சனி, 21 ஜனவரி, 2012

சசி ஜெயா பங்கு பிரிப்பு இலகுவானதல்ல

''சசிகலா சும்மா இருந்தாலும் எம்.நடராஜனும் கருணாநிதியும் அவரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல!'' என்று சொல்லிச் சிரித்தபடியே நம் முன்னால் ஆஜரானார் கழுகார்.
கழுகாருக்கு இடைஞ்சல் தராமல் அமைதி காத்தோம்.
'' 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த சசிகலா அண்டு கோ-வுக்கு மேலும் வலிதான் ஏற்படப்போகிறது. ஆட்சி மேலிடத்துக்குக் கோபத்தை ஏற்படுத்திய விவகாரங்கள் என்று இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று எம்.நடராஜனின் தஞ்சாவூர் பேச்சு. இன்னொன்று கருணாநிதியின் முரசொலி எழுத்து!'' என்று சொல்லி சிறிது இடை வெளிவிட்டுத் தொடர்ந்தார் கழுகார்!
''நடராஜனின் தஞ்சாவூர் விழாவைக் கண்கொத்திப் பாம்பாக உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித் தார்கள். வெளிப்படையாக ஜெயலலிதாவை அவர் அட்டாக் பண்ணவில்லை என்றாலும், 'காத்திருங்கள். நேரம் வரும்போது செயல்படுவேன்’ என்று சொல்லி இருப்பது ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலைக் கிளப்பி உள்ளது!''
''அதற்கு இணையாகத் தி.மு.க.வையும்தானே நடராஜன் அட்டாக் செய்தார்?''
''அதை ஒருவிதமான தந்திரம் என்றும் சொல்கிறார்கள். 'கருணாநிதியை விமர்சிப்பதன் மூலமாக ஆளும் கட்சியை கூல் பண்ணுவதற்கான முயற்சி’ என்றும் சிலர் சொல்கிறார்கள். 'பொதுவாக நடராஜன் ஆக்ரோஷமாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கும் குணம் கொண்டவர். அவர் இந்த தடவை அடக்கித்தான் வாசித்தார்’ என்று சிலர் சொன்னாலும், அவரது பேச்சு ஆட்சியாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது!''

''அடுத்து கருணாநிதி எழுதியதைச் சொல்லும்!''

''கடந்த 17-ம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்த நாளையட்டி ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கருணாநிதியைத்தான் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தார். அதற்கு கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையைத் தன் பதிலாகக் கருணாநிதி வெளியிட்டார். அதில், சசிகலாவை வலிந்து புகழும் வார்த்தைகள் வருகின்றன. 'என் நாடு, என் மாநிலம், என் இனம் என்று பாடுபட்டுக்கொண்டு இருப்பவன்தான் கருணாநிதி. இந்த உண்மை, குடும்பத்தைக் குலைத்து, கணவனையும் மனைவியையும் குடும்பம் நடத்த விடாமல் பிரித்து, 'எனக்கு எல்லாமே உடன்பிறவாத் தோழிதான்’ என்று அறிக்கையும் வெளியிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு இருந்து விட்டு, வாழ்வு வந்ததும் விரட்டி அடிக்கும் சுயநலமி நான் இல்லை!’ என்று கருணாநிதி எழுதியது ஆட்சியாளர்களின் கோபத்தைத் தூண்டி உள்ளதாம். இதனுடைய ரியாக்ஷன் மிக மோசமாக இருக்கலாம்!''
''மோசமாக என்றால்..?''
''அரெஸ்ட் படலம்தான் ஆரம்பம் ஆகப்போகிறதாம்! சசிகலாவின் தம்பி திவாகரன், ராவணன், கலியபெருமாள் ஆகிய மூவரின் செயல்​பாடுகள் குறித்து அலச ஆரம்பித்து உள்ளார்கள் போலீஸ். அநேகமாக சிக்கப்போகும் முதல் மூன்று பேராக இவர்கள் இருக்கலாம்!''

''அப்படியா?''
''சென்னை புறநகர், ரெட்ஹில்ஸ், ஸ்ரீபெரும்​புதூர் எல்லைகளில் உள்ள சில தனியாருக்​குச் சொந்தமான குடோன்களில், பணப் புதையல் மீட்பு நடவடிக்கையைப் போலீஸார் தொடங்கி விட்டனர்.

டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினரால், 'திருச்சி அய்யா' என்று அழைக்கப்பட்ட இன்ஜினியர் கலியபெருமாள், 'பாஸ்' என்ற மன்னார்குடி திவாகரன், கொங்கு மண்டலக் கட்சிக்காரர்களால் 'ராணா அண்ணா' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராவணன் ஆகிய மும்மூர்த்திகளின் பூசாரிகளால் கடந்த ஆறு மாதங்களில் பாதிப்புக்கு உள்ளான கட்சி நிர்வாகிகள் சொன்ன தகவல்களை வைத்து இந்த ரெய்டுகள் தொடங்கி உள்ளன. இவர்கள் எந்தெந்த அதிகாரிகளை மிரட்டினார்கள்? கட்சி நிர்வாகிகளிடம் என்ன மாதிரியான வசூல்களைப் பார்த்தார்கள்? நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்கிற கோணங்களில் எல்லாம் விசாரித்து பக்காவாக ரிப்போர்ட் தயார் செய்துவிட்டது போலீஸ். இந்த ரிப்போர்ட்டை ஆட்சி மேலிடம் பார்த்து பச்சைக் கொடி காட்டியதும், ஆக்ஷனில் இறங்கும் போலீஸ். அதிரடி நடவடிக்கை எந்த வகையில் எடுக்கப்படும்? யார் புகார் கொடுப்பார்கள்? என்பது இன்னமும் சஸ்பென்ஸ்!''

''மேலும் சொல்லும்!''

'' தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மணல் எடுக்கும் உரிமையைக் கவனித்து வந்த மணமேல்குடி பிரமுகரின் ஜபர்தஸ்தைப் பார்த்து மந்திரிகளே பொறாமைப்பட்டார்களாம். களையெடுப்பு வைபத்தின் தொடர்ச்சியாக, இந்தப் பிரமுகரை சென்னைக்கு அழைத்து வந்து மண்டகப்படி(!) நடத்தப்பட்டதாம். மன்னார்குடிக்கு எவ்வளவு கப்பம் கட்டினார் என்கிற விவரங்கள் கேட்கப்பட்டதோடு, கடந்த சில மாதங்களில் இவர் பங்குக்கு சம்பாதித்த கோடிகள் பிடுங்கப்பட்டு, வெறும் மனிதராக விரட்டி அடிக்கப்பட்டாராம். மணல் உரிமையும் பறிபோனது. மன்னார்குடியில் இருந்து செல்லும் முக்கிய ரூட்டுகளில் ஒடும் தனியார் பஸ் நிர்வாகத்தில் சைலன்ட் பார்ட்னராக யாரையாவது சேர்த்திருக்கிறார்களா? புதுக்கோட்டையைச் சேர்ந்த பஸ் பிரமுகர் இடைத்தரகராகச் செயல்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. திவாகரனின் பங்களா, காலேஜ், ரைஸ் மில்... இங்கெல்லாம் வேலை பார்ப்பவர்களில் பலர், திருமயம் வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாம். அவர்களுக்குத் திருமயத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் பாதி சம்பளம் தருகிறாராம். செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். இதெல்லாம் ஏன்? இவருக்கு என்ன முக்கியத்துவம் என்று திருமயத்தில் விசாரணை நடக்கிறது!''

''நீர் சொல்வதைப் பார்த்தால், மாதக்கணக்கில் விசாரணை செய்ய வேண்டும் போல!''

''கலியபெருமாள், சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு கிரிவலம் போனார். தற்போது திருச்சியில்தான் இருக்கிறார். ஒன்பது மாவட்டங்களின் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை) கட்சி, ஆட்சி நிர்வாகத்தை தனது செல்போன் மூலம் இயக்கி வந்தவர் கலியபெருமாள். கடந்த ஒரு வருட காலமாக திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் கூடுதல் பொறுப்பாக பகுதிச் செயலாளர் ஒருவரிடமே விட்டிருக்கிறாராம். இதுமாதிரி புதுகை, திருச்சி மாவட்டங்களில் கட்சி ரீதியாக மட்டம் தட்டப்பட்ட பிரமுகர்கள் தற்போது கலியபெருமாளின் பினாமிகள் ஆட்டம் பற்றி கட்சி மேலிடத்திடம் வீடியோ - ஆடியோ ஆதாரங்களைக் கொடுத்து வருகிறார்கள். திருச்சி ஏர்போர்ட் அருகில் 15 ஏக்கர் நிலம் பினாமி பெயரில் விலைக்கு வாங்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மூன்றெழுத்து அ.தி.மு.க. வி.ஐ.பி. சட்ட மீறலில் ஈடுபட்டாரா? என்று வருவாய்த் துறையினர் குடைகிறார்கள். இந்த வி.ஐ.பி-யின் அணுகுமுறை பிடிக்காத உள்ளூர் கட்சிக்காரர்கள், போயஸ் கார்டனுக்கு அவரின் ஜாதகத்தை ஃபேக்ஸில் அனுப்பி வைத்தனர். அதில், மத்திய அரசு தொடர்புடைய நிறுவனத்தில் சிறிய அளவில் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்த 'கன்'னானவர் தற்போது பல கோடி ரூபாய் கான்ட்ராக்டராக மாறி இருக்கிறார் என்பது உள்ளிட்ட விவரங்களும் இருக்கிறதாம். இதைத்தவிர, திருச்சியில் திருமண மண்டபம், தியேட்டர் என சமீபத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களின் பராமரிப்புகளை திருச்சி மாநகராட்சியில் இருக்கும் ஒரு பிரமுகர் கவனிக்கிறாராம். இந்தச் சொத்துகள் எப்போது? யாரால்? எப்படிக் கைமாறின என்கிற விஷயங்கள் பத்திரப்பதிவு துறையினரால் அலசப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கைதுக்கான காரணமாக அமையும்!''

''ராவணன்?''

''இவரை சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தாக கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள் ஸ்பெஷல் கவனிப்புக்குப் பிறகு சில நாட்கள் ரெஸ்ட் எடுக்கப் போயிருக்கலாம் என்கிறார்கள். வெளியில் அதிகம் நடமாட்டம் இல்லை. கோவை ஏரியாவை மையமாக வைத்து ஐந்து மாநிலங்களுக்கான பிரபல கம்பெனி ஒன்றின் டீலர்ஷிப்பை இவரும் கோட்டைப் பிரதிநிதி ஒருவரும் சிலரை மிரட்டி வாங்கியதாகப் புகார்கள் கிளம்பி உள்ளன. அதுபற்றி ரகசிய விசாரணை நடக்கிறது. அதேபோல், நேர்மையாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் பிசினஸ் பிரமுகர்களிடம் மறைமுகமாக வசூல் வேட்டைக்குப் பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுக்க உள்ள கோயில் நிலங்களைப் பராமரிக்கும் துறையான அறநிலையத் துறை அமைச்சர் பதவியை ஆனந்தனுக்கு, ராவணன் வாங்கிக்கொடுத்தாரா? அதன் பின்னணியில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 100 வருடங்களுக்கு முன்பு கோயில் நிலங்களாக இருந்தவை பல கைமாறி தற்போது வர்த்தகக் கட்டடங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. எனவே, நிலத்தின் மதிப்பு எங்கோ எகிறிவிட்டது. இந்த நிலையில், அந்த நிலங்களின் பூர்வீக ஜாதகங்கள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதாம். அரசு நிலம் மீட்பு என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், இந்தப் பேனரில் வி.ஐ.பி. சிலருக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கி சலுகை காட்ட பேரம் நடந்ததா என்று உளவுத்துறையினர் விசாரிக்கிறார்கள். சொத்து விற்பது, கைமாறுவது, பெயர் மாற்றம் செய்வது என்று யாராவது பத்திரப்பதிவு ஆபீஸுக்கு வந்தால், எதையும் செய்ய வேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்றும் அலுவலர்களிடம் விசாரிக்கிறார்கள்.''

''ரெய்டுகளுக்குப் பிறகும் இவ்வளவு சந்தேகங்கள் இருக்கின்றனவா?''

''ராவணனின் வீட்டில் அன்-அஃபிஷியலாக நடந்த ரெய்டில் சில விவகாரங்கள் சிக்கி இருக்கிறதாம். சென்னை அண்ணா நகரில் அபார்ட் மென்ட் ஒன்று கைமாறி இருக்கிறதா? அதற்குப் பணம் வந்த ரிஷிமூலம் என்ன? விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் பவனி வந்தது எப்படி? முறைப்படி அனுமதி வாங்கி அந்தக் கார் வந்ததா என்று தீவிர விசாரணை நடக்கிறது. அதன் அடிப்படையில், மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் இந்த தகவல்களை தமிழக உளவுத்துறை 'பாஸ்' செய்துள்ளது. அவர்கள் அதை மேற்கொண்டு விசாரிக்கக்கூடும். அதே நேரம், கொங்கு மண்டலக் கோட்டைப் பிரதிநிதி ஒருவரின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி அதிகமாம். ஆனால், அவரிடம் எதுவுமே இல்லாத மாதிரிக் காட்டிக்கொள்வாராம். அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாராபுரத்தில் குடியிருக்கிறாராம். அவரின் பெயரில் பழனி அருகே தோப்பு, நிலங்களை விலைக்கு வாங்கி உள்ளார்களாம். இதை மோப்பம் பிடித்து விட்டது உளவுத்துறை.''

''தலை சுத்துதே?''

''இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும் போது இன்னும் அதிகமாகச் சுத்தும்'' என்ற கழுகாரி டம் அமைச்சரவை மாற்றம் பற்றிக் கேட்டோம்.

''அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகிய இருவருக்குமான நடவடிக்கை என்று இதனைச் சொல்கிறார்கள். வணிகவரித் துறையைக் கையில் வைத்திருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தொழில் துறையை வைத்திருந்த வேலுமணியும் தங்கள் துறையை 'சந்தேகத்துக்கு இடம் அளிக்காத வகையில்’ கவனிக்கவில்லை என்று ஜெயலலி தாவுக்கு வந்த தகவலை அடுத்து, இந்த மாற்றங்கள் நடந்துள்ளன. நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி எல்லா மந்திரிகளுக்கும் திருந்திக்கொள்ள டைம் கொடுக்கிறார் முதல்வர். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் யார், தவற விட்டவர்கள் யார் என்பது அடுத்த மாதம் தெரியும்!'' என சொல்லிய கழுகார் விட்டார் ஜூட்!

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்
thanks sithappa chettiar karaikudi

கருத்துகள் இல்லை: