வெள்ளி, 20 ஜனவரி, 2012

பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் காங்கிரஸ் மறந்தது

பால்-தாக்கரே
கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெளியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.
விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் தோன்றியக் கலவரங்களில் பெரும்பாலானவற்றிற்கு தாக்கரே மீதும், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியர் மீதும் பதிவு செய்யப் பட்டது.  ஆனால் பெரும்பாலானவை நடவடிக்கையின்றி நின்று விட்டது.  கலவரம் தோன்றுவதற்கும், தோன்றிய பின்னரும் பல வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153A யின் கீழ் விரோதத்தை தூண்டுவது என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் சில மட்டும் வந்திருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட போராட்டம் மற்றும் மேல் முறையீடுகள் போன்றவற்றிற்கு பிறகு சில வழக்குகளின் விவரங்களை 2011-ல் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுருங்க சொல்ல வேண்டுமென்றால் 1995 முதல் 1999 வரை சிவசேனா, பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த போதும், அதற்கு பிறகு மூன்று முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் தாக்கரே மீதான குற்ற வழக்கை கொண்டு செல்வதில் எந்த வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. வழக்குகள் முடிக்கப்படவுமில்லை, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய அரசின் அனுமதி கோரப்படவுமில்லை.  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான முடிவுகள் குறித்த விபரங்கள் சமீபத்தில் வெளியான மீனாமேனன் என்பவரின் மும்பை வன்முறை மற்றும் அதற்கு பின்னர்: (நாள்பட்ட உண்மைகள் மற்றும் ஒத்திசைவு) என்ற புத்தகத்திலிருந்து திரட்டப்பட்டது.
சுருக்கம்: டிசம்பர் 2004-ல் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது பதிவான காவல் துறை வழக்குகள் தொடர்பான நகல்கள், அவற்றின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை காவல்துறையிடம் கோரி மனுச்செய்தேன்.  நான் மேலும் அந்த வழக்குகளின் நிலை, அவற்றில் ஏதேனும் வாபஸ் பெறப்பட்டிருந்தால் அது குறித்த ஆவணங்களின் நகல்களையும் கோரியிருந்தேன்.  மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து 19 மே 2007 நாளிட்ட பதிலின் வாயிலாக, காவல்துறை ஆணையர் அலுவலக பொதுத் தகவல் அலுவலா், சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரே மற்றும் அதன் கட்சி பத்திரிக்கை சாம்னாவின் ஆசிரியர் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட அக்டோபர் 1992 முதல் டிசம்பர் 1993 வரையிலான காலத்திற்கு தொடர்புடைய 8 வழக்குகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்த வழக்குகள் 20 ஜனவரி 1993-லும், 1 அக்டோபர் 1993-லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை 30 ஜூலை 1993-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 4 வழக்குகளும் தாதர் நீதிமன்றத்திலிருந்து பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இரண்டு வழக்குகளில், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இரண்டு வழக்குகள் சாட்சியம் போதவில்லை என முடிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மேல் எந்த விவரமும் காணப்படவில்லை. எனது முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால் 2வது மேல் முறையீடு தலைமை தகவல் ஆணையரால் 30 நவம்பர் 2009-ல் விசாரிக்கப்பட்டது. திரு ஜோஷி தனது 8 அக்டோபர் 2010 நாளிட்ட உத்திரவில் பின்வருமாறு உத்திரவிட்டார்.
திருமதி மேனன் அவர்களின் இதே பொருள் குறித் மேல் முறையிட்டின் மீது 17/04/2007-ல் ஆணையம் தெரிவித்த உத்திரவின் தொடர்ச்சியாக, பால் தாக்கரே மீதான வழக்கில் எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பிரிவு 8(1)(g)ன் கீழ் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.  எனவே இந்த மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பையும் விசாரித்தபின் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் ஏதும் சொல்லியிருப்பின்,அது தொடர்பாக அரசால் முன்வைக்கப்பட்ட வேண்டுகை வாசகங்கள், மற்றும் அதன் மீது நீதிமன்றம் தெரிவித்த முடிவு ஆகியவற்றின் முடிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.
எனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கான பதில்கள் 18  ஜனவரி 2011 -லிருந்து வரத் துவங்கியது.  முதல் தவணையாக 18 ஜனவரி 2011-ல் வந்த பதிலில் தாதர், மாஹிம், மற்றும் சிவாஜி பார்க் காவல்நிலையம் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டது.  தாதர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு
153A-ன் கீழ் குழுக்களுக்கிடையே விரோதம் உருவாக்குவது, வெறியூட்டும் எழுத்துக்கள் எழுதுவது மற்றும் இதர பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 3 வழக்குகள் மூடப்பட்டுள்ளது.
இரண்டு 31 டிசம்பர் 1991-லும், ஒன்று 26 டிசம்பர் 1991-லும் மூடப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் 18 அக்டோபர் 1996-ல் இ.த.ச.153A ன் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளில் 153A ன் கீழான வழக்குகளை குற்றவியல் நடைமுறை தொகுப்பின் பிரிவு 468(2)(c)ஐ குறிப்பிட்டு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது (அதாவது காலவரையரை தாண்டி நடவடிக்கை எடுக்கக் கூடாது – 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை அந்தந்த தண்டனையை பொறுத்தது). மேலும் 3 வழக்குகளில் நீதிமன்றத்தால் சாட்சியம் ஏதுமில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டதால் மூடி முடிக்கப்பட்டது.  ஒரு வழக்கில் ‘C’ தொகுப்பு புலனாய்வு அதிகாரியால் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் நிலுவையிலுள்ளது. மேலும் 153A ன் கீழான ஒரு வழக்கில் தாக்கரேயை கைது செய்வதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் நிலுவையிலுள்ளது.
மாஹிம் காவல் நிலையத்தில் மூன்று பழைய வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒரு வழக்கில் 15 நவம்பர் 1990-ல் தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு 1984-ம் வருடத்திய பழைய வழக்கில் 153A ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஆனால் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பழையதாகவும், கிழிந்தும், தெளிவில்லாமலும் உள்ளது.  1991-ம் ஆண்டிலான மற்றொரு வழக்கிலும் இ.த.ச.153A ன் கீழாகவும், இன்ன பிற பிரிவுகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் அமர்வு நீதிமன்றம், பாந்த்ராவிற்கு 27 செப்டம்பர் 1998-ல் மாற்றப்பட்டுள்ளது.  6 ஏப்ரல் 2004-ல் மாநில அரசிடமிருந்து வந்த உத்திரவின் அடிப்படையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  வாபஸ்க்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  2002-ல் பதியப்பட்ட பிரிவு 153A ன் கீழான ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.  வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது.  மற்றொரு அவமதிப்பு தொடர்பான 2004-ம் ஆண்டு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற நடவடிக்கையில் இருந்த போதும் குற்றம் சாட்டப்பட்ட தாக்கரே இன்னும் கைது செய்யப்படவில்லை.
காம்தேவி காவல் நிலையத்தில் அவர்களின் 30 டிசம்பர் 2010 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது என்னவென்றால், அவர்களுக்கு 1984-ல் இ.த.ச.பிரிவுகள் 153A, 295A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், இந்த குற்றங்கள் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாக அது குறித்து தகவல் ஏதுமில்லை என்ற நிலையில் தகவல் எதுவும் தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு முன்பாகவும் தாக்கரே மீது பல வழக்குகள் பதிவுசெய்யப் பட்டிருந்த போதிலும் அவைகளின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்களின் படி, அதாவது காவல்துறை குற்றப்பிரிவு 3 உடைய 12 ஜனவரி 2011 நாளிட்ட கடிதத்தில் இரண்டு வழக்குகள் ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் 28 மார்ச் 1988ல் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு காவல்துறை குற்றவியல் பிரிவு 3ஐ இந்த வழக்குகள் தொடர்பான புலனாய்வு மேற்கொள்ள 30 மார்ச் 1988-ல் தெரிவிக்கப் பட்டுள்ளது.  புலனாய்வின்படி இ.த.ச.பிரிவு 153A, 153B மற்றும் 505(1)(c)ன் கீழான குற்றம் குறித்து ஏராளமான சாட்சியங்கள் உள்ளது எனவும், அதனால் காவல் ஆணையர் தனது 9 ஜூன் 1988 நாளிட்ட கடிதம் வாயிலாக அரசு உள் துறை செயலாளரிடம் நீதிமன்றத்தில் தாக்கரே மீது வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர், 3 பிப்ரவரி 1995ல் மற்றொரு கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி வேண்டிய கடிதம் மீது விரைவு முடிவு எடுக்க வேண்டியுள்ளார்.
13 ஏப்ரல் 2000-ல் கூடுதல் தலைமைச் செயலாளா், உள்துறை அனைத்து காவல் நிலையங்களிலும் தாக்கரே மீதுள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ள அனைத்து வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அரசிற்கு சமர்ப்பிக்க கேட்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க 25 ஏப்ரல் 2000-ல் குற்றப்பிரிவு 3ன் காவல் அதிகாரி திரு எம்.எம்.குல்கர்னி அனைத்து ஆவணங்களையும் சிறப்பு கிளை 1ன் முன்பாக சமா்ப்பித்துள்ளார்.  அதன் பிறகு இன்றுவரை எந்தவித அனுமதியும் அரசிடமிருந்து பெறப்படவில்லை என தகவல் அறியும் உரிமை மனுவிற்கான பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் அனுமதி பெறப்படாதவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தாக்கல் ஆகாது.  அவை நிலுவையில்தான் இருக்கும்.
(மேற்படி பகுதிகள் திருமதி மீனாமேனன் என்பவரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.  திருமதி மீனாமேனன் தி இந்து நாளிதழின் மும்பை பிரிவு துணை ஆசிரியர் என்பதுடன், மும்பை பத்திரிக்கை பிரிவிற்கு துணை தலைமையாளரும் ஆவார்)
_______________________________________________________
ஆங்கில மூலம் – திருமதி மீனா மேனன், தி இந்து
தமிழாக்கம்:  சித்ரகுப்தன்

கருத்துகள் இல்லை: