புதன், 18 ஜனவரி, 2012

காணும் பொங்கலை கொண்டாட குவிந்த கூட்டம் – கண்காணிப்பு தீவிரம்

சென்னை : காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரீனா கடற்கரை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை, சிறுவர் பூங்கா போன்ற சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் சுற்றுலா மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் நான்காம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தோடு அனைவரும் உறவினர்கள் வீட்டுக்கு சென்று ஒருவரை ஒருவர் கண்டு வாழ்த்துவது இந்த நாளின் சிறப்பாகும். சகோதரிகள் தங்களின் உடன்பிறந்த சகோதரர்களுக்கு புத்தாடைகள் எடுத்து கொடுத்து வாழ்த்துவது வழக்கம். உணவுகளை தயாரித்துக் கொண்டு, சுற்றுலா பகுதிகளுக்குச் சென்று மகிழ்வதும் இந்த நாளின் சிறப்பம்சமாகும்.
மெரீனாவில் மக்கள் கூட்டம்
சென்னையில் காலை முதலே மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் காணும் பொங்கலை கொண்டாட குவிந்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை முழுவதும் சவுக்குக் கட்டைகளால் வேலி அடைக்கப்பட்டுள்ளது. வேலியைத் தாண்டி யாரும் கடலுக்குள் செல்லாதபடி அவர்கள் கண்காணித்து வருகின்றனர். அதோடு குதிரைப்படை போலீசாரும் அங்கும் இங்கும் சென்று கடலுக்குள் மக்கள் யாரும் இறங்காதபடி ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

கடலுக்குள் யாராவது சென்றால் அவர்களை இழுத்து வருவதற்கும், கடலில் விழுந்து தத்தளிப்பவர்களை மீட்பதற்கும் நன்றாக நீச்சல் தெரிந்தவர்களை மிதவைப் படகுகளுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களும் கடற்கரைகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடற்கரையில் பல கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாருக்கென்று தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகளை, பெரியவர்களை கண்டுபிடித்துத் தருவதற்கு தனி போலீஸ் படை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் பாஸ்கர், புகழேந்தி தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சென்னை கடற்கரையில் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஈவ் டீசிங் கூடாது

இந்த கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, கொள்ளை, பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடும். எனவே அப்படிப்பட்டவர்களை கண்காணிப்பதற்கு சாதாரண உடையில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களை ஈவ் டீசிங் செய்வதைத் தடுப்பதற்காக மப்டியில் பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வண்டலூர் பூங்கா

சென்னை நகருக்கு அருகில் உள்ள மிகமுக்கிய சுற்றுலா மையங்களான வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. உற்சாகத்துடன் விளையாடியும், விருந்துண்டும் காணும் பொங்கலை கொண்டாடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: