான அடையாளங்களை உருவாக்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூப்ளியில் ஆதார் தகவல் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று மடிக்கணினிகள் திருடு போயின,” என்று மேத்தியூ பிலிப் என்ற சமூக ஆர்வலர் சொல்கிறார். அவர் பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆதார் திட்டம் சட்ட விரோதமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார். அலங்கித்தின் கம்பெனி செயலர் வினய் சாவ்லா, தகவல் திரட்டும் பணி வெளியில் கொடுக்கப்பட்டதை ஒத்துக் கொண்டார். ஆனால், UIDAIயிடமிருந்து வழிமுறைகள் வந்த பிறகு அத்தகைய வழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.
“UIDA இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஒப்பந்த பணி கொடுத்த வழிமுறையே பெரும் சந்தேகத்துக்குரியது. டெண்டர் முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. சேர்க்கக் கோரி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு உடற்கூறு தகவல் சேகரிப்பு அல்லது பெரும் அளவில் தகவல் சேகரிப்பில் முன் அனுபவம் கிடையாது. ஆதார் எண்ணை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையோ தரவுகளையோ சரிபார்க்கும் நிபுணத்துவம் அவர்கள் வேலைக்கு அமர்த்தும் பணியாளர்களுக்கு கிடையாது.” என்று சொல்கிறார் வழக்கறிஞரும் UIDக்கு எதிரான ஆர்வலருமான பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பப்பர்ஜங்.
UIDAI அங்கீகரித்துள்ள நிறுவனங்களின் பட்டியல் வெங்கடேஷின் கவலைகளை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. 2010ல் அசாமில் ஆதார் தகவல்களை திரட்டும் ஒப்பந்தப் புள்ளி பாருநகர் டீ எஸ்டேட்ஸ் என்ற தேயிலைத் தோட்டத்துக்கு வழங்கப்பட்டது. பீகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தகவல்கள் திரட்டுவதற்கான அங்கீகாரம் சென்னையைச் சேர்ந்த ஹெர்ம்ஸ் I டிக்கெட்ஸ் என்ற பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு கணினி விற்பனை மற்றும் பராமரிப்புக் கடை, அச்சகங்கள், கல்வி மற்றும் தரும நிறுவனங்கள், தெருவணிகர்களின் தேசிய கூட்டமைப்பு, சர்க்கரை ஆலை, காப்பீட்டு நிறுவனங்கள், BPOக்கள், நிதி நிறுவனங்கள், நிலக்கரி மற்றும் உருக்கு நிறுவனங்கள், கட்டிட நிறுவனங்கள் போன்றவை இப்போது சேர்க்கை ஏஜன்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அடங்கும்.
பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கை ஏஜன்சிகளுக்கு அவர்களுக்குத் தெரியாத மொழி பேசப்படும் மாநிலங்களில் உடற்கூறியல், வாழ்வியல் மற்றும் தனிநபர் தகவல்களை திரட்ட ஒப்பந்த புள்ளிகள் வழங்கபட்டிருந்தன. அந்த மாநிலங்களின் உள்ளூர் நிலைமைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி கல்வி சங்கம் என்ற கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தகவல் திரட்டும் பணியை பெற்றுள்ளது. ஆந்திர பிரேதசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினா டெக்னாலஜிஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர்க்கை நடத்த அங்கீகரிக்கப்பட்டிருந்க்கிறது, ஆனால் ஆந்திராவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த தவறான முறை பதிவு ஏஜன்சிகள் உள்ளூர் ஏஜன்டுகளை பணிக்கு அமர்த்தியதற்கு காரணமாக இருக்கிறது. “ஒரு நிறுவனம் அவ்வளவு பெரிய அளவிலான தரவுகளை கையாளுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பணியை வெளியில் கொடுக்காமல் நாங்கள் சமாளித்தாலும், குறிப்பிட்ட பகுதியில் பணியாளர்களை வழங்குவதற்கு உள்ளூர் மனிதவள ஏஜன்சிகளைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது” என்று சேர்க்கை பதிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவர், பெயர் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொன்னார்.
UIDAI தலைவர் நந்தன் நீலகேனி மற்றும் பதிவுகளுக்கான உதவி இயக்குனர் அலின் காச்சி ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அச்சுக்குப் போகும் வரை பதில் கிடைக்கவில்லை. UIDAI செய்தித் தொடர்பாளர் அவதேஷ் குமார் கருத்து சொல்வதற்கு கிடைக்கவில்லை.
__________________________________________
ஆங்கில மூலம் : உங்கள் ஆதார் தகவல்களை திரட்டுவது யார்?

-          நன்றி: சன்டே கார்டியன்
-          தமிழாக்கம்: செழியன்
________________________________

கருத்துகள் இல்லை: